‘பிளாக் மெயில்’ மிரட்டுகிறதா? : திரை விமர்சனம்!
காணாமல் போகும் ஒரு சரக்கு வாகனம். கடத்தப்படும் நாயகனின் காதலி, ஒரு குழந்தை. கடத்தப்பட்ட குழந்தையை கண்டுபிடித்துவிட்டால் காதலியை மீட்கலாம் என்ற நிலை நாயகன் ஜி.வி.பிரகாஷுக்கு. சரக்கு வாகனம் காணாமல் போனதற்கான காரணம் என்ன? கடத்தப்பட்ட நாயகி, குழந்தையின் நிலை என்ன? இக்கட்டான சூழலில் சிக்கிய ஜி.வி.பிரகாஷ் எடுத்துவைக்கும் அடுத்தடுத்த அடிகள் என்ன என்ற பல கேள்விகளையும் புள்ளிகளையும் இணைத்தால் மிரட்டும் ‘பிளாக் மெயில்’ ரெடி!
’இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘கண்ணை நம்பாதே’ போன்று தனது முந்தைய படங்களைப் போலவே இதையும் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் மு.மாறன்.
காதலி தேஜு அஸ்வினி கடத்தப்பட்டதை அறிந்ததும் ஜி.வி.பிரகாஷ் காட்டும் பதற்றமும் காப்பாற்றத் தவிக்கும் தவிப்பும் சிறப்பான நடிப்பு. காதலிக்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருப்பவர் உடல்மொழியில் மிரட்டி இருக்கிறார்.
தேஜு அஸ்வினிக்கான காட்சிகள் மிகக்குறைவே என்றாலும் அதை சரியாக செய்திருக்கிறார்.
தொழிலதிபராக நடித்திருக்கும் ஸ்ரீகாந்த், தனது அனுபவமிக்க நடிப்பு மூலம் தனது கதாபாத்திரத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்த்திருக்கிறார்.
ஸ்ரீகாந்தின் மனைவியாக நடித்திருக்கும் பிந்து மாதவி, முன்னாள் காதலனால் பிளாக்மெயில் செய்யப்படுவதோடு, கடத்தப்பட்ட குழந்தையை மீட்க போராடுவது என்று உணர்வுப்பூர்வமாக நடித்திருக்கிறார்.
வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கும் லிங்கா, நடிப்பில் மிளிர்கிறார். சாஜி, ரெடின் கிங்ஸ்லி, முத்துகுமார், ரமேஷ் திலக் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் குறையின்றி நடித்திருக்கிறார்கள்.
சாம்.சி.எஸ் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. திருநங்கைகளுக்கான பாடல் ஒன்ஸ்மோர் கேட்க வைக்கும் விதத்தில் இருக்கிறது.
ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய், சஸ்பென்ஸ் திரில்லர் ஜானருக்கு ஏற்ற வகையில் வண்ணங்களையும், கோணங்களையும் கையாண்டு கவனம் ஈர்த்திருக்கிறார்.
நிமிடத்திற்கு நிமிடம் டெம்போ ஏற்றும் டிவிஸ்ட் படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. அந்த பலமே படத்தின் பலவீனமும்கூட. அடுத்தடுத்து டிவிஸ்ட்களாக வருவது ஒரு கட்டத்தில் அலுப்பை ஏற்படுத்துவது திரைக்கதை சறுக்கல்!
இந்த குறைகளை சரி செய்திருந்தால் ‘பிளாக் மெயில்’ நிஜமாகவே மிரட்டலாக அமைந்திருக்கும்!