‘டார்லிங்’ நெடி அடிக்கும் ‘யோலோ’ : விமர்சனம்
யோலோ என்ற பெயரில் யூ டியூப் சேனல் நடத்துகிறார் நாயகன் தேவ். ப்ராங்க் வீடியோ எடுப்பதுதான் இவரது வேலையே. இதுவொரு டிராக் என்றால் இன்னொரு டிராக்கில் படவாகோபியின் மகள் தேவிகாவை பெண் பார்க்க வருகிறது ஒரு குடும்பம். பெண் பார்க்க வந்த குடும்பத்தில் சிலர் இந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதாகவும் தேவிகாவின் கணவர் தேவ் என்றும் ஒரு குண்டை தூக்கிப் போடுகிறார்கள்.
சம்பந்தமே இல்லாமல் கிளம்பிய இந்த செய்தியை பொய் என்று நிருபிக்க களமிறங்குகின்றனர் தேவும் தேவிகாவும். அதன்பின் நடப்பது மிச்ச கதை.
கதாநாயகன் தேவ், கதாநாயகி தேவிகா இருவரும் கதைக்கேற்ற இணையாக படம் முழுக்க பயணிக்கிறார்கள். தோற்றத்திலும் நடிப்பிலும் எந்தப் பின்னடைவும் இல்லை பொருத்தம் தான்.
படத்தில் எரிச்சலூட்டும் வேகத்தடை போல் விஜே நிக்கியின் கதாபாத்திரம் அமைந்துள்ளது .அவர் இரண்டாவது மனைவியாக ஏற்றுக் கொள்வது மிகையான பாத்திர வெளிப்பாடு.
படத்தின் கதையில் ‘டார்லிங்’ படத்தின் சாயல்.
படத்தில் நகைச்சுவைக்கு நிறைய இடமிருந்தும் அதைச் சரியாக வெளிக்கொண்டு வரவில்லை. படம் நகைச்சுவை சார்ந்ததா? அமானுஷ்யம் சார்ந்ததா? கிரைம் திரில்லர் சார்ந்ததா? என்று ஒரு கட்டத்தில் குழப்பம் வருகிறது.
படத்தில் இன்னொரு காதல் ஜோடியும் காட்டப்படுகிறது. யோலோ பிராங்க் சேனலுக்காக எதிர்ப்படுபவர்களை பயன்படுத்துவதற்காக அவர்கள் செய்யும் அலப்பறைகள் ஜாலி ரகளை.இப்படிப்பட்ட ஒரு படத்தில் சூரஜ் நல்லுசாமியின் ஒளிப்பதிவும், -சகீஷனா சேவியரின்
இசையும் இணைந்து படத்திற்கு பலம் சேர்த்துள்ளன. இந்த இருவரும் தங்கள் பணியை திறம்படச் செய்துள்ளனர்.
‘யோலோ’ ப்ராங்க் வீடியோ சேனல் என்றாலும் பார்வையாளர்களை ஏமாற்றவில்லை!