சஸ்பென்ஸ் – த்ரில்லர் விரும்பிகளுக்கு சரியான விருந்து : ‘இந்திரா’ விமர்சனம்!
நாயகன் இந்திரா (வசந்த் ரவி), ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர். குடி போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதால் பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார். இந்த மன உளைச்சலில், “இன்னும் கொஞ்சம் ஊத்து சுதி கொஞ்சம் ஏத்து”ங்கற மாதிரி ஓவர் குடிக்கு ஆளாகிறார். இவரது காதல் மனைவியான மெஹ்ரின் பிர்சாடா எவ்வளவோ சொல்லி பார்த்தும் வசந்த்ரவி திருந்தியபாடில்லை. கூடவே மேலதிகாரிகளின் அவமானத்திற்கு உள்ளாக கூடகொஞ்சம் குடிக்கிறார். விளைவு.. கண்பார்வையை இழக்கிறார்.
பட்டக்காலிலேயே படும் என்பதுபோல தனக்கு எல்லாமுமாக இருந்த மனைவி மெஹ்ரினும் கொலை செய்யப்பட, வசந்த் ரவியின் வாழ்வே இருளாகிறது. மனைவியை கொன்றவனை பழிவாங்க துடிக்கிறார். போலீஸ் கண்ணிலேயே மண்ணை தூவி திரியும் கொலைகாரன், கண் தெரியாத வசந்த்ரவியிடம் மட்டும் சிக்கிவிடுவானா என்ன? கொலைகாரன் யார்? வசந்த் ரவியின் அடுத்த மூவ் என்ன? கொலைக்கான காரணம் என்ன? என்ற சஸ்பென்ஸ் கேள்விகளுக்கு சரியான தீனி போடுவதே ‘இந்திரா’.
வழக்கம்போலவே சம்திங் ஸ்பெஷல் கதையில் தன்னை பொருத்திக்கொண்டுள்ளார் வசந்த் ரவி. குடி அடிமையாக அச்சு அசல் ‘குடி’யானவனகவே வாழ்ந்திருப்பவர் பார்வையிழந்தவராக நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். தமிழ் சினிமாவில், சிவாஜி, கமல், விக்ரம் மட்டுமே கண் பார்வையில்லாத கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். அந்த வரிசையில் தானும் இருக்கிறேன் என நிருபித்திருக்கும் வசந்த் ரவிக்கு வாழ்த்துகள்! சண்டை காட்சியிலும் அடித்து ஆடி ‘இந்திரா’ கேரக்டரில் நிமிர்ந்து நிற்கிறார்.
வசந்த் ரவியின் மனைவியாக மெஹ்ரின் பிர்சாடா அருமையான தேர்வு! காதல் கணவனின் நிலை கண்டு கலங்குவது, அவனை நல்வழிபடுத்த நடத்தும் போராட்டம் என உணர்வு மீட்டர்களை புரிந்துகொண்டு கதாபாத்திரத்துக்கு கச்சிதம் சேர்த்துள்ளார்.
வீட்டு வேலை செய்பவராக அனிகா, அழகு மட்டுமல்ல நடிப்பிலும் அசத்தியுள்ளார். இவரது காதலனாக நடித்திருப்பவரும் சிறப்பு. சீரியல் கொலைகாரனாக சுனில் பிரமாதம். சைகோ சிரிப்பு சிரிக்கும் அந்த காட்சியில் அட்டகாசம். போலீஸ் இன்ஸ்பெக்டராக கல்யாண் மாஸ்டர் மிரட்டல்!
த்ரில்லர் கதைக்கு பொருத்தமான ஒளிப்பதிவை கொடுத்து கவனிக்கவைக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரபு ராகவ். பின்னணி இசையில் அஜ்மல் தஹ்சீன் மிரட்டியிருக்கிறார். படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது பிரவீனின் எடிட்டிங்.
விறுவிறுப்பும் பரபரப்பும் குறையாத திரைக்கதையை நேர்த்தியான திரைமொழியாக்கியிருக்கும் சபரிஷ் நந்தாவின் இயக்கத்திற்கு சபாஷ்.
சஸ்பென்ஸ் – த்ரில்லர் விரும்பிகளுக்கு சரியான விருந்து வைக்கிறது இந்த ‘இந்திரா’!