‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ : திரை விமர்சனம்!
பிரபல தாதா ஆனந்தராஜ். இவர் கட்டளையை நிறவேற்ற காத்திருக்கும் ரவுடிகள் ஏராளம். நாளுக்குநாள் அதிகரிக்கும் ஆனந்தராஜின் அட்டகாசத்தை அடக்க நினைக்கிறார் போலீஸ் அதிகாரியான சம்யுக்தா. இன்னொரு பக்கம் தொழிற் போட்டியில் ஆனந்தராஜை போட்டுத்தள்ள ஸ்கெட்ச் போடுகிறது ஒரு டீம். இதிலிருந்து ஆனந்தராஜ் எஸ்கேப் ஆகிறாரா இல்லையா என்பதே ‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’யின் கதை.
வழக்கம்போல் வில்லத்தனம் வித்தியாச மேனரிஷம், நக்கல் வசனம் என வெளுத்து வாங்குகிறார் ஆனந்தராஜ். போலீஸ் சீருடையில் சம்யுக்தா கம்பீரம். ஆக்ஷனிலும் அனல் பறக்கிறது.
கொண்டித் தோப்பு வரதன் என்ற ரவுடி கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் முனீஸ்காந்த். ஆங்காங்கே சிரிக்கவும் வைப்பது சற்று ஆறுதல். ஆனந்தராஜின் மனைவியாக தீபா, மகளாக ஆராத்யா தங்கள் கேரக்டருக்கு சிறப்பு சேர்த்துள்ளனர்!

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் தாளம் போட வைக்கும் குத்துப்பாட்டும், மெய்மறந்து ரசிக்க வைக்கும் மெலொடி பாட்டும் படத்திற்கு பலமாக பயணித்திருக்கிறது. பின்னணி இசையிலும் குறையில்லை.
ஒளிப்பதிவாளர் அசோக்ராஜின் கேமரா காட்சிகளை கலர்புல்லாக படமாக்கி படத்தின் தரத்தை உயர்த்தியிருக்கிறது. கதை எழுதியிருக்கும் வி.சுகந்தி அண்ணாதுரை, ”ஆட்டம் போடுபவர்கள் ஒருநாள் நிச்சயம் அடங்கிப் போவார்கள், அப்போது அவர்களுக்கு சொந்தம் என்று நினைத்த எதுவும் அவர்களுடையது அல்ல, என்ற உண்மை தெரிய வரும்” என்ற கருத்தை உணர்த்த முயற்சித்திருக்கிறார். திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் ஏ.எஸ்.முகுந்தன், கதையாசிரியரின் கருத்து சீரியஸானதாக இருந்தாலும், அதை கமர்ஷியல் காமெடி ஜானர் மூலம் சொல்ல முயற்சித்திருக்கிறார்.
ஆனந்தராஜ் என்ற நடிகரை கதையின் நாயகனாக வைத்துக் கொண்டு காமெடி படமாக மட்டும் இன்றி மக்களுக்கு கருத்து சொல்லும் விதமாகவும் திரைக்கதையை கையாண்டிருக்கும் இயக்குநர் ஏ.எஸ்.முகுந்தன், அனைத்து விதமான கமர்ஷியல் அம்சங்களையும் சேர்த்து பார்வையாளர்களுக்கு பொழுதுபோக்கு விருந்து படைத்திருக்கிறார்.

