ஈஸ்வர தோட்டத்தை தரிசிப்பதற்காகவே இன்னொருமுறை பார்க்கலாம்! : ‘காந்தாரா’ REVIEW
ஈஸ்வர பூந்தோட்டமான காந்தாரா வனத்தில் நாயகன் ரிஷப் ஷெட்டி தனது மக்களுடன் வசித்து வருகிறார். ஈஸ்வர பூந்தோட்டத்தில் பெரும் இயற்கை வளம் இருப்பதை அறிந்து, வனத்திற்குள் வசிக்கும் ஓர் இனமும், பாங்கரா மன்னர் சாம்ராஜ்ஜியமும் அதை அடைய நினைக்கிறது. பல சூழ்ச்சி வேலைகளைச் செய்து ஈஸ்வர பூந்தோட்டத்தை அடைய நினைக்கும் ஏமாற்றுக்காரர்களுடன் போரிட்டு காந்தாராவை ரிஷப் ஷெட்டி காப்பதுதான் கதை!
‘காந்தாரா’ முதல் பாகம் மூலம் ஈர்த்த ரிஷப் ஷெட்டி, இயக்குநராக இதிலும் கடுமையான உழைப்பை கொட்டியிருக்கிறார்.மக்களின் நலனுக்காகத் திடகாத்திரமான உடல்மொழியில் அனைத்தையும் எதிர்கொள்பவராகவும், மக்களைப் பாதுகாக்கத் தீயவர்களைப் போரிட்டு துவம்சம் செய்பவராகவும், நாயகன் ரிஷப் ஷெட்டி நடிப்பில் காட்டியிருக்கும் அக்கறை அர்ப்பணிப்பு அபாரம் !தனக்குள் தெய்வம் புகுந்து சாமி ஆடும் காட்சிகளில், தன் முகபாவனைகளில் உடல்மொழியில் மெய் சிலிர்க்க வைக்கிறார்.
பாங்கரா அரசனாக வரும் குலசேகரா கதாபாத்திரத்தில் நடிகர் குல்ஷன் தேவையா, பார்வையாளர்களுக்குக் கோபத்தையும் வெறுப்பையும் உண்டாக்கி, கதாபாத்திரத்திற்கு அத்தனை நியாயம் சேர்த்திருக்கிறார். அட்டகாசமான நடிப்பை அநாயசமாக செய்திருக்கிறார்.
இளவரசி கனகவதியாக ருக்மினி வசந்த் தேவதை அழகில் ஈர்க்கிறார். நடிப்பில், மிடுக்கில், தோற்றத்தில் அத்தனை வசீகரம். மயக்குகிறார் என்றே சொல்லலாம். அதிலும் க்ளைமாக்ஸில் அவரது கேரக்டர் எதிர்பாராத திருப்பத்தை தொடுவது திடுக் அனுபவம்.
வஞ்சகம் செய்யும் எண்ணமிருந்தாலும், சாம்ராஜ்ஜியத்தைக் காப்பாற்றிக் கொள்ளப் பொறுமையைக் கடைப்பிடிக்கும் ராஜசேகர் கதாபாத்திரத்தில் ஜெயராம், அனுபவ நடிப்பால் நம் மனதில் இடம்பிடிக்கிறார்.இவர்களுடன் பிரமோத் ஷெட்டி, பிரகாஷ் துமினாட், ராகேஷ் பூஜாரி, கடம்பர்கள் தலைவனாக வரும் சம்பத் ராம் உள்ளிட்ட அனைவரும் சிறப்பு!
ஈஸ்வர பூந்தோட்டத்தின் அழகு மிரட்சியும் படம் முடிந்து வெளியே வந்தபிறகும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. வளம் மிகுந்த காந்தாராவின் வனம், வெண்மேகங்கள் மூடிய மலைகள் என இயற்கையை அதன் தன்மை மாறாமல் படம்பிடித்து இனிமையான அனுபவத்தைத் தருகிறார் ஒளிப்பதிவாளர் அரவிந்த் எஸ். காஷ்யப்.
சிங்கிள் ஷாட் போலவே தைக்கப்பட்டிருக்கும் சில சண்டைக் காட்சிகள், மிரட்டலான தேர் ஊர்வலம், குதிரை ஓட்டம், நாயகன் சாமியாடும் காட்சிகள், க்ளைமாக்ஸ் போர்க் காட்சிகள் எனக் குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்குப் பல ஹைலைட்டான காட்சிகள் படத்தில் உண்டு!
பாங்கரா எல்லைக் கதவுகள், அரண்மனைகள், போர்க் கருவிகள் எனக் கண்கவர் விஷுவல்களுக்குப் பெரும் விருந்தளித்து, தனித்து நிற்கிறார் கலை இயக்குநர். இசையமைப்பாளர் அஜ்னீஷ் பி. லோக்நாத், படத்தின் பின்னணி இசையில் ஆடியிருப்பது ருத்ரதாண்டவம்!
பஞ்சுருளி தெய்வத்தின் பின்கதை, கடம்பா சாம்ராஜ்ஜியம் எனக் கற்பனை கலந்த வரலாற்றுக் கதைகளை அடுத்தடுத்து சரியான மீட்டரில் கோர்த்து, எழுத்தாளராகவும் கவனம் ஈர்க்கிறார் ரிஷப் ஷெட்டி. தெய்வீகத் தன்மை, ஆக்ஷன் என அத்தனையும் ஓவர்டோஸ் ஆகாமல் கவனித்துக் கொண்டதும் எழுத்தின் முதிர்ச்சி.
ஈஸ்வர தோட்டத்தை தரிசிப்பதற்காகவே இன்னொரு முறை ‘காந்தாரா’வை பார்க்கலாம்!
பழங்குடியின மக்களின் உழைப்பைச் சுரண்டி, அவர்களின் வளத்தையும் பிடுங்கிக் கொள்ள நினைத்த மன்னர்களின் வரலாற்றையும் விமர்சிக்கும் இடத்தில் `காந்தாரா’ தனித்து நிற்கிறது.