திரை விமர்சனம்

‘குமார சம்பவம்’ : திரை விமர்சனம்!

சினிமாவில் இயக்குநராகும் கனவில் உள்ளவர் குமரன் தங்கராஜ். முட்டி மோதி பார்த்தும் வாய்ப்பு வறட்சியாக இருந்ததால் தானே தயாரிப்பாளராகவும் முடிவு செய்கிறார். இதற்காக தங்கள் வீட்டை விற்க முன்வரும்போது அதே வீட்டில் தனி அறையில் வசித்து வரும் நெருங்கிய குடும்ப நண்பரும் சமூக செயற்பாட்டாளருமான இளங்கோ குமரவேல் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். இதனால், காவல்துறையில் விசாரணை வளையத்தில் குமரனும், அவரது குடும்பமும் சிக்கிக் கொள்கிறது.

வரதராஜன் கொலைக்கான காரணம் என்ன  கடைசியில் வீட்டை விற்க முடிந்ததா, குமரன் இயக்குநர் ஆனாரா போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது மிச்ச கதை.

 

சின்னத்திரையில் கவனம் ஈர்த்த குமரன் தங்கராஜ் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் படம். முதல் படம் என்பது தெரியாத அளவுக்கு அவரது நடிப்பில் பக்குவம் எட்டிப்பார்க்கிறது. காமெடி ஏரியாவில் மட்டுமில்லாமல் எமோஷன் காட்சிளிலும் கவனிக்க வைக்கிறார் குமரன் தங்கராஜன்.

கதையின் பிரதான கதாபாத்திரத்தில் வரும் குமரவேல், போராளிக்கான ஆக்ரோஷம், சாமானியனுக்கான எமோஷன் என ஆழமான பங்களிப்பைச் செய்து, படத்திற்கு அடித்தளமாகியிருக்கிறார்.

தன் அனுபவத்தால் பலம் சேர்க்கிறார் ஜி.எம்.குமார். இரண்டாம் பாதியில் வரும் காமெடிகளைக் குத்தகைக்கு எடுத்து, நம் வயிற்றை வலிக்க வைத்திருக்கிறார் வினோத் சாகர்.

ஒன்லைன் கவுன்ட்டர்களால் வரும் காட்சிகளிலெல்லாம் கலகலப்பூட்டியிருக்கிறார் பால சரவணன். சிவா அரவிந்த், வினோத் முன்னா, பாயல் ராதாகிருஷ்ணன், லிவ்விங்ஸ்டன், கௌதம் சுந்தரராஜன் ஆகியோர் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள்.

காமிக்கலான உலகைக் கட்டமைக்கவும், ஒரே வீட்டிற்குள் சுழலும் காட்சிகளை அலுப்பு தட்டாத வகையில் கொண்டுவரவும் பங்களித்திருக்கிறது ஜெகதீஷ் சுந்தரமூர்த்தியின் ஒளிப்பதிவு. இவற்றுக்கு ஜி. மதனின் நேர்த்தியான படத்தொகுப்பும் கைகொடுத்திருக்கிறது.

அச்சு ராஜாமணியின் இசையில், பாடல்கள் திரையோட்டத்தோடு வந்துபோகின்றன.  பின்னணி இசையால், காமெடி ட்ராக்குகளுக்கு மைலேஜ் ஏற்றியிருக்கிறார் அச்சு!

வரதராஜனின் மரணம், அதை விசாரிக்கத் தொடங்கும் காவல்துறை, ஒவ்வொரு கதாபாத்திரங்களின் வருகை எனத் தொடக்கத்திலிருந்தே கதையோடு, காமெடியையும் கலந்தே பேசுகிறது திரைக்கதை.

விசாரணை காட்சிகளுக்கிடையே கதாநாயகனின் காதல், அவரது வாழ்க்கை பிரச்னைகள், வரதராஜனின் வாழ்க்கை, குடும்பத்தினரின் உலகம், அவர்களுக்கு வரதராஜன் மீதான அன்பு எனக் கிளைக்கதைகளும் கச்சிதமாக அவிழ்கின்றன.

ஆடியன்ஸ் மனதில் பதிந்துவிடவேண்டும் என்ற அக்கறையுடனும் வெறியுடனும் படத்தை இயக்கி இருக்கும் பாலாஜி வேணுகோபாலை பாராட்டலாம்.

மொத்தத்தில்  ‘குமாரசம்பவம்’ சரியான சம்பவம்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE