பிரமாண்டத்தில் மிரட்டும் ‘மிராய்’ : விமர்சனம்!
கலிங்க போருக்குப் பின் அசோக சக்கரவர்த்தி, கடவுளுக்கு இணையான சக்தி பெறக்கூடிய ரகசியத்தை 9 புத்தகங்களில் மறைத்து வைக்கிறார். இந்த 9 புத்தகங்களும் உலகின் வெவ்வேறு இடங்களில் மறைத்து வைக்கப்படுகிறது. காலங்கள் உருண்டோடுகிறது. தற்போதைய நவீன காலக்கட்டத்தில், மந்திர சக்திகள் மூலம் உலகை ஆட்டிப்படைக்க நினைக்கும் மனோஜ் மஞ்சு இந்த 9 புத்தகங்களை அடைய முயற்சிக்கிறார். மிராய் என்ற அதீத சக்தி படைத்த கோள் ஒன்றின் உதவியுடன் மனோஜின் முயற்சியை முறியடிக்க நாயகன் தேஜா சஜ்ஜா களத்தில் இறங்குகிறார். இருவரில் வெல்வது யார்? வீல்வது யார் என்ற கேள்விகளுக்கு விடை தருகிறது க்ளைமாக்ஸ்.
சாதாரண மனிதனாக இருக்கும் தேஜா சஜ்ஜாவுக்குள் பெரிய சக்தி இருப்பதாக நாயகி சொல்லும் இடத்திலிருந்து சூடுபிடிக்க தொடங்கும் இறுதிவரை விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் படம் பார்க்கும் ரசிகர்களை விரும்ப வைக்கிறது. இதுவே படத்தின் வெற்றி.
நாயகன் தேஜா சஜ்ஜா மிரட்டி இருக்கிறார். ஒரே மாதிரியான ஜானரை தேர்வு செய்தாலும் அதை சிறப்பாக செய்வது தேஜாவின் ஸ்பெஷல். ஆக்ஷன், செண்டிமெண்ட் என எல்லா ஏரியாவிலும் அடித்து ஆடியுள்ளார்.
இந்த உலகத்தை தனி மனிதனாக ஆட்டிப்படைக்கவேண்டும் என்று பேராசை கொண்ட மகாபீர் கேரக்டரில் மஞ்சு மனோஜ் அட்டகாசம். வெறித்தனத்தை கண்களிலும் உடல்மொழியிலும் அநாயசமாக வெளிப்படுத்தியுள்ளார்..
அம்பிகா என்ற கதாபாத்திரத்தில் ஸ்ரேயாவின் நடிப்பு ஈர்ப்பு. தன் மக்களுக்காக தீக்கு இரையாகி தன்னை மாய்த்துக்கொள்ளும் காட்சியில் கலங்கடிக்கிறார். கதாநாயகியாக வருபவருக்கு பெரிதாக வேலை இல்லை. ஹீரோ – ஹீரோயினுக்கு டூயட் வைக்காதது ரசிகர்களுக்கு ஏமாற்றம்.
இந்த வகையான பட்ஜெட்டுக்கு நம்பமுடியாத அளவிற்கு கார்த்திக் கட்டம்னேனி படத்தை இயக்கி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒரு இயக்குநரே ஒளிப்பதிவாளர் ஆக இருப்பது அவர் கற்பனையில் கண்ட காட்சிகளை கேமராவில் பதிவு செய்யும் வாய்ப்பு . அது இந்த இயக்குநருக்குக் கிடைத்திருக்கிறது.பெரிய கேன்வாஸில் தனது கற்பனையை விரித்துள்ளார்.
இது ₹50 கோடி செலவிலான படம் என்றால் நம்புவது கடினம், பல மடங்கு செலவிட்டு இது ₹500–600 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்து போல் பிரமாண்டமாகத் தெரிகிறது.
லாஜிக்கெல்லாம் பார்க்காவிட்டால் ‘மிராய்’ மிரட்டும்!