‘மேதகு 2’ – விமர்சனம்
“பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல…”என்று ரஜினி வசனம் பேசியிருந்தாலும் நிஜத்தில் இந்த வசனத்துக்கு பொருத்தமானவர் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன்தான்.
இவருடைய வாழ்க்கையை; புலிகளின் வரலாற்றை ரத்தமும் சதையுமாக பதிவு செய்த படம்தான் ’மேதகு’. கடந்த ஆண்டு இந்தப்படம் வெளிவந்து பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றிருந்த நிலையில் இப்போது ’மேதகு’ இரண்டாம் பாகம் வெளிவந்துள்ளது.
பிரபாகரனுக்குள் தமிழ் ஈழ விடுதலை வேட்கை துளிர்த்ததில் தொடங்கி புலிகள் இயக்கம் பெரும் படையாக வளர்ந்தது வரையிலான காலக்கட்டங்களை கதையாக்கி ’மேதகு 2’ உருவாக்கப்பட்டுள்ளது. பிரபாகரன் பாத்திரத்தில் கெளரி சங்கர் நடித்துள்ளார். முகச்சாயலில் கிட்டத்தட்ட பிரபாகரனை கண்முன் நிறுத்தினாலும் மிடுக்கில், வீரத்தில், பேரியக்கத்தின் ஆளுகையில் கெளரி சங்கரால் பிரபாகரனை பிரதிபலிக்க இயலவில்லை. எப்போதுமே முகத்தை இறுக்கமாக வைத்துக்கொள்வதும், இழப்புகளை சந்திக்கும்போதெல்லாம் தாங்கமூடியாத துயரத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறுவதுமாக தடுமாறியிருக்கிறார்.
மற்ற கதாபாத்திரங்களும்கூட இயல்பை மீறிய நடிப்பையே வெளிப்படுத்துவது நாடகத்தன்மையாக இருக்கிறது. தனக்கு அழுத்தமான கேரக்டர் இல்லை என்றாலும் பிரபாகரன் என்ற ஒரு பெயருக்காக நடித்துக்கொடுத்திருக்கும் நாசருக்கு பாராட்டுகள்.
தஞ்சாவூரில் இருக்கும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திலிருந்து தொடங்கும் படத்தில் வில்லுப்பாட்டு வழியாக கதை சொல்வதுபோல் காட்டுவது பொருத்தமில்லாத திரைக்கதையாக இருக்கிறது. புலிகள் இயக்கத்துக்கு ஆதரவு தருவதுபோன்ற இந்திராகாந்தியின் நிலைபாடு, அன்றைய எதிர்க்கட்சி தலைவர் கருணாநிதியின் இராஜதந்திரமான ஆதரவு, எம்ஜிஆரை பிரபாகரன் சந்திப்பது, புலிகளுக்கு எம்ஜிஆர் பண உதவி செய்வது என நிஜ சம்பவங்கள் பலவற்றை நெற்றி பொட்டில் அடிப்பதுபோல் பதிவு செய்துள்ளது படத்தின் மிகப்பெரிய பலம்.
ஒளிப்பதிவு, இசை உள்ளிட்ட தொழில்நுட்ப விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். இருப்பினும் உலகம் மறக்கமுடியாத ஒரு பெரும் தலைவனின் வாழ்வை படமாக எடுக்க முன்வந்த தயாரிப்பாளர்களுக்கும் இயக்குனர் யோகேந்திரனுக்கும் பாராட்டுகள்.