சினிமா செய்திகள்

அதிரடி காட்டும் மகேந்திரன் : மிரட்டும் ‘அர்த்தம்’ டீசர்

வாரிசு நடிகர், வாரிசு நடிகை என்ற பஞ்சாயத்து சமீப காலமாக கோலிவுட்டில் நடந்துவருகிறது. யாருடைய வாரிசாக இருந்தாலும் திறமை இல்லாவிட்டால் எந்த ஃபீல்டாக இருந்தாலும் ஜெயிப்பது எளிதல்ல. அஜித் பேசுற மாதிரி  ‘ஒவ்வொரு நிமிஷமும் ஏன் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்குனதுடா’ன்னு எல்லாருமே வசனம் பேசிவிடமுடியாது. அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சினிமாவில் எந்த பின்னணியும் இல்லாமல் நிறைய சோதனைகளை கடந்து தன்னை வளர்த்துக்கொண்டவர் மாஸ்டர் மகேந்திரன்.
தற்போது இவர் நடித்து வெளிவரவிருக்கும் படம் ‘அர்த்தம்’. இதன் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இரண்டரை நிமிடம் ஓடக்கூடிய டீசர், படம் பார்க்கும் ஆவலை தூண்டுகிறது. பெரிய பட்ஜெட் படத்திற்கான மேக்கிங் ஸ்டைல் மிரட்டுகிறது. படத்தில் மகேந்திரன் நாயகனாவும் ஷ்ரத்தா தாஸ் நாயகியாகவும் நடிக்க முக்கிய வேடத்தில் நந்தா நடிக்கிறார். மற்றும் ரோபோ சங்கர், வினோத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  மினெர்வா பிக்சர்ஸ் சார்பில் ராதிகா ஸ்ரீனிவாஸ் தயாரித்துள்ள “அர்த்தம்” படத்தை மணிகாந்த் தல்லகுடி எழுதி இயக்கியுள்ளார். டீசர் வெளியீட்டை முன்னிட்டு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் ஸ்ரீனிவாஸ் பேசியதாவது:-
“நான் முன்னதாக இரண்டு தெலுங்கு படங்களை தயாரித்துள்ளேன் இது எனது முதல் தமிழ் படம். கடந்த லாக்டவுன் சமயத்தில் தான் இந்தப்படத்தை துவக்கினோம். இரண்டு மொழிகளில் எடுக்க திட்டமிட்டு மகேந்திரனை நாயகனாக்கினோம், அவர் சென்னை படப்பிடிப்பிற்கு மிக உதவியாக இருந்தார். இந்தப்படத்தில் மிக சிறப்பாக நடித்துள்ளார். படம் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம் .”

மாஸ்டர் மகேந்திரன் பேசியதாவது :-

 “நம்மை நம்பி ஹைதராபாத்திலிருந்து இங்கு வந்து தயாரித்திருக்கிறார் இந்த படத்தின் தயாரிப்பாளர்.  நல்ல கண்டெண்ட் ஜெயிக்கும் என்ற நம்பிக்கையில் உழைத்துள்ளோம். இவர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்த நினைத்தேன். என்னை நம்பி பெரிய பட்ஜெட்டில் ஒரு படத்தை தயாரித்துள்ளார்.இயக்குநர் மணிகாந்துக்கும் எனக்கும் சண்டை வந்ததே இல்லை. எங்களுக்குள் நல்ல புரிந்துணர்வு இருந்தது. என்னை நம்பி தமிழுக்கு வந்ததாக சொன்னார், நான் எங்கள் டெக்னீஷியன்களை நம்பலாம் என்றேன். படத்தை அழகாக எடுத்துள்ளார். ரோபோ, வினோத் எனக்காக நடித்து கொடுத்தார்கள். நிறைய நடிகர்கள் நடித்துள்ளனர். பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ள  ஷ்ரத்தா தாஸ் இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். மிகச்சிறந்த நடிகை; கடின உழைப்பாளி. தமிழில் பெரிய வெற்றி பெறுவார். நீங்கள் தரும் ஆதரவில் தான் என் திரைப்பயணம் இருக்கிறது.”
இயக்குநர் மணிகாந்த் தல்லகுடி பேசியபோது, “ இந்தப்படம் எனது முதல் தமிழ் படம். இரண்டு மொழிகளிலும் எடுத்துள்ளோம். சென்னையில் தான்  70 சதவீதம் ஷீட் செய்தோம். ரோபோ சங்கர், வினோத் மிகப்பெரும் ஆதரவாக இருந்தார்கள். மகேந்திரன் மிகப்பெரிய ஒத்துழைப்பை தந்தார். மிகச்சிறப்பாக நடித்துள்ளார். ஷ்ரத்தா தாஸ் அழகான நடிப்பை தந்துள்ளார். இப்படத்தில் உழைத்த அனைவருக்கும் பெரிய நன்றிகள்”என்றார்.

ஷ்ரத்தா தாஸ் பேசியபோது, “நான் தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம், பெங்காலி என 40 படங்களுக்கு மேல்  நடித்துள்ளேன். நான் தமிழில் முதல் முறையாக நடிப்பது மிகவும் மகிழ்ச்சி. இப்படத்தில் சைக்காலஜிஸ்ட்டாக நடித்துள்ளேன். நான் சைக்காலஜி டிகிரி முடித்துள்ளேன்.  அதனால் நடிப்பு எளிதாக இருந்தது. கிளாமர் குறைவான கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிப்பது மகிழ்ச்சி.”என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE