‘பல்டி’ திரை விமர்சனம்!
தமிழ்நாடு- கேரளா பார்டரில் கறி கடை வைத்திருப்பவர் ஷேன் நிகம். இவருடைய நண்பர் சாந்தனு. வேலையைத் தாண்டி அவ்வப்போது நண்பர்களுடன் இணைந்து கபடியும் ஆடுகிறார்கள். பஞ்சமி ரைடர்ஸ் என்ற கபடி அணியில் விளையாடும் இவர்கள் செல்வராகவனின் பொற்றாமரை அணியைத் தோற்கடிக்கிறார்கள்.
கபடியில் கிங்காக இருக்கும் ஷேன் நிகமையும் சாந்தனுவையும் பொற்றாமரை அணிக்காக பெரிய தொகையை கொடுத்து இமுக்கிறார் செல்வராகவன். கந்துவட்டி பிசினஸ் செய்து அப்பாவி மக்களின் வயிற்றில் அடிக்கும் செல்வராகவன், ஷேன் நிகமையும் சாந்தனுவையும் தனது தொழிலுக்கும் பயன்படுத்திக்கொள்ள நண்பர்களின் வாழ்க்கை எப்படியெல்லாம் தடம் மாறுகிறது என்பதே ‘பல்டி’.
ஷேன் நிகமுக்கு இது 25ஆவது படம். கபடியில் காட்டும் வேகம், நண்பன் சாந்தனுவுக்காக காட்டும் பாசம் என நன்றாகவே களமாடியிருக்கிறார். ரொமான்ஸ், செண்டிமெண்ட் ஏரியாவிலும் கலக்கி ஸ்கோர் அள்ளுகிறார்.
தனது உலகமே நண்பர்கள்தான் என எடுக்கும் முடிவுகளில் அதனால் சந்திக்கும் தடுமாற்றங்களில் சாந்தனு நச்! ஆனால் முக்கியமான தருணம் நோக்கி கதை நகரும் கட்டத்தில் நடிப்பில் போதிய அழுத்தத்தை கடத்தாதது ஏமாற்றம்!
நடிப்பு ராட்சசி பட்டியலில் சேர்ந்திருக்கும் ப்ரீத்தி அஸ்ராணிக்கு இதில் பெரிய வேலை இல்லை. ஆனாலும் தான் வரும் இடங்களில் பிரித்து மேய்ந்திருக்கிறார். வித்தியாசமான கெட்டப்பிலும் ஆக்ஷனிலும் அல்போன்ஸ் புத்திரன் சபாஷ்! கந்துவட்டி வில்லனாக செல்வராகவன், பூர்ணிமா இந்திரஜித்தின் நடிப்பும் சிறப்பு!
ஒளிப்பதிவாளர் அலெக்ஸ் ஜே.புலிக்கலின் மேஜிக்! ஷேன் நிகமின் கை மேனரிஸம் தொடங்கி இந்த ஆக்ஷன் படத்தின் ஸ்டன்ட் காட்சிகளுக்குச் சண்டைப் பயிற்சியாளர்கள் பெரும் உழைப்பைச் செலுத்தியிருக்கிறார்கள். கபடி வீரர்கள் என்பதால் அந்த விளையாட்டின் வடிவிலேயே சண்டைக் காட்சிகளை வடிவமைத்திருப்பது சுவாரஸ்யம்!
முதல் பாதி திரைக்கதையாகத் தேறினாலும், இரண்டாம் பாதி ரம்…..பமாக அறுத்துக் கொண்டே நீள்வது பெரும் சோகம். படத்தொகுப்பாளர் சிவகுமார் வி.பணிக்கர், இந்தப் பிரச்னைகளைக் களைந்து கொஞ்சம் சீர்படுத்தியிருக்கலாம்.
ஜாலக்காரி, பல்டி டைட்டில் பாடல் எனப் பாடல்களில் சாய் அபயங்கர் கொடுத்திருப்பது ஃப்ரஷ் வைப்! மென்மையான ஹம்மிங், பரபரக்கும் மாஸ் எனப் பின்னணி இசையிலும் 10000 ஆராவை கொண்டு அடித்தாடுகிறார். படத்தின் முக்கிய அங்கமாக விளங்கும் மூன்று குழுக்களுக்குள் இருக்கும் மோதல் எத்தனை பெரிது, அவர்களுக்குள் இருக்கும் அந்தப் பகையின் தீவிரமென்ன என்பதை விளக்காதது போதாமையாகி இருக்கிறது.
குண்டும் குழியுமான லாஜிக்கில் திரைக்கதை வண்டியை இயக்குநர் உன்னி சிவலிங்கம் ஏற்றி இறக்குவதால் படம் பார்ப்பவர்களுக்கு அவ்வப்போது அலுப்பு ஏற்படுகிறது.
இப்படி சில குறைகள் இருந்தாலும் வெற்றிக் கோட்டை தொட்டிருக்கிறது இந்த ‘பல்டி’.