மனதை நெய்யும் ‘மருதம்’ திரை விமர்சனம்!
கலை… மக்களுக்கானது. கூத்து, நாடகம், சினிமா எந்த வடிவமாகினும் பொழுதுபோக்கிற்காக மட்டுமின்றி சமூகத்திற்கு ஒரு கருத்தை, பயனை விதைக்கும் கருவியாக இருக்கவேண்டும்.
ஒரு திரைக்கதையில் துகள் அளவேனும் சமூக அக்கறை இருப்பதே நல்ல சினிமா.. அல்லது தேவையான சினிமா. அந்தவகையில் தேவையான நல்ல சினிமாவாக மலர்ந்திருக்கும் திரைப் பூ ‘மருதம்’.
படம் பற்றி பந்தி வைக்க நமது பார்வை…
கதை?..
ராணிப்பேட்டையில் ஒரு கிராமம். ரசாயன உரங்களை வெறுத்து இயற்கை விவசாயம் செய்யும் ஒரு விவசாயி. அதற்காக மகசூலும் கிடைக்கிறது; அங்கிகாரமும் கிடைக்கிறது. ஆனால்.. இந்த மனித பிசாசுகள் நல்லதை, நல்லவனை அத்தனை எளிதாக வாழவிடாதே.. அந்த இயற்கை விவசாயிக்கு வருகிறது ஒரு பிரச்சனை. அது என்ன? வயலும் வயலும் சார்ந்த ‘மருதம்’ விதைக்கும் விழிப்புணர்வு என்ன? அது பேசும் வலிக்காத அரசியல் என்ன? படம் பாருங்கள் தயவு செய்து.
ஜனரஞ்சகம், வெகுஜன மக்களின் வரவேற்பை வைத்து பெயர் வாங்கி கோடிகள் சம்பாதிப்பதையே குறியாக கொண்ட ஹீரோக்கள் தவறவிடுவதை அல்லது ஞாபகமாக மறந்துபோவதை விதார்த் போன்ற கலைஞர்கள் முயல்வதும் மீட்டெடுப்பதும் சினிமாவில் நம்பிக்கையை பதிக்கிறது.
கதைப்படி தனது நிலத்தை பணம் தின்னி கழுகுகளுக்கு பறிகொடுத்து விடுகிறார் விதார்த். சட்டப் போராட்டம் நடத்தும் விதார்த், நீதிமன்றத்தில் தனது வழக்கில் தானே வாதிடுகிறார். எதிர்தரப்பு வக்கீல் குறுக்கிடும் போதெல்லாம் காட்டும் பதட்டம், கொஞ்சம் கொஞ்சம் தன் பக்கம் நீதி திரும்பும்போது விழிகளில் பெருகும் அந்த ஆனந்த கண்ணீர் என அந்த ஒரு காட்சி போதும் விதார்த். நீங்கள் எல்லா விருதுகளுக்கும் தகுதியான கலைஞன்.
அடுத்து.. கதாநாயகிக்கான இலக்கணத்தை உடைத்து படம் பார்ப்பவர்களின் உள்ளம் ஊடுருவும் ரக்ஷனா. ஒரு குழந்தைக்கு தாயாக நடித்தால் ஹீரோயினே இல்லை என்று நினைத்துக்கொண்டிருக்கும் கவர்ச்சி பொம்மைகளுக்கு மத்தியில், கதை, கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து விதார்த்தின் மனைவியாக நடித்திருக்கும் ரக்ஷனாவுக்கு பாராட்டுகள். தேவதையின் அழகும் அற்புத நடிப்பாற்றலும் கலந்திருப்பது ஆஹா…
காய்கறி மொத்த வியாபாரியாக அருள்தாஸ். ஆரம்பத்தில் அந்த கேரக்டர் கெட்டவன் போல சந்தேகிக்கப்பட்டாலும் பிறகு அவருக்குள் அந்த ஈரமும் உதவும் உள்ளமும் கையெடுத்து கும்பிடவைக்கும் சாமி. கடன் பட்ட துயரத்திலும் காமெடி பண்ணும் மாறன் கேரக்டரும் சிறப்பு.
இசைக்கருவிகளை உருட்டி எடுப்பதுதான் இசை என்று நினைத்துக்கொண்டு காதை பதம் பார்க்கும் இசையமைப்பாளர்களுக்கு மத்தியில். இசை அதுவல்ல.. பாடலோ, பின்னணி ஓசையோ இதயத்தின் அடி தொடுவதே இசை என்பதை மீண்டும் நிருபித்திருக்கிறார் ரகுநந்தன். சார்.. உங்களுக்கான காலமும் வரும்!
எந்த உறுத்தலும் செயற்கை வாசமும் எட்டிப்பார்க்காத அருள் கே.சோம சுந்தரத்தின் ஒளிப்பதிவில் நெல் வாசனையை நுகரமுடிகிறது. இதை நீங்கள் படம் பார்க்கும்போதுதான் உணர முடியும்.
கடைசியாக இயக்குநர் கஜேந்திரன். நீண்ட காலமாக திரைத்துறையில் பயணிப்பவருக்கு இதுதான் முதல் படம். எத்தனை படம் பண்ணுகிறோம் என்பதை தாண்டி எப்படி படம் பண்ண வேண்டும் என்பதே பிரதானம். அந்த வகையில் கஜேந்திரன் இந்தப் படம் மூலம் விதைக்கும் கருத்து வேர் பிடித்து நிற்கும்; அவரது எதிர்காலமும்.
வங்கிகள் மோசடி, கடன் என்ற பெயரில் விவசாயிகள் நசுக்கப்படும் செய்திகள், அரசு பள்ளிக்கூட கல்வி என கஜேந்திரன் வீரியமான விதைகளை விதைத்திருக்கிறார். லாஜிக், முதல் பாதி படத்தின் நாடகத்தன்மை, திரைமொழி குறைபாடு என குறைகள் இருப்பினும் ‘மருதம்’ மனதை நெய்வது அத்தனை சத்தியம்!
thanjai amalan