‘ரைட்’ திரை விமர்சனம்!
சென்னைக்கு பிரதமர் வரும் ஒரு நாள். கோவளம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருக்கும் நட்டி பிரதமரின் பாதுகாப்பு பணிக்காக வந்துவிடுகிறார். அப்போது காவல் நிலையத்தில் ஒரு ரைட்ட,ர் சில காவலர்கள், சில குற்றவாளிகள், தனது மகனை காணவில்லை என்று புகார் கொடுக்க வந்த ஒருவர், திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக வந்த ஒரு பெண் சப் இன்ஸ்பெக்டர் என வழக்கம் போலவே காவல் நிலையம் இயங்கிக்கொண்டிருக்கும்போது மர்ம நபரிடமிருந்து ஸ்டேஷனில் பாம் வைத்திருப்பதாக போன் வருகிறது.
எவனோ மிரட்டி பார்க்கிறான் என்று அலட்சியம் காட்டும் நேரத்தில் ஸ்டேஷனுக்கு வெளியே வெடிக்கிறது பாம். அவ்வளவுதான் பரபரப்பாகிறது போலீஸ் ஸ்டேஷன். மிரட்டியவன் யார்? அவனது கோரிக்கை என்ன? பிரதமர் வரும் நேரத்தில் இந்த விஷயம் வெளியே தெரிந்தால் சிக்கலாகிவிடும் என்று நினைக்கும் காவல் துறையின் அடுத்த ஸ்டெப் என்ன? காவல் நிலையத்தில் வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டிருப்பவர்களின் நிலை என்ன? என்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது அடுத்தடுத்து நிகழும் திக் திக் காட்சிகள்!
இன்ஸ்பெக்டராக நட்டிக்கு காட்சிகள் குறைவு என்றாலும் சிறப்பாக நடித்திருக்கிறார். பரபரப்பின் உச்சத்தில் இருக்கும்போது திடீர் எண்ட்ரி கொடுத்து சிக்கல்கள்களை அவிழ்க்கும் இடங்கள் அருமை.
காணாமல் போன மகனை கண்டுப்பிடித்துக்கொடுக்க பதறும் பாசக்கார தந்தையாக அருண்பாண்டியனின் கதாபாத்திரம் கனம். தன் புகாருக்கு நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் செய்யப்படும் இடத்தில் காடும் கோபம், ஸ்டேஷனில் குண்டு வைத்ததாக தன் மீது சந்தேகப்படும்போது காட்டும் பதற்றம் என அருண்பாண்டியன் தனது கேரக்டருக்கு நியாயம் சேர்த்திருக்கிறார். சப் இன்ஸ்பெக்டராக அக்ஷரா ரெட்டி. கதாபாத்திரத்தின் தன்மை புரிந்து கம்பீரம் காட்டி இருக்கிறார். ரைட்டராக மூணாறு ரவியும் சிறப்பாக நடித்துள்ளார்.
நீதிபதியாக நடித்திருக்கும் வினோதினி, இளம் ஜோடியாக நடித்திருக்கும் ஆதித்யா சிவகுமார் மற்றும் யுவினா, கைதியாக நடித்திருக்கும் தங்கதுரை, பெண் காவலராக நடித்திருக்கும் நடிகை என அனைவரும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் குணா பாலசுப்பிரமணியனின் இசையில் பின்னணி இசை காட்சிகளில் இருக்கும் பதற்றம், கதாபாத்திரங்களிடம் இருக்கும் பயம், திரைக்கதையின் வேகம் ஆகியவற்றுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் மிக கச்சிதமாக பயணித்திருக்கிறது.
ஒரே இடத்தில் கேமரா பயணிக்கும் உணர்வே ஏற்படாத வகையில் காட்சிகளை படமாக்கியிருக்கிறார் எம்.பத்மேஷ். சின்ன லைனை வைத்துக்கொண்டு அதை திக் திக் திரைக்கதையாக்கியிருக்கிறார் இயக்குநர் சுப்பிரமணியன் ரமேஷ்குமார்.
‘ரைட்’ தப்பில்லை!