விறுவிறுப்பை தரும் ‘ஆரியன்’ – விமர்சனம்!
ஒரு tv சேனலின் நேரலை நிகழ்ச்சி. நெறியாளர் ஷ்ரத்தா ஸ்ரீநாத் சிறப்பு விருந்தினரான ஒரு நடிகரை நேர்காணல் செயும்போது பார்வையாளராக வந்த எழுத்தாளர் செல்வராகவன் நடிகரை துப்பாக்கியால் சுட்டுத்தள்ளுகிறார்.
மொத்த அரங்கும் அதிர்ச்ச்சியில் உறைய.. அடுத்த ஐந்து நாள்களில் இன்னும் ஐந்து பேரைக் கொல்லப்போவதாக மிரட்டல் விடுக்கிறார் செல்வராகவன். நேரலை நிகழ்ச்சி என்பதால் மொத்த தமிழ்நாட்டுக்கும் செய்தி வைரலாகிறது. சம்பவத்தை விசாரிக்க காவல்துறை அதிகாரி விஷ்ணு விஷால் களமிறங்குகிறார். செல்வராகவன் பின்னணி என்ன? அவர் சொன்னபடி கொலைகள் நடந்தனவா? விஷ்ணு விஷால் தலைமையிலான காவல்துறை அவற்றைத் தடுத்ததா போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருக்கிறது அறிமுக இயக்குநர் பிரவீன்.கே-வின் ‘ஆரியன்’ திரைப்படம்.

போலீஸ் யூனிஃபார்ம் விஷ்ணுவின் உடல்வாகுக்கு ‘நச்’சென்று பொருந்துகிறது. துடிப்பு, மிடுக்கு என காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்திலும் கச்சிதமாகப் பொருந்துகிறார் . ஸ்டைலிஷ் ஆக்ஷனிலும் தெறிக்கவிட்டிருக்கிறார். எமோஷன் ஏரியாவில்தான் இன்னும் பயிற்சி தேவை!
ஆரம்ப காட்சியிலேயே திடுக்கிட வைக்கிறார் செல்வராகவன். ரியாக்ஷனில் மட்டும் ஏற்கனவே பார்த்து சலித்த செல்வராகவன் அடிக்கடி எட்டி பார்ப்பது மைனஸ். கதையின் போக்கிலேயே வந்து, தேவையான பங்களிப்பைச் செய்திருக்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். காதலோடு போராடும் மனைவியாக மானசா சௌந்திரி, காவல்துறை உயர் அதிகாரியாக அவிநாஷ்.ஒய், காவலாளியாக ஸ்டில்ஸ் பாண்டியன் போன்றோர் வந்து போகிறார்கள்.
மர்மத்தையும், பதற்றத்தையும் கடைசி வரை படம் பார்ப்பவர்களுக்கு கடத்துகிறார் ஒளிப்பதிவாளர் ஹரீஷ் கண்ணன். முக்கியமாக, இறுதிக்காட்சிக்கு முந்தைய இரவு நேரச் சண்டைக் காட்சியைச் சண்டைப் பயிற்சியாளர்கள் ஸ்டண்ட் சிவா, பிசி ஸ்டண்ட்ஸ் பிரபு கூட்டணியோடு சேர்ந்து ரசிக்க வைத்திருக்கிறார். முன்னுக்குப் பின்னாக விரியும் முதற்பாதி விசாரணைக் காட்சிகளை, விறுவிறுப்பு குறையாமல் சுவாரஸ்யமாகத் தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் சான் லோகேஷ்.

ஜிப்ரானின் இசையில், ‘அழகியலே’ பாடல் செவிக்கு இதம். பின்னணி இசையிலும் பரபரப்பை பற்றவைத்திருப்பது படத்திற்கு பலம். சேனல் செட், செல்வராகவனின் வீடு போன்றவற்றில் எஸ். ஜெயசந்திரனின் தயாரிப்பு வடிவமைப்பு கவனிக்க வைக்கிறது.
விஷ்ணு விஷாலின் வருகைக்குப் பிறகு, பரபரவென விரியும் தொடக்கக் கட்ட விசாரணைகளோடு, செல்வராகவனின் திட்டங்களும் களமிறங்க, பிரவீன் கே – மனு ஆனந்த் கூட்டணியின் எழுத்தில் விறுவிறுப்போடு சுவாரஸ்யமும் கூடுகிறது. ஐந்து நபர்கள் யார், யார், அவர்களின் பின்னணி போன்ற கேள்விகளை விளக்கும் காட்சிகளில் சற்றே அலுப்பு!
திரைக்கதையின் ட்விஸ்ட், திக் திக் காட்சிகள், இறுதிக்காட்சிக்கான எதிர்பார்ப்பு, எழுத்தாளரான செல்வராகவனின் எழுதப்படாத நாவல், அதைக் கதையோடு இணைத்த விதம் போன்ற சுவாரஸ்ய ஏரியா அலுப்பை சரிசெய்திருக்கிறது.
மொத்தத்தில் ‘ஆரியன்’ விறுவிறுப்பை தருகிறான்!

