திரை விமர்சனம்

ஜீவி 2’ திரை விமர்சனம்

ஒரு படம் ஹிட்டடித்துவிட்டால் அதன் இரண்டாம் பாகம் வெளிவருவது ட்ரெண்டாகிவிட்டது. அந்தவகையில் ஜீவி முதல் பாகம் வெளிவந்தபோது அட இப்படியொரு கதையை எப்படி யோசித்திருப்பார்கள் என்று பலரையும் பேசவைத்தது. வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரிய வரவேற்பை பெற்றது.

இதனைத்தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் ‘ஜீவி 2’  நாளை ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது. எப்படி இருக்கிறது இரண்டாம் பாகம்?

முதல் பாகம் பார்க்காதவர்கள் இரண்டாம் பாகத்தின் கதையை எளிதாக புரிந்துக்கொள்ளக்கூடிய வகையில் முன் கதை சுருக்கத்துடன் படம் தொடங்குவது சற்றே ஆறுதல்.

முக்கோண விதி, தொடர்பியல், மையப்புள்ளி போன்ற வினைகளில் நம்பிக்கைகொண்ட நாயகன் வெற்றியின் திருமணத்துக்குப் பிறகான வாழ்க்கை, மனசுக்கு நிறைவான பயணமாக கடந்துகொண்டிருக்கையில் தனது பழைய நண்பன் கருணாகரனை சந்திக்கிறார்.  இவர்களின் நட்புக்கிடையே புதிய வரவாக வந்து சேர்கிறார் முபாஷிர். இப்போது மீண்டும் வெற்றியை பீடிக்கிறது தொடர்பியல் விதி. பட்ட காலிலேயே படும் என்பதைபோல வெற்றியின் வாழ்க்கையை துயரம் துரத்துகிறது. அதிலிருந்து வெற்றி விடுபெறுகிறாரா இல்லையா என்பதே க்ளைமாக்ஸ்.

நாயகன் வெற்றி வெகு சில படங்களே நடித்திருந்தாலும் இவருக்கு மட்டும் எப்படி இப்படியான கதைகள் அமைகிறது என தான் தேர்வு செய்யும் படங்கள் பற்றி பேச வைப்பதே நாயகன் வெற்றியின் வெற்றியாகிவிட்டது. அந்தவரிசையில் ‘ஜீவி2’ வையும் சேர்க்கலாம் என்றாலும் திரைக்கதையில் முதல் பாகத்தின் வேகமும் விவேகமும் இதில் வெகுவாக குறைவதால் சற்றே அதிருப்தி அளிக்கிறது ‘ஜீவி2’.

சந்தோஷம், துக்கம், அதிர்ச்சி, இழப்பு என எல்லா உணர்ச்சிகளுக்கும் ஒரே மாதிரியாக வெற்றி ரியாக்ட் செய்வது சலிப்பை தருகிறது. வெற்றியின் பார்வையற்ற மனைவியாக வரும் அஸ்வினியின் நடிப்பில் அத்தனை எதார்த்தம். பார்வையற்ற கேரக்டர் என்றாலே பலரும் ஓவர் ஆக்டிங் செய்வதுண்டு. ஆனால் நிஜமான பார்வையற்றவர்களின் உடல்மொழி எப்படி இருக்குமோ அப்படியான உடல்மொழியை கொடுத்து கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் அஸ்வினி.

வெற்றியின் நண்பர்களாக வரும் கருணாகரன், முபாஷிர், அஸ்வினியின் மாமாவாக வரும் மைம் கோபி தங்கள் கேரக்டர்களுக்கு சிறப்பு சேர்த்துள்ளனர்.

கே.எல்.பிரவினின் எடிட்டிங், சுந்தரமூர்த்தியின் பின்னணி இசை, பாடல்கள், பிரவீன் குமாரின் ஒளிப்பதிவு மூன்றும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. முதல் பாகத்தில் பாராட்டையும், வரவேற்பையும் அள்ளிக்குவித்த இயக்குனர் வி.ஜே.கோபிநாத் இரண்டாம் பாகத்தின் திரைக்கதையிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் ‘ஜீவி2’வும் பேசப்பட்டிருக்கும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE