திரை விமர்சனம்

‘தணல்’ திரை விமர்சனம்!

அதர்வா அப்புறம் ஐந்து பேர் போலீஸ் வேலையில் புதிதாக சேர்கிறார்கள். அரட்டை அடித்துக்கொண்டிருக்கும் அவர்களை ரவுண்ட்ஸ் அனுப்புகிறார் உயரதிகாரி. நடக்கப்போகும் விபரீதம் தெரியாமல் கடமையாற்ற செல்பவர்களுக்கு காத்திருக்கிறது ஏழரை.

அதாவது பாதாள சாக்கடை மூடியை திறந்துகொண்டு வரும் ஒருவனை சந்தேகப்பட்டு துரத்துகிறார்கள். அவனோ இந்த ஆறு பேருக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டு ஓடுகிறான். ஓடினான் ஓடினான் வாழ்க்கையின் எல்லைவரை ஓடினான் என்பதுபோல இருக்கிறது அவனது எஸ்கேப். துரத்திச்செல்லும் காவலர்கள் ஆள் அரவமற்ற ஒரு இடத்தை அடைகிறார்கள்.

அந்த இடத்தில் எண்ட்ரி ஆகிறார் வில்லன் அஸ்வின் காக்னு மனு. கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு காவலரை அவர் போட்டுத்தள்ள, அங்கிருந்து தப்பிக்க அதர்வாவும் மற்ற காவலர்களும் முயல்கிறார்கள். அவர்கள் தப்பித்தார்களா? நடந்த.. நடக்கும்… நடக்கப்போகும் சம்பவத்திற்கான காரணம் என்ன என்பதை சொல்லும் கதையே ‘தணல்’.

நாயகன் அதர்வா ஆக்‌ஷன் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார். பெற்றோர் பற்றி எந்த கவலையும் இல்லாமல் இருப்பவர், எதார்த்தத்தை புரிந்துக் கொண்டு பொறுப்பான இளைஞராக உணர்வுப்பூர்வமாக நடித்திருக்கிறார். உயிர் பிழைப்பதற்காக வில்லன்களிடம் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் காட்சிகளில் உயிர் பயத்தையும், நண்பர்களை காப்பாற்ற வேண்டும் என்ற பதற்றத்தையும் நடிப்பில் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

வில்லனாக இருந்தாலும், கதையின் நாயகனுக்கு சமமான இடத்தை பிடித்திருக்கும் அஷ்வின் கக்கமனுவின் கதாபாத்திரமும், அதில் அவர் வெளிப்படுத்திய நடிப்பு மற்றும் அவரது தோற்றம் படத்திற்கு மிகப்பெரிய பலம்.

நாயகியாக  லாவண்யா திரிபாதி. பெரிய வேலை இல்லை என்றாலும், ஆரம்பக்கட்ட படத்தை நகர்த்த பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் சக்தி சரவணனின் பணி படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. இரவு நேரம், அடர்ந்த குடிசைப்பகுதி இவை இரண்டையும் படம் பார்ப்பவர்களே பதற்றம் அடையும் வகையில் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

உண்மை என்கவுண்டர் சம்பவம் ஒன்றை அடிப்படையாக வைத்துக்கொண்டு இயக்கியிருக்கிறார் இயக்குநர் ரவீந்திர மாதவா.

படம் தொடங்கி சுமார் 20 நிமிடங்களில் கதைக்குள் அழைத்துச் செல்பவர், அதில் இருந்து இறுதிக் காட்சி வரை, பார்வையாளர்களின் முழு கவனமும் திரையில் மட்டுமே இருக்கும்படியான திருப்பங்கங்களோடு, படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார்.

‘தணல்’.. ஹீட்!

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE