சினிமா செய்திகள்

சாராயக்கடை நடத்தும் அரசு ஏன் சினிமா தயாரிக்கக்கூடாது? : சீமான் கேள்வி

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜீவி-2. கடந்த 2௦19ல் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற ஜீவி படத்தின் இரண்டாம் பாகமாக  இது உருவாகி உள்ளது. முதல் பாகத்தை இயக்கிய வி.ஜே. கோபிநாத் இந்த இரண்டாம் பாகத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார்.

நாயகன் வெற்றி, நாயகி அஸ்வினி சந்திரசேகர், ரோகிணி, மைம் கோபி, கருணாகரன் மற்றும் ரமா என முதல் பாகத்தில் இடம்பெற்ற அனைத்து முக்கிய நட்சத்திரங்களும் இந்த இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளனர். ஒய்.ஜி.மகேந்திரன், நடிகர் நாசரின் சகோதரர் அஹமத், விஜே முபாசிர் உள்ளிட்ட ஒரு சில நடிகர்கள் இந்த இரண்டாம் பாகத்தில் இணைந்துள்ளனர்.

இந்தப்படத்திற்கு கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைக்க, பிரவீண் குமார் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை கே.எல்.பிரவீன் கவனித்துள்ளார். வரும் ஆகஸ்ட் 19-ஆம் தேதி ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படத்தின் பாடல்களை சீமான் வெளியிட, இயக்குனர் கே.பாக்யராஜ் பெற்றுக்கொண்டார்

அதனைத்தொடர்ந்து படத்தின் இயக்குனர் விஜே கோபிநாத் பேசும்போது, “ஜீவி முதல் பாகம் ரிலீசான அன்றே அந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மறுநாளே எனக்கு அடுத்த படத்திற்கான வாய்ப்பு கிடைத்தது. விஷ்ணு விஷாலை வைத்து படம் இயக்குவதாக முடிவாகி கொரோனா காலகட்டம் காரணமாக அது தள்ளிப்போனது. அந்தசமயத்தில். தயாரிப்பாளர் பிக் பிரிண்ட் கார்த்தி கொடுத்த உற்சாகம் காரணமாக உருவானதுதான் ஜீவி-2 படத்தின் கதை.

முதல் பாகத்திற்கு கதை உருவாக்குவதில் உறுதுணையாக இருந்த கதாசிரியர் பாபு தமிழ் தான் இயக்கும் படத்தின் வேலைகளில் பிஸியாக இருந்ததால் இந்த கதையை நானே 2 நாட்களில் உருவாக்கினேன். இந்த படத்தை தியேட்டர்களில் வெளியிடவில்லையே என்கிற வருத்தம் எனக்கு இருந்தது. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி  இந்த படத்தை ஓடிடியில் வெளியிட வேண்டியதன் அவசியம் குறித்து அரை மணி நேரம் விளக்கம் அளித்தார். அதன்பின் தான் எனக்கு மனம் நிறைவடைந்தது. இன்னும் உலக அளவில் அதிக பார்வையாளர்களை சென்றடையும் என்கிற மகிழ்ச்சியும் ஏற்பட்டது” என்று கூறினார்.

நாயகன் வெற்றி பேசும்போது, ‘ஆந்திராவில் நான் செல்லுமிடங்களில் பலர் என்னை அடையாளம் கண்டு கொண்டு பேசுகிறார்கள் என்றால் அதற்கு ஜீவி திரைப்படம் ஆஹா ஓடிடி தளம் மூலமாக தெலுங்கு மக்களை சென்றடைந்தது தான் காரணம். நிச்சயமாக இந்த நிறுவனத்தினர் இந்த இரண்டாம் பாகத்தையும் இன்னும் பிரமாதமாக கொண்டு சேர்ப்பார்கள்.. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மாநாடு போன்ற பிரம்மாண்டமான படத்தை தயாரித்துவிட்டு, ஜீவி-2 போன்ற சிறிய படத்தை தயாரிக்க வேண்டும் என்கிற அவசியமில்லை.. ஆனால் கதை மேல் கொண்ட நம்பிக்கை காரணமாக அவர் இந்த படத்தை தயாரித்துள்ளார். அவருக்கு என் நன்றி” என்றார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது, ‘தம்பி ராமையா இங்கு பேசியது போல அவர் படங்களில் நடிப்பதை குறைக்கக் கூடாது. அப்படி செய்தால் அவர் வீட்டு வாசலில் முற்றுகையிடுவோம்” என்று அன்புடன் எச்சரிக்கை விடுத்தார். மேலும் அவர் பேசும்போது, “ஆஹா ஓடிடி தளத்தை தமிழிலும் கொண்டுவர வேண்டுமென அவர்கள் நினைத்ததற்காகவே அவர்களை பாராட்டலாம். எல்லோருக்கும் பிரியாணி சாப்பிடத்தான் ஆசை. ஆனால் கூழ் தானே கிடைக்கிறது. தம்பி சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படம் தியேட்டர்களில் வெளியாக விட்டாலும் கூட ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தெலுங்கில் வெளியான கொண்டபெல்லம் என்கிற படத்தை ஓடிடி தளத்தில் தான் பார்த்தேன்.. அவ்வளவு நேர்த்தியான படம் தியேட்டர்களில் வெளியானதா என்று கூட தெரியாது. ஆனால் ஓடிடி தளத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதனால் இருக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

தம்பி சுரேஷ் காமாட்சி சினிமா மீது தீராத பற்று கொண்டவன். பணத்தை சம்பாதித்து வைத்திருக்கிறானோ இல்லையோ நல்ல நண்பர்களை சேர்த்து வைத்திருக்கிறான். அதில்தான் அவனது வண்டி ஓடுகிறது என்று நினைக்கிறேன். சிறிய முதலீட்டு படங்களுக்கு தியேட்டர்களில் இடம் கொடுக்க வேண்டும். தயாரிப்பாளர் வெள்ளப்பாண்டி, தன் மகன் என அறிமுகப்படுத்தாமல் ஒரு தகுதியான கலைஞனை தான் அறிமுகம் செய்திருக்கிறார். விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு கூட 10 கோடி, 20 கோடி என அரசுகள் போட்டி போட்டு பரிசு வழங்குகின்றனர். ஆனால் விருது வென்று வரும் படைப்பாளிகளுக்கு பாராமுகம் காட்டுகின்றன. சாராயக் கடைகளை அரசாங்கம் நடத்தும்போது ஏன் திரைப்படத்தையும் தயாரிக்கக் கூடாது.. நிச்சயமாக ஒருநாள் திரையுலகில் மறுமலர்ச்சி ஏற்படும்.. அந்த நாளும் வரத்தான் போகிறது” என்றார்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE