நிகழ்வுகள்

’ஆட்டி’ பட விழாவில் லோகேஷ் கனகராஜை தாக்கிய சாட்டை துரைமுருகன்

லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆட்டி’. ‘மேதகு ; பாகம் 1’ மற்றும் ‘சல்லியர்கள்’ படத்தை இயக்கிய இயக்குநர் தி.கிட்டு இயக்கியுள்ள இந்த படத்தில் தயாரிப்பாளர் இசக்கி கார்வண்ணனே கதையின் நாயகனாக ஒரு காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்..

‘அயலி’ புகழ் அபி நட்சத்திரா கதாநாயகியாக நடிக்க, காதல் சுகுமார், சௌந்தர், பிரவீன் பழனிச்சாமி மற்றும் பல முக்கிய நடிகர்கள் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். எங்கள் குளத்தில் பெண்களே முதலானவர்கள் என்கிற கருத்தை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகியுள்ளது..

இந்தப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன், எழுத்தாளர் சுகா, தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான கசாலி, இயக்குனரும் நடிகருமான திருமுருகன், கார்ட்டூனிஸ்ட் பாலா ஆகியோர் கலந்து கொண்டு இப்படத்தின் டிரைலரை வெளியிட்டனர்.

இயக்குநர் தி.கிட்டு பேசும்போது,

“மேதகு திரைப்படத்தின் திரையிடலின் போது அண்ணன் இசக்கி கார்வண்ணனுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அப்போது இருந்து அவருடன் பயணித்து வருகிறேன். அப்படித்தான் இந்த படத்தை இயக்கும் வாய்ப்பை எனக்கு கொடுத்திருக்கிறார். என்னிடம் ஏதோ ஒன்று இருக்கிறது என்று மற்றவர்களுக்கு அடையாளப்படுத்தியது நாம் தமிழர் கட்சி தான். ஒருமுறை எனக்கு யாரேனும் உதவி செய்துவிட்டால் கூட சாகும் வரை அவர்களிடம் நன்றி மறக்க மாட்டேன். எங்கள் அனைவரையும் ஒருங்கிணைத்த செந்தமிழன் சீமான் அண்ணனுக்கு எப்போதும் நன்றியுடன் இருப்பேன். ஒரு ஊர் தலைவியோ அல்லது இல்ளை குடும்ப தலைவியோ அவளைத்தான் ஆட்டி என்று சொல்வார்கள். தமிழர்களுக்கு அதிகப்படியான பெண் குல தெய்வங்கள் இருக்கின்றன. அதற்கான காரணத்தை தேடிச் செல்லும்போது மிகப்பெரிய வரலாற்று உண்மை தெரிய வருகிறது.

இந்த குலதெய்வங்களை மையப்படுத்தி தான் இந்த படத்தை பண்ணியிருக்கிறோம். நான் குலதெய்வ வழிபாட்டில் அதிக ஈடுபாடு உள்ளவன். இந்த படம் ஆரம்பித்ததிலிருந்து அடிக்கடி கோவிலுக்கு சென்று வருகிறேன். முதலில் பெண் தெய்வங்களை வழிபட்டு விட்டு, தான் ஆண் தெய்வங்களுக்கு செல்வோம். இது எங்களது வழிபாட்டு முறை. இப்போது வரை குலதெய்வங்களின் அருளால் நல்லபடியாக போய்க்கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு அண்ணன் சீமான் வருவாரா, பிசியாக இருக்கிறாரே என்று ஒரு சந்தேகம் ஏற்பட்டபோது அவர் நிச்சயம் வருவார் என சாமியின் குரல் கேட்டது. சொன்னாலும் செல்லாவிட்டாலும் எங்கள் இனத்திற்கு அவர் தான் கருப்பு. வேல் கம்பு வைத்திருக்கிற கருப்பு கிடையாது.. அரிவாள் வைத்திருக்கிற கருப்பு.. வழக்கம்போல இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடித்துவிட்டு படத்தை போட்டு பார்த்தபோது ஏதோ ஒன்று குறைவது போல இருந்தது. அப்போது என்னுடன் பத்து வருடங்களாக பயணித்து வரும் திரைக்கதை ஜாம்பவான் திருமுருகனிடம் இந்த விஷயத்தை கொண்டு போனபோது அவர் ஒரு சின்ன மாற்றத்தை சொல்லி மொத்த படத்தையும் அழகாக மாற்றி விட்டார். குறிப்பாக கடைசி அரை மணி நேரம் பரபரவென்று இருக்கும்” என்றார்.

இயக்குநரும் நடிகருமான திருமுருகன் பேசும்போது,

“தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த கதைகளை நான் பூங்காக்களிலும், தேனீர் கடைகளிலும் கேட்டிருக்கிறேன். ஆனால் அவற்றை இன்னும் திரையில் நான் பார்த்ததில்லை. அதில் ஏதோ பிரச்சினை இருக்கிறது. அவற்றை சரி செய்ய வேண்டும். தமிழ் சினிமாவில் ஒரு சிறிய தொகையில் பெரிய படம் எடுக்கக் கூடியவர் தம்பி கிட்டு. மேதகு படத்தை குறும்படமாக எடுத்தபோது அதில் ஒரு கதாபாத்திரத்தில் நான் நடித்திருந்தேன். மேதகு படத்திற்கு பிறகு அவர் மிகப்பெரிய கலைஞராக வந்திருக்க வேண்டும். அதன்பிறகு அவர் இயக்கியுள்ள சல்லியர்கள் படம் விரைவில் அது வெளிவர இருக்கிறது. அதற்கு முன்னதாக அண்ணன் இசக்கி கார்வண்ணன் இந்த படத்தை கொடுத்துள்ளார்.

இடையில் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக துபாய்க்கு வேலைக்கு சென்று விட்டான் கிட்டு இது போன்ற தமிழ் சினிமாவில் ஆகச்சிறந்த கலைஞர்களை அலைய விடுகிறீர்கள். அதில் நானும் ஒருத்தன் தான். இயக்குனர் வெற்றிமாறனிடம் ஒரு கதை சொல்லி அது ஓகே ஆகி ஆனால் கொரோனா காலகட்டம் காரணமாக அது நடைபெறாமல் போய்விட்டது. அண்ணன் சீமான். தமிழ் தேசிய சிந்தனை உள்ள படைப்பாளிகளை கை தூக்கி விட்டு அவர்கள் ஆகச் சிறந்த படைப்புகளை கொடுப்பதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இசக்கி கார்வண்ணன் இயக்கிய பெட்டிக்கடை படத்தில் நானும் நடித்திருக்கிறேன். ஆனால் இந்த படத்தில் அவரே நடிக்க இறங்கிவிட்டார். மிகச் சிறப்பாகவும் நடித்துள்ளார். தமிழ் பெண்கள் என்றாலே அடிமைப்பட்டவர்கள் என்று சொல்லாமல், அறமா ? வீரமா > என நுட்பமான அறிவுள்ள பெண்களை இந்த படத்தில் காட்டி இருக்கிறார். தமிழகத்தில் ஒட்டுமொத்த பிரச்சினைகளையும் அண்ணன் சீமான் சரி செய்வார் என மக்கள் நம்புவது போல, திரை உலகில் உள்ள பிரச்சனைகளையும் அவர் சரி செய்து திறமையான கலைஞர்களை கைதூக்கி விட வகை செய்வார் என நான் நம்புகிறேன்” என்று பேசினார்.

இசையமைப்பாளர் தீசன் பேசும்போது,

“இந்த படம் தமிழ் சமூகத்தின் மிக முக்கியமான படம். ஒரு பீரியட் படமாக இது உருவாகி உள்ளது” என்றார்.

நாயகி அபி நட்சத்திரா பேசும்போது,

“இந்த படத்தில் எனக்கு மிகவும் வலுவான கதாபாத்திரம். எனக்கு ரொம்பவே பிடித்த கதாபாத்திரம். வித்தியாசமான தோற்றத்தில் வித்தியாசமான ஜானரில் ஒரு வரலாற்று படத்தில் நடிப்பதை ஒரு பெருமையான விஷயமாக நான் பார்க்கிறேன். இயக்குநர் கிட்டுவிடம் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன்/ கண்டிப்பாக பெயர் சொல்லும் படமாக இது இருக்கும்” என்று பேசினார்.

நடிகர் காதல் சுகுமார் பேசும்போது,

இப்படி ஒரு படத்தின் டிரைலரை தமிழர்களின் கோமான் அண்ணன் சீமான் செளியிடுவது தான் சரியாக இருக்கும். இங்கே படம் எடுப்பதற்கு ஆட்கள் இருக்கிறார்கள். தமிழர்களின் உணர்வுகளை பதிவு செய்வதற்கு தான் இங்கே ஆட்கள் இல்லை. இசக்கி கார்வண்ணன் போன்ற நல்ல ரசனையான தமிழர்களால் அது நிகழ்ந்து வருவது மகிழ்ச்சி தருகிறது. இந்த படத்திற்கு பிறகு தான் எனக்கு ‘பரமசிவன் பாத்திமா’வில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். கமர்சியல் படங்களில் பணியாற்றுவதை காட்டிலும் இயக்குநர் கிட்டுவின் படக்குழு முற்றிலும் மாறுபட்டு வித்தியாசமாக இருந்தது. இந்த ‘ஆட்டி’ படத்தை ஒரு வாட்டி பார்த்தால் உங்களது தமிழ் உணர்வை அது ஆட்டி பார்க்கும்” என்று பேசினார்.

வில்லனாக அறிமுகமாகும் நடிகர் பிரவீன் பழனிச்சாமி பேசும்போது,

இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு எதற்காக என்னை தேர்வு செய்தீர்கள் என இயக்குநரிடம் கேட்டபொது, அந்த கதாபாத்திரத்திற்கு என ஒரு மூஞ்சி தேவைப்படுகிறது. அது உனக்கு இருக்கிறது என்றார்.. இந்த படம் ரிலீஸ் ஆவதற்குள் கல்யாணம் பண்ணி விடுகிறேன், ஏனென்றால் படம் வெளியானால் பெண் தர மாட்டார்கள் என்று இயக்குநரிடம் சொன்னேன். நல்ல வேளை மூன்று மாதத்திற்கு முன்பே என் திருமணம் முடிந்து விட்டது” என்று பேசினார்.

நடிகர் சௌந்தர் பேசும்போது,

“சமூக ஆர்வலர் போல, இசக்கி கார்வண்ணனை ஒரு சினிமா ஆர்வலர் என்று சொல்லலாம். படத்துக்கு படம் வித்தியாசமான கதையை தேர்வு செய்து வருகிறார். இந்த படத்தில் என் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்தபோது எனக்கு கொஞ்சம் சந்தேகம் இருந்தது. எடிட்டிங்கில் பார்த்தபோது தான் அது சிறப்பாக வந்திருப்பது தெரிந்தது. ஊட்டிக்கு சற்று தள்ளி இருக்கும் ஒரு அருமையான லொகேஷனில் இந்த படத்தை படமாக்கி இருக்கிறார்கள். படத்தில் பார்க்கும்போது அற்புதமாக இருக்கும்” என்றார்.

தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான கசாலி பேசும்போது,

“இசக்கி கார் வண்ணனும் இயக்குநர் கிட்டுவும் வீரம், நமது வாழ்வியல் இவை இரண்டிலும் ரொம்பவே ஆர்வமாக இருக்கின்றனர். அதற்கு காரணம் அண்ணன் சீமான். கடந்த 15 வருடங்களுக்கு மேலாக இயற்கை வளம், தற்சார்பு குறித்து அண்ணன் சீமான் பேசிக் கொண்டே வருகிறார். இதை ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு அதிபர் தனது நாட்டில் கடைபிடிக்கிறார். அப்படி எந்த நாட்டிலோ உள்ள ஒருவருக்கு தோன்றிய எண்ணம் நிச்சயம் நமக்கும் கிட்டும். திரையரங்கு உரிமையாளர்கள் நல்ல வித்தியாசமான படங்களை தான் கேட்கிறார்கள். இந்த ‘ஆட்டி’ படத்தின் வெளியீட்டில் நானும் உதவ தயாராக இருக்கிறேன். அதற்கு முக்கிய காரணம் காதல் சுகுமார்” என்றார்.

நாம் தமிழர் கட்சி சாட்டை துரைமுருகன் பேசும்போது,

“தமிழ் இனத்திற்கான சரியான வரலாறு இதுவரை சினிமாவில் பேசப்படவில்லை. அதே சமயம் அதற்கு எதிரான வரலாறு தான் திட்டமிட்டு பதிவு செய்யப்படுகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் பேமிலி மேன், ஜாட், கிங்டம் என மூன்று படங்கள் நம் இனத்திற்கு மொழிக்கும் சம்பந்தம் இல்லாத நபர்களால் எடுக்கப்பட்டு திட்டமிட்டு ஈழத் தமிழர்கள் மீது அவதூறு பரப்புகிறார்கள். அப்படிப்பட்ட படங்களை ஓட ஓட விரட்டியவர் அண்ணன் சீமான். ஒரு காலகட்டத்தில் அண்ணாவின் தம்பிகள் திரையுலகை ஆண்டார்கள். இன்று அண்ணனின் தம்பிகள் ஆளுகிறார்கள்.

150 கோடியில் பெரிய பெரிய இயக்குநர்கள் இயக்கக்கூடிய படங்களில் கதை இல்லை. ஆனால் பெரிய நடிகர்கள் கதை இல்லாத இயக்குனர்களிடம் தான் நடிக்கிறார்கள். கதை இருப்பவர்களிடம் அவர்கள் வருவதில்லை. இயக்குநர் கிட்டுவிடம் அப்படி நிறைய கதைகள் இருக்கின்றன. நானும் இயக்குநர் கிட்டுவும் ஆரம்ப காலத்தில் யூடியூப்பில் ஒன்றாக இணைந்து சில காணொளிகளை பதிவிட்டோம். அதன்பிறகு அவர் அப்படியே கலைத்துறைக்குள் நுழைந்து விட்டார். என்னுடைய சாட்டை யூடியூப் சேனலின் அடித்தளத்தை அமைத்துக் கொடுத்ததில் இயக்குநர் கிட்டுவுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. இந்தப் படம் ஆகச்சிறந்த படமாக வந்திருக்கிறது என்று கேள்விப்பட்டேன். தமிழக முழுவதும் இந்த படத்தை கொண்டாட வேண்டும்” என்று பேசினார்.

தயாரிப்பாளரும் நாயகனுமான இசக்கி கார்வண்ணன் பேசும்போது,

“இதுவரை பல படங்களில் புரட்சிப் பெண்களின் கதையை பார்த்திருப்பீர்கள். அதில் இந்த படம் முதலாக இருக்கும். மண்ணுக்கு ஒரு பிரச்சனை என்றால் பெண்கள் தான் முதலாவதாக வருவார்கள் என்பது நம் ஆதியிலேயே நடந்த சம்பவம். உலகில் முதல் பெண்கள் ராணுவம் அமைத்தது நம் தமிழர்கள் தான். அந்த பெண்களை தான் நாம் தெய்வமாக வைத்திருக்கிறோம். ஒரு ஊர் நன்றாக இருக்க வேண்டுமென்றால் பெண்கள் நன்றாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட பெண்களின் வலிமையை உலகுக்கு காட்ட வேண்டும் என்கிற எண்ணத்தை அடிப்படையாக வைத்து தான் உருவாகி இருக்கும் படம் தான் இந்த ‘ஆட்டி’.

உலகத்தில் பெண்களை தெய்வமாக வைத்து இருந்த ஒரே சமூகம் நம் தமிழ் சமூகம் தான். ஆனால் அப்படிப்பட்ட பெண்களை நாம் இப்போது கொண்டாடுகிறோமா ? எல்லோரும் பெண்களை நாம் அடிமையாக நம் காலடியில் போட்டு வைத்திருந்ததாக இழிவுபடுத்தி பேசுகிறார்கள். இத்தனை ஆண்டு காலத்தில் அதை உயர்வுபடுத்தி பேசியவர் அண்ணன் சீமான் தான். வீழ்த்த முடியாத ஒருவர் இருக்கிறார் என்றால் அது அண்ணன் சீமான் தான். வேறு ஒருவராக இருந்தால் இந்நேரம் அரசியலை விட்டு ஓடி போயிருப்பார்கள். ‘ஆட்டி’ என பெண்களை உயர்வாக தாங்கிய ஒரு சமூகம், அந்த சமூகத்துக்கான படம் இது. படங்களை திரையிடுவதில் சின்ன படம் பெரிய படம் என பாகுபாடு காட்டக்கூடாது. அனைத்து படங்களையும் ஒரே சமயத்தில் வெளியிட முன்வர வேண்டும். தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் தயாரிப்பாளர்களின் கையில் தான் சினிமா இருக்கிறது” என்று பேசினார்.

எழுத்தாளர் சுகா பேசும்போது,

“தன்னுடைய தந்தை பெயரை தன் பெயருக்கு பின்னால் சேர்க்காமல் முன்னால் சேர்த்துக் கொண்டதிலேயே இயக்குநர் இசக்கி கார்வண்ணன் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு. ஒரு படத்தை உருவாக்கியதில் அதில் உழைத்த நூற்றுக்கணக்கான நபர்களுக்கும் பங்கு உண்டு. அப்படி தனக்கு உதவி இயக்குனராக இருந்தவர்களை மேடை ஏற்றி கௌரவித்த இயக்குநர் கிட்டுவின் செயல் பாராட்டுக்குரியது. நானும் சீமானும் கடந்த 35 வருடங்களுக்கு முன்பு இதே பிரசாத் லேபில் செய்த செயல்கள் எல்லாம் இப்போது ஞாபகத்துக்கு வருகிறது. இந்த 2025 ல் ‘ஆட்டி’ என்கிற தமிழ்ச் சொல்லை படத்துக்கு டைட்டிலாக வைக்கிற துணிச்சலும் திறனும் இயக்குநர் கிட்டுவுக்கும் தயாரிப்பாளர் இசக்கி கார்வண்ணனுக்கும் இருக்கிறது. இந்தப் படத்தின் நாயகி ஆங்கிலத்தில் பேசி சீமானை வரவேற்றார். இந்த விழாவில் கலந்து கொண்டுள்ள வங்கத்தை சேர்ந்த நடிகை கூடுமானவரையில் தமிழ் பேச முயற்சித்தார். அவரது முயற்சியை நான் பாராட்டுகிறேன்” என்று கூறினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE