திரை விமர்சனம்

‘யெல்லோ’ – திரை விமர்சனம்!

கதையின் நாயகி பூர்ணிமா ரவி காதல் தோல்வியல் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார். இதிலிருந்து விடுபட பழைய நண்பர்களை தேடிச்செல்கிறார். தேடலின் முதல் ஆளாக இணைகிறார் வைபவ் முருகேசன். நண்பர்களை தேடிச்செல்லும் இவர்களின் பயணத்தில் கண்டடைவது என்ன? பெற்ற அனுபவங்கள் என்ன என்ற அடுத்தடுத்த அத்தியாயங்களை தொகுத்தால் ‘யெல்லா’ கதை தயார்.

நாயகி பூர்ணிமா ரவிக்கு அறிமுகம் தேவையில்லை. யூ டியூப் பிரபலம், சில படங்களிலும் முகம் காட்டியவர் என்றாலும், அவரது நடிப்பு பசிக்கு சரியான பந்தி வைத்துள்ள படம் ‘யெல்லோ’. வசீகர தோற்றம், மீட்டருக்கு மேல் தாண்டாத இயல்பான நடிப்பு என ஈர்க்கிறார், காதல் , சோகம், ஜாலி என எல்லா ஏரியாவிலும் கலக்கி இருக்கும் பூர்ணிமா ரவிக்கு வாழ்த்துகள்!

சாய் என்ற கேரக்டரில் பூர்ணிமாவின் நண்பராக படம் முழுக்க பயணிக்கும் வைபவ் முருகேசனும் கவனிக்க வைக்கிறார். சாய் பிரசன்னா, லீலா சாம்சன், வினோதினி வைத்தியநாதன், பிரபு சாலமன், நமீதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் கதாபாத்திரங்களும் படம் பார்ப்பவர்களின் மனதில் வெவ்வேறு விஷங்களை விதைத்துச்செல்கிறார்கள். இதுவே அந்த கதாபாத்திரங்களின் வெற்றி.

பயணிக்கும் ஒவ்வொரு லொகேஷனையும் கண்களுக்கு விருந்தய் காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் அபி ஆத்விக். குறிப்பாக கேரளா, கோவா காட்சிகள் அந்தந்த களத்திற்கே நம்மையும் அழைத்துச்செல்வது அழகான அனுபவம்!

பாடல்களுக்கு இசையமைத்துள்ள கிளிஃபி கிறிஸ், பின்னணி இசை அமைத்துள்ள ஆனந்த் காசிநாத் இருவரின் பணியும் கதையோடு பயணிப்பது படத்திற்கு பலம்.

ஒரு பெண்ணின் மனக்குழப்பம், அதற்கு மருந்தாக தேடிச்செல்லும் நட்புகள், போகும் பாதையும், சந்திக்கும் மனிதர்கள், வெவ்வேறு சூழல்கள் கொடுக்கும் தாக்கம் என ‘யெல்லோ’ ஸ்கிரிப்ட்டை சரியாக நெய்துள்ளார் இயக்குநர் ஹரி மகாதேவன்.

‘யெல்லோ’ நீங்களும் பார்க்கலாம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE