பிரமாண்டமாக தயாராகும் ‘1770’
வங்காள எழுத்தாளர் பக்கிம் சந்திர சட்டர்ஜி எழுதி பிரபலமடைந்த நாவல் ‘ஆனந்த மடம்’ . இந்த நாவல் இப்போது ‘1770’ என்ற பெயரில் திரைப்படமாகிறது. எஸ் எஸ் 1 என்டர்டெய்ன்மெண்ட் மற்றும் பி. கே. என்டர்டெய்ன்மென்ட் ஆகிய பட தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை எஸ். எஸ். ராஜமௌலியின் உதவியாளரும், ‘ஆகாஷ்வாணி’ படத்தை இயக்கியவருமான அஸ்வின் கங்கராஜு இயக்குகிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் அஸ்வின் கங்கராஜு பேசுகையில், ” இந்த தலைப்பு எனக்கு ஒரு பெரிய சவாலாக இருந்தது. ஆனால் இந்தியாவின் பிரபலமான கதாசிரியர் வி. விஜயேந்திர பிரசாத் அவர்கள் கதை மற்றும் திரைக்கதையை எழுதி எளிமைப்படுத்தியதால், இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெறும் படைப்பாக உருவாகும் என நினைக்கிறேன். ஒரு படைப்பாளியாக, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திய படைப்புகள், வாழ்க்கையை விட உணர்வுகளும் ஆக்ஷனும் மிகுந்த கதைகளை நோக்கி ஈர்க்கப்பட்டேன். அந்த தருணத்தில் இந்த கதை எனக்கு பொருத்தமானதாக இருக்கும் என தோன்றியது. தொடக்கத்தில் சிறிது தயக்கம் எட்டிப் பார்த்தது. ஆனால் கதாசிரியர் ராம் கமல் முகர்ஜியை சந்தித்ததும், கதையை அவரது கோணத்தில் கேட்டதும் எனக்கு முழு நம்பிக்கை ஏற்பட்டது.
தயாரிப்பாளர்களான சைலேந்திர குமார், சுஜாய் குட்டி, பி. கிருஷ்ணகுமார், சூரஜ் சர்மா ஆகியோரை மும்பையில் சந்தித்தேன். அவர்களிடம் படத்தை பற்றியும், அதனை எப்படி சாத்தியப்படுத்துவது என்பது குறித்தும் நீண்ட நேரம் விவாதித்தோம். தயாரிப்பாளர்களின் அக்கறையுடனான அரவணைப்பும், குழுவாக பணியாற்றும் அவர்களது அணுகுமுறையும் எனக்கு பிடித்தது- இதன் காரணங்களால் அவர்களுடன் உடனடியாக இணைந்து பணியாற்ற தொடங்கி விட்டேன்.” என்றார்.
இந்த ஆண்டு, ‘வந்தே மாதரம்’ என்ற பாடல் பிறந்து 150 ஆண்டுகளைக் குறிக்கிறது. இந்த கவிதை பக்கிம் சந்திர சாட்டர்ஜியின் ‘ஆனந்த மடம்’ நாவலில் முதன் முதலாக இடம் பெற்றது. வீரியமிக்க தேச உணர்வைத்தூண்டும் இந்த கவிதை ஆங்கிலேய சாம்ராஜ்யத்தின் அடித்தளத்தை அசைத்துப் பார்த்தது.” என்றார்.
படத்தைப் பற்றி கதாசிரியர் வி. விஜேந்திர பிரசாத் பேசுகையில், ” வந்தே மாதரம் என்பது மந்திர வார்த்தை என நான் உணர்கிறேன். கொடுங்கோன்மை மற்றும் அநீதிக்கு எதிராக தேசம் ஒன்றுபட மகரிஷி பக்கிம் சந்திர சட்டர்ஜி வழங்கிய மந்திர சொல் அது. அதனை நாங்கள் ‘1770’ படைப்பில் கையாண்டிருக்கிறோம். அத்துடன் சுதந்திர வேள்வியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட முகம் அறியாத வீரர்களின் கதையுடன் இதனை இணைந்திருக்கிறோம்.” என்றார்.
‘1770’ திரைப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் வங்காள மொழிகளில் உருவாகவிருக்கிறது. நவராத்திரி திருவிழா தொடங்குவதற்கு முன் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகிறது. தீபாவளி பண்டிகையின் போது படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளை பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே படத்தின் இயக்குநரான அஷ்வின், தன்னுடைய குழுவுடன் இணைந்து காலகட்டத்தை ஆராய்ந்து, தனித்துவமான காட்சியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் என படக்குழுவினர் தெரிவித்தனர்.