திரை விமர்சனம்

பிரதீப்பின் ஆக்டிங்கிற்கு ஹார்ட்டின்கள் பறக்கும்: ‘டியூட்’ விமர்சனம்!

ஈவென்ட் மேனேஜ்மெண்ட் நடத்தும் பிரதீப்புக்கும் காதலுக்கும் ஏழாம் பொருத்தம். தன்னை  காதலித்து கழற்றிவிட்ட பெண்ணின் கல்யாணத்தில் புகுந்து கலாட்டா செய்வதுடன் தொடங்குகிறது படம். பிரதீப் மீதோ அவரது மாமன் (சரத்குமார்) மகள் மமிதா பைஜூக்கு காதல். பிரதீப்போ அதை அலட்சியம் செய்கிறார். வெறுத்துப்போகும் மமிதா வெளியூருக்கு போகிறார். ஒரு கட்டத்தில் மமிதவை மறக்கமுடியாமல் தவிக்கும்போதுதான் அந்த தவிப்புக்கு காரணம் காதல் என்று புரிகிறது.

தாய் மாமனும் அமைச்சருமான சரத்குமாரை சந்தித்து மமிதாவை திருமணம் செய்துகொள்ள சம்மதம் சொல்கிறார் பிரதீப். அதன்படி மகள் மமிதாவை வரவழைக்கிறார் சரத். கல்யாண ஏற்பாடுகள் களைக்கட்டும் நேரத்தில்… தான் வேறொரு பையனை காதலிப்பதாக சொல்கிறார் மமிதா. நாயகி விரும்பும்போது நாயகன் வெறுத்தும், நாயகன் விரும்பும்போது நாயகி விலகுவதுமாக கண்ணாமூச்சி காட்டும் காதலின் முடிவு என்ன என்ற கேள்விக்கு விடை சொல்லும் டிராமாவாக மலர்ந்திருக்கிறது ‘டியூட்’.

40ஐ தாண்டியவர்களும் ரசிக்கக்கூடிய ஜென் ஜி கிட்ஸ் ரக கதையில் வழக்கம்போலவே அடித்து ஆடியிருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். கடலை போடுவது கலாட்டா செய்வது கைக்கெட்டிய காதலை இழந்து தவிப்பது என லவ் டிராக்கில் மேஜிக் செய்யும் பிரதீப்பின் ஆக்டிங்கிற்கு ஹார்ட்டின்கள் பறக்கும். இன்னொருத்தனின் காதலி என்று தெரிந்தும் மமிதாவிற்காக உதவி செய்வதும், காதல் கொடுத்த வலியை மறைத்துக்கொண்டு நடிப்பது என கேரக்டரில் பக்காவாக செட் ஆகியிருக்கிறார் பிரதீப்.

பிரதீப்பின் முறை பெண்ணாக மமிதா ஆஹா அழகு. சில நேரங்களில் பிரதீப்பையே தூக்கி சாப்பிடும் நடிப்பு எளிதாக கைகூடியிருக்கிறது. சரத்குமாரின் அரசியல் பலம், சாதி வெறிக்கு பயந்து பிரதீப்பை வைத்து நடத்தும் கல்யாண நாடக காட்சிகளில் அசத்துகிறார். அப்புறம் அந்த டான்ஸும் அட்டகாசம்.

இரட்டை குணம் கொண்ட கெட்ட தந்தையாக சரத்குமார் கரியரில் இந்த கேரக்டர் தனி ரகம். சீரியஸாக பேசிக்கொண்டிருக்கும்போது சட்டென மாறி “சும்மா பிராங்க் பண்ணேன்” என்று முகம் மாறுவது; நார்மலாக பேசிக்கொண்டிருக்கும்போது சீரியஸ் முகம் காட்டுவது என நடிப்பில் வெளுத்து வாங்கியிருக்கிறார்.

மமிதாவின் காதலன் பாரியாக வருபவர், பிரதீப்பின் அம்மாவாக ரோகிணி மற்றும் நேஹா ஷெட்டி, சத்யா என மற்ற கதாபாத்திரங்களும் சிறப்பு.

டெக்னிக்கில் ஏரியாவில் ஒளிப்பதிவும் ஆர்ட் டிபார்ட்மெண்டும் உழைப்பை கொட்டியிருக்கின்றனர். குறிப்பாக நிகேத் பொம்மி வைத்த ஒவ்வொரு ஃபிரேமும் கலர்ஃபுல் கவிதையாக ஜொலிக்கிறது. தயாரிப்பாளர் பணத்தை தண்ணீராக செலவழித்திருப்பது கலை இயக்கத்தில் தெரிகிறது. ஒரு அமைச்சர் வீட்டு கல்யாணம் எப்படி நடக்கும் அந்த இடம் எப்படி இருக்கும் என்பதை தத்ரூபமாக காட்டியிருக்கும் பிரமாண்ட செட் பிரமாதம்!

சாய் அபயங்கர் இசையில் இரண்டு பாடல்கள் தேர்ச்சி. பின்னணி இசையில் இன்னுமே தேவை முதிர்ச்சி!

முன்பே சொன்னதுபோல் ஜென் ஜி கிட்ஸின் பல்ஸ் பிடித்து கதை, திரைக்கதையை செதுக்கியிருக்கிறார் இயக்குநர் கீர்த்தீஸ்வரன். ஆரம்ப இருபது நிமிட காட்சிகள் போரிங்காக இருந்தாலும் இரண்டாம் பாதி படத்தில் விறுவிறுப்பு, காமெடி, எமோஷன், செண்டிமெண்ட் என கலந்துகட்டி ரசிக்க வைத்திருக்கிறார்.

‘டியூட்’ தீபாவளி ஸ்வீட்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE