வெள்ளை இதயமாக தெரியும் இட்லி ! ‘இட்லி கடை’ : நமது பார்வை
“ஆறு, குளம், ஆடு, மாடு, சொந்தம் எல்லாத்தையும்விட மாசில்லாத காத்து.. இதெல்லாம் மேம்பட்ட வாழ்க்கை இல்லையா?… காரு, பங்களா, ஏசிதான் மேம்பட்ட வாழ்க்கையா?”
படத்தின் ஓரிடத்தில் இப்படியொரு கேள்வியை வைப்பார் ராஜ்கிரண். புரட்டிப்போடும் உரையாடல் இல்லையென்றாலும் இந்த எதார்த்தம் உரைக்கும் உண்மைதான் மனிதத்தின் வேர்! இதுதான் ‘இட்லி கடை’யாக மலர்ந்திருக்கிறது.
கதை…
சங்கராபுரத்தில் சிவநேசன் இட்லி கடைதான் சுத்துவட்டார ஊர்களின் அடையாளம். ராஜ்கிரண்தான் சிவநேசன். ஆட்டுக்கல்லில் அரிசி உளுந்தை அரைத்து ஆவி பறக்க பறக்க இவர் சுட்டுப் போடும் இட்லிக்கு அத்தனை நாக்குகளும் அடிமை. இவரது மகன்தான் தனுஷ். என்னதான் அப்பா கடை ஃபேமஸ் என்றாலும் அதை பெரிய அளவில் செய்ய வேண்டும் என்பதுதான் தனுஷின் ஆசை. கேட்டரிங் முடித்து பாங்காங்க்கில் ஸ்டார் ஹோட்டல் சாம்ராஜ்யம் நடத்தும் சத்யராஜ் கம்பெனியில் பெரிய பொறுப்பில் இருக்கிறார்.
கார்ப்பரேட் சுகம்; கூடவே சத்யராஜ் மகள் ஷாலினி பாண்டேவுடன் காதல் என்று ஏதேதோ தனுஷின் கண்ணை மறைக்க, ஊரில் இருக்கும் பெற்றவர்கள் மீது அக்கறை குறைகிறது. ஒருநாள் அப்பா ராஜ்கிரண் இறந்த செய்தி இடியாய் விழுகிறது. சங்கராபுரம் வரும் தனுஷ் சந்திக்கும் மனிதர்கள், பிரச்சனைகளே ’இட்லி கடை’யின் மிச்ச ருசி!
திரையில் ஆறாக ஓடும் ரத்தம்; காதை பதம் பார்க்கும் துப்பாக்கி சப்தம்; கண்ணை பிழையாக்கும் கவர்ச்சி காட்சிகள்; வாழ்க்கை முறைகளில்கூட வன்முறையை கக்கும் காட்சி அமைப்புகள் என இப்போது வந்துகொண்டிருக்கும் படங்களுக்கு மத்தியில். தனது வாழ்க்கையில் சந்தித்த அனுபவித்த அனுபவங்களை கற்பனைகளில் நனைத்து ‘இட்லி கடை’யை சமைத்ததற்காகவே இயக்குநர் தனுஷுக்கு சபாஷ்!
ஹீரோயிசத்துக்காக தேவையற்ற ஆணிகளை அடித்து தனது கேரக்டரை தொங்கவிட்டுக்கொள்ளாமல் கதை கேட்பதை மட்டும் செய்யும் கதாபாத்திரமாக தனுஷ் நடிப்பு ஆகச் சிறப்பு. எது வாழ்க்கை, எதில் நிம்மதி என்று உணரும் கட்டங்களில் உருமாறும் அவரது உடல்மொழிக்கு ஒரு அவார்ட் பார்சல்.
சிவநேசனாக வழக்கம்போலவே கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார் ராஜ்கிரண். இலையில் இவர் வைக்கும் இட்லிக்கு க்ளோசப் போடும் இடத்தில் அது வெள்ளை இதயமாகவே தெரிகிறது. தனக்கு இருக்கும் நல்ல பெயரை வைத்துக்கொண்டு நாலு காசு சம்பாதிக்கும் எண்ணம் இன்றி செய்யும் தொழிலில் திருப்தி அடையும் ராஜ்கிரண் கேர்க்டர், ஆடியன்ஸுக்கு கலப்படமற்ற அன்பை கடத்துவதை உணரமுடிகிறது.
ஆனாலும் இவ்வளவு கேடுகெட்ட எண்ணம் கொண்டவனாக இருக்கக்கூடாது என்று எரிச்சலடைய வைப்பதே அருண்குமார் நடிப்புக்கு கிடைக்கும் பாராட்டு. அப்பா சத்யராஜின் ஊதாரி மகனாக தனுஷை பர்க்கும்போதெல்லாம் வெடிக்கும் எரிமலையாக வில்லத்தனத்தில் வெளுத்துவாங்கியிருக்கிறார் அருண்.
மிக மிக இயல்பாக அறிமுகமாகும் நித்யாமேனன் வழக்கம்போலவே நடிப்பில் மனசை டச் செய்கிறார். தனுஷ் மீது காதல் பூக்கும் தருணங்களில் அவரது பேச்சும் நடிப்பும் பேரழகு!
கார்ப்பரேட் மிடுக்கும் தெனாவட்டும் சத்யராஜுக்கு அசால்ட்டாக ஒட்டிக்கொள்கிறது. ஆயிரம் கோடிக்கு அதிபதி என்றாலும் ஒரு தந்தையாக அருண்விஜய்யின் நடத்தை கண்டு கலங்குமிடம் தேர்ந்த நடிப்பு!
பணத்துக்காக சலாம் போடும் கெட்ட போலீஸாக பார்த்திபன் வெகு சில காட்சிகளே வந்தாலும் வருகிற இடங்களிலெல்லாம் அப்ளாஸ். க்ளைமாக்ஸில் அவர் செய்கிற ஒரு சம்பவம் சூப்பர்!
தனுஷின் இட்லி கடை மீது ஒரு கண்ணும் நித்யாமேனன் மீது இன்னொரு கண்ணும் வைக்கும் புரோட்டா கடை ஓனராக சமுத்திரகனி செய்யும் அட்டகாசங்கள்… அட்டகாசம்!
வெளிநாட்டிலிருந்து திரும்பும் தன்னை தனது தாய்க்கே அடையாளம் தெரியாமல் கேட்கும் இடத்தில் பேச்சு வராமல் தவிக்கும் இளவரசு, கணவன் இறந்தபிறகு அவரை நினைத்து நினைத்தே ’போய்ச்சேரும்’ கீதா கைலாசம், பணக்கார காதலால் தனுஷை அதிகாரம் செய்யும் ஷாலினி பாண்டே என மற்ற கேரக்டர்களும் சிறப்பாகவே செதுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இட்லியை ருசி பார்த்து சொல்லும் அந்த பெரியவர் கேரக்டர் ஆஹா.. அற்புதம்!
பாங்காக் பிரமாண்டம் ஒரு பக்கம் கிராமத்தின் இயல்பும் அழகும் இன்னொரு பக்கம் என களத்திற்கு பொருத்தமான கிரண் கெளஷிக்கின் ஒளிப்பதிவு லவ்லி! பொருத்தமற்ற இடங்களில் வந்தாலும் ஜி.வி.பிரகாஷின் இசையில் இரண்டு பாடல்கள் ஈர்ப்பு. பின்னணி இசைக்கும் பாராட்டு!
பிரான்சைஸ் என்ற பெயரில் உணவகங்கள் நடத்தும் பித்தலாட்டம், ஊர்களில் வேர்களாய் விரிந்து கிடக்கும் மனிதம் என போகிற போக்கில் விதைக்கும் விஷயங்கள் மனதின் ஆழம் தொடுகிறது.
பெரிய செல்வாக்குள்ள ஒரு குடும்பம் ஒட்டுமொத்தமாக கிராமத்தில் டேரா போடுவது.. இட்லி கடை உருவான கதையை இழுத்துச் சொல்லும் இடங்கள் என படத்தில் குறைகள் இருந்தாலும் இயக்குநர் தனுஷ் மனசை போட்டு சமைத்திருக்கும் இந்த ‘இட்லி கடை’யின் ருசி அருமை!