சினிமா செய்திகள்

விஷ்ணு விஷாலின் ‘கட்டா குஸ்தி 2’ தொடங்கியது!

விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் மற்றும் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி ஜோடி நடிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில், 2022 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற “கட்டா குஸ்தி” படத்தின் இரண்டாம் பாகம் “கட்டா குஸ்தி 2” நேற்று பிரம்மாண்டமான பூஜையுடன் இனிதே துவங்கியது.


முன்னதாக, நேற்று இப்படத்தின் அறிவிப்பையொட்டி வெளியிடப்பட்ட ப்ரொமோ வீடியோ, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று, இணையம் முழுவதும் வைரலாகியது. இதில் விஷ்ணு விஷால், ஐசரி கே கணேஷ் , ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ், காளி வெங்கட், முனீஷ்காந்த் ஆகியோருடன் இயக்குநர் செல்லா அய்யாவும் தோன்றினார். வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் நகைச்சுவையுடன் அமைந்த அந்த ப்ரொமோ, இப்படமும் மிரட்டலாக இருக்கும் என்பதை வெளிப்படுத்தியது.

முந்தைய பாகத்தின் கதை முடிந்திருந்தாலும், அதன் தொடர்ச்சியாக, ஸ்போர்ட்ஸ் டிராமா ஜானரில், எல்லோரின் இல்லங்களிலும் காணப்படும் முக்கிய பிரச்சினைகளை நகைச்சுவை வடிவில் பதிவு செய்யும் வகையில், அனைவரும் ரசிக்கும் வணிக ரீதியான பொழுதுபோக்கு திரைப்படமாக இந்தப் படம் உருவாகிறது.

முதல் பாகத்தில் நடித்த ஜோடியான விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி மீண்டும் நாயகன், நாயகியாக நடிக்கின்றனர். அதோடு, முதல் பாகத்தில் நடித்த கருணாஸ், காளி வெங்கட், முனீஷ்காந்த், கஜராஜ் ஆகியோரும் தொடர்கிறார்கள். இவர்களுடன் நடிகர் கருணாகரன் முக்கியமான வேடத்தில் இணைகிறார்.

முதல் பாகத்தை தயாரித்திருந்த விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன், வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து, இப்படத்தை பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர். சுப்ரா, ஆர்யன் ரமேஷ் மற்றும் ஐவி எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் இஷான் சக்சேனா இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றுகின்றனர்.
படப்பிடிப்பு சென்னை, அம்பாசமுத்திரம், பொள்ளாச்சி, பாலக்காடு ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

படம் தொடர்பான மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

தொழில்நுட்பக் குழுவினர்:
தயாரிப்பு: விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் & வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்
இயக்கம்: செல்லா அய்யாவு
ஒளிப்பதிவு: கே. எம். பாஸ்கரன்
இசை: ஷான் ரோல்டன்
எடிட்டிங்: பரத் விக்ரமன்
கலை இயக்கம்: எஸ். ஜெயச்சந்திரன்
சண்டைக் காட்சிகள்: முருகன்
நடன அமைப்பு: பாபா பாஸ்கர்
பாடல்வரிகள்: மோகன்ராஜன்
தலைமை நிர்வாகம் (வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்): நிதின் சத்யா
மக்கள் தொடர்பு (PRO): சதீஷ் (AIM)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE