திரை விமர்சனம்

குறிஞ்சி.. 38 ஆண்டுகளுக்கு பிறகும் மலரும் : ‘நாயகன்’ மறுபார்வை!

38 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் திரையில் மலர்ந்துள்ளார் ‘நாயகன்’. யெஸ்.. 1987ஆம் ஆண்டு ஜூலை 31 அன்று வெளியாகி சக்கைப்போடு போட்ட படம் ரசிகர்களுக்காக ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

மார்லன் பிராண்டோ நடித்த ‘தி காட் ஃபாதர்’ என்ற படத்தின் தழுவல் என்றும் 1980 களில் மும்பையை கலக்கிய டான் வரதராஜ முதலியாரின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட படம் என்றும் இருவேறு கதைகள் விவாதத்தில் இருப்பது ஒரு பக்கம் இருந்தாலும் படத்தின் கதை என்ன என்று பார்ப்போம்..

தொழிலாளர் சங்க தலைவரான தன் தந்தையை துப்பாக்கி குண்டுக்கு பலி கொடுத்து விட்டு, அதற்கு காரணமான ஒரு போலீஸ் அதிகாரியை கொன்றுவிட்டு, மும்பைக்கு தப்பி செல்கிறான் ஒரு சிறுவன். அந்த சிறுவன் வளர்ந்து, பெரியவனாகி தான் இருக்கும் பகுதியை ஆக்ரமிக்க வருபவர்களிடமிருந்து காப்பாற்றி, அந்த பகுதிக்கு தலைவனாகிறான். பலருக்கு நல்ல செயல்களைச் செய்யும் அவன், கடத்தல் தொழில்களிலும் ஈடுபட்டு டான் ஆகிறான். ஊருக்கு நல்லவனாக தெரியும் அவன், குடும்பத்தார்க்கு எவ்வாறு தெரிகிறான்? உண்மையிலேயே அவன் ‘நல்லவனா? கெட்டவனா? என்ற கேள்விகளுக்கு விடை சொல்வதே ‘நாயகன்’ .

வேலு நாயக்கர் கதாபாத்திரத்தில் கமல் வாழ்த்திருக்கிறார். ஒரு நடிகன் ‘மகா நடிகன்’ ஆவது என்பது சாதரணமான விஷயமல்ல. அவனுக்கு கையில் இருக்கும் முடி கூட சிறப்பாக நடிக்க வேண்டும். அது தான் ஒரு ‘மகா நடிகனின்’ நடிப்பு. கமல் இந்த படத்தில் நான்கு விதமான தோற்றத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். சக்திவேல், வேலு நாயக்கராக மாறும்போது உடல்மொழி அபாரம்.

இன்று அம்மா வேடங்களில் கலக்கும் தேசிய விருது நடிகை சரண்யாவின் அறிமுக படம் இது. ‘நாளைக்கு கணக்கு பரீட்சை, சிக்கரமா விட்டுடுவிங்கள?’ என்று கேட்கும் இடம், ஒரு வலி மிகுந்த வசனம். வெகுளியான காதலியாகவும், இரண்டு பிள்ளைகளுக்கு பாசமிகு அம்மாவாகவும் நடிப்பில் மிளிர்கிறார். ஜனகராஜின் நடிப்பு இந்த படத்தில் ஒரு சிறப்பம்சம். ஒரு நகைச்சுவை நடிகனிடமிருந்து ஒரு மாறுபட்ட நடிப்பை காட்டியிருப்பது இயக்குனரின் திறமை. கமலிடம் உண்மையை மட்டுமே சொல்லும் டெல்லி கணேஷ் நடிப்பு அருமை. மகனாக ‘நிழல்கள்’ ரவி, மகளாக கார்த்திகா, போலீஸ் அதிகாரியாக நாசர் என்று அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

படத்திற்கு பெரிய பலம், இசைஞானி இளையராஜாவின் இசை. இது அவரது 400வது படம். படத்தில் வரும் அணைத்து பாடல்களும் ஆஹா ரகம். குறிப்பாக பின்னணி இசை. ராஜா பல சமயங்களில் மனதை உருக வைக்கிறார். ‘தென்பாண்டி சீமையிலே’ பாடல்.. சொல்லி தெரியவேண்டுமா என்ன?…

மணிரத்னத்தின் எழுத்துக்கு கண்களாய் இருந்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார் பி.சி. ஸ்ரீராம். ‘நாலு பேருக்கு நல்லதுனா எதுவுமே தப்பில்ல’, ‘நீங்க நல்லவரா? கெட்டவரா?’, ‘அவன நிறுத்த சொல்லு, நான் நிறுத்துறேன்’ என்று பல இடங்களில் பாலகுமாரனின் வசனங்கள் மிளிர்கிறது. கலை இயக்கம் செய்த செவாலியர் தோட்டா தரணி தாராவி குப்பத்தை நம் கண் முன்னே நிறுத்துகிறார் . இத்தனை சிறப்புகளுக்கும் காரணமான இயக்குநர் மணிரத்னம், படத்தின் திரைக்கதை அமைப்பை மிகவும் சரியாக கையாண்டிருக்கிறார்.

குறிஞ்சி பூ 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் என்பார்கள். 38 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மலர்ந்த குறிஞ்சி.. ‘நாயகன்’.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE