“கள்ளச்சாராயம் குடித்து செத்தவனுக்கு 10 லட்சமா?” : ‘ஆட்டி’ பட விழாவில் சீமான் ஆவேச கேள்வி!
லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆட்டி’. ‘மேதகு ; பாகம் 1’ மற்றும் ‘சல்லியர்கள்’ படத்தை இயக்கிய இயக்குநர் தி.கிட்டு இயக்கியுள்ள இந்த படத்தில் தயாரிப்பாளர் இசக்கி கார்வண்ணனே கதையின் நாயகனாக ஒரு காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்..
‘அயலி’ புகழ் அபி நட்சத்திரா கதாநாயகியாக நடிக்க, காதல் சுகுமார், சௌந்தர், பிரவீன் பழனிச்சாமி மற்றும் பல முக்கிய நடிகர்கள் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். எங்கள் குளத்தில் பெண்களே முதலானவர்கள் என்கிற கருத்தை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகியுள்ளது..
இந்தப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன், எழுத்தாளர் சுகா, தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான கசாலி, இயக்குனரும் நடிகருமான திருமுருகன், கார்ட்டூனிஸ்ட் பாலா ஆகியோர் கலந்து கொண்டு இப்படத்தின் டிரைலரை வெளியிட்டனர்.
நிகழ்வில் சீமான் பேசியதாவது:-
“தம்பி காதல் சுகுமார் மிகவும் புகழ் பெற்ற ஒரு திரைக்கலைஞன் இல்லை என்றாலும் மிகச்சிறந்த தமிழ் இன மான உணர்வு கொண்ட ஒரு தமிழ் மகன். அதனால் சுகுமாரிடம் எனக்கு தனிப்பட்ட ஒரு பேரன்பு எப்போதும் உண்டு. இயக்குனர் கிட்டுவிடம் இயல்பிலேயே நல்ல படைப்பாற்றல் உண்டு. சொல்ல வந்ததை நகைச்சுவையுடன் கேலியும் கிண்டலுமாக அதேசமயம் சுருக்கமாக சொல்லும் திறமை வாய்ந்தவர். எங்களுடன் அரசியல் பயணத்தில் இல்லாமல் திரையுலகில் அவர் சென்றது மகிழ்ச்சி என்றாலும் எங்களுக்கு ஒரு இழப்புதான். பல கோடி பட்ஜெட்டில் கதையில்லாமல் படம் எடுப்பவர்கள் மத்தியில் ஒன்றரை கோடியில் ஆகச்சிறந்த படத்தை எடுக்கும் திறமை கொண்டவன் கிட்டு. அவர் இயக்கியுள்ள சல்லியர்கள் படத்தை பார்த்தால் நீங்கள் புரிந்து கொள்வீர்கள். அதுபோல இந்த ஆட்டி திரைப்படத்தையும் மிகச் சரியாக செய்திருப்பான் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது.
‘எங்கள் குடியில் பெண்கள் முதலாம்’ என்பதற்கு மாற்றுக்கருத்து இருக்க முடியாது.. நம் மூதாதையர் ஆண்டதற்கான தமிழருக்கான வரலாற்றுச் சான்றுகள் மிகக் குறைவு. இலக்கியச் சான்றிதழ் தான் நிறையவே இருக்கின்றன. இலக்கியம் பொய் பேசும். ஆனால் வரலாறு பொய் பேசாது. அதனால்தான் இன்று வரைக்கும் நாம் முற்றும் முதலாக வரலாற்றில் புறக்கணிக்கப்பட்ட ஒரு இனத்தின் மக்களாக இருக்கிறோம். அப்படி இலக்கியத்தில் கண்ணகியை வீர மங்கையாக சித்தரிக்கிற அதே நேரத்தில் வரலாற்றில் நிஜமாகவே வேலு நாச்சியார் ஒரு ‘ஆட்டி’யாக ஆட்டி படைப்பவளாக இருந்திருக்கிறார். உண்மையிலேயே ஆட்டி என்றால் அவர்தான். ஆனால் அவருக்கு சிவகங்கையில் ஒரே ஒரு சின்ன சிலை மட்டுமே இருக்கிறது. வரலாற்றில் அவர் புறக்கணிக்கப்பட்டு விட்டார்.
வேலு நாச்சியார் மறைந்து 85 வருடங்கள் கழித்து வடநாட்டில் உருவானவர்தான் ஜான்சி ராணி. அவரை வடநாட்டின் வேலு நாச்சியார் என்ற அழைப்பதற்கு பதிலாக வேலு நாச்சியாரை தென்னாட்டின் ஜான்சி ராணி என்று அழைப்பதன் மூலம் வரலாற்றை பிழையாக எழுத முயற்சி செய்திருக்கிறார்கள். இப்படித்தான் நாம் வரலாறு கொஞ்சம் கொஞ்சமாக அழிய ஆரம்பித்தது. பெண்ணை போற்றாத எந்த இனமும் உயர்வடைந்ததில்லை. தமிழ் சமூகம் பெண்களை பெரிதும் போற்றிய ஒரு சமூகம்.
நம் வரலாற்றை நாமே மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும்.. அது போன்ற ஒரு முயற்சி தான் தம்பி கிட்டு இது போன்ற படங்களை எடுக்கும் சின்ன சின்ன முயற்சிகள். நாட்டைக் காக்க எல்லையில் நின்று உயிரை விடும் ராணுவ வீரனுக்கு இந்த அரசுகள் எவ்வளவு கோடிகளை கொட்டிக் கொடுத்தன ? கள்ளச்சாராயம் குடித்து செத்தவனுக்கு 10 லட்சம். விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்றவனுக்கு ஒரு கோடி. ஆனால் எல்லையில் உயிரை விட்ட வீரனுக்கு ஒன்றுமில்லை. அப்படி என்றால் தன் மரணத்திற்கு பின் தன் வீட்டை நாடு பார்த்துக் கொள்ளும் என்று எந்த நம்பிக்கையுடன் ஒருவன் ராணுவத்தில் பணியாற்ற கிளம்பி வருவான் ?
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று பாடினார்கள். இப்போது வரை திருந்தவில்லை. இனி நாம் தான் திருத்த வேண்டும். பிறமொழிச் சொற்கள் கலக்காமல் நம் தமிழ் மொழியில் பேசுவதற்கு முயற்சிக்க வேண்டும். அனைத்திற்குமே நல்ல சொற்கள் நம்மிடம் இருக்கின்றன. யார் மீதும் எங்களுக்கு கோபம் இல்லை. தாய் மொழியைப் பேசத் தெரியாத இனம் வாழாது. தங்கை அபி நட்சத்திரா அப்படி பேசியதில் எனக்கு வருத்தம் இல்லை. ஏனென்றால் அப்படி பேசினால் படிக்கத் தெரியாத பிள்ளை என்று நினைத்து விடுவார்கள். நான் பள்ளிக்கூடம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது என்னை பார்க்க வந்தவர்களுக்கு அன்புடன் என்று தமிழில் எழுதி கையெழுத்து போட்டுக் கொடுத்தேன். நடிகை சினேகா ஆங்கிலத்தில் கையெழுத்து போட்டுக் கொடுத்தார். எதற்காக என்று அவரிடம் கேட்டபோது, முதலில் தமிழில் தான் கையெழுத்து போட்டுக் கொண்டிருந்தேன்.. ஒரு தாயும் மகளும் என்னை பார்த்து ஒருவேளை இவள் படிக்கவில்லையோ என்று பேசிக்கொண்டு சென்றார்கள். அதிலிருந்து தான் ஆங்கிலத்தில் கையெழுத்து போடுகிறேன் என்று சொன்னார். தமிழில் கையெழுத்து போட்டால் படிக்கத் தெரியாதவர்கள் என்று முத்திரை குத்தி விடுகிறார்கள். புரட்சி என்பது ஒவ்வொரு மனிதனின் காலடிக்கு கீழே காய்ந்த சருகுகளாக காத்துக் கிடக்கிறது. ஒரு தீக்குச்சியின் உரசலுக்காக. அப்படி உரசிப்போடும் ஒரு தீக்குச்சியாக தம்பி கிட்டுவின் ‘ஆட்டி’ படைப்பு இருக்கட்டும் என்று நான் வாழ்த்துகிறேன்” என்று பேசினார்.
தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்
தயாரிப்பு ; லட்சுமி கிரியேஷன்ஸ் / இசக்கி கார்வண்ணன்
இயக்கம் ; தி..கிட்டு
இசை ; தீசன்
ஒளிப்பதிவு ; சிபி சதாசிவம்
படத்தொகுப்பு ; சி.மு இளங்கோவன்
கலை ; முஜிபுர் ரகுமான்
மக்கள் தொடர்பு ; A ஜான்