திரை விமர்சனம்

 “ஆரம்பிக்கலாமா..” ரேஞ்சில் அட்டகாசம் செய்யும் பேய்.. : ’ரஜினி கேங்’  விமர்சனம்!

ரஜினி கிஷனும் திவிவிகாவும் காதலர்கள். கூல்சுரேஷுக்கு திவிவிகா முறை பொண்ணு. அதனால அவர் மீது ஒரு கண்ணு. தங்கள் காதலுக்கு எதிர்ப்பு வரவே எஸ்கேப் ஆகி கல்யாணம் செய்துகொள்ள பிளான் செய்கிறது காதல் ஜோடி. இவர்களின் காதலுக்கு உதவுகிறார் முனீஷ்காந்த். ஒருவழியா திருமணம் முடிகிறது.

அடுத்து என்ன தேனிலவு.. கட்டிப்புடி சாங் இருக்கும் என்று நினைக்கிறீங்களா?.. அதுதான் இல்ல.  திவிவிகா கழுத்தில் தாலி ஏறிய கையோடு  திவிவிகாவின் ரியாக்‌ஷனே வேற மாதிரி ஆகுது. யெஸ். திவிவ்கா கழுத்தில் தொங்கும் தாலியில் ஒரு பேய் இருந்துகொண்டு ”ஆரம்பிக்கலாமா..” ரேஞ்சில் அட்டகாசம் செய்கிறது.

அதற்கான காரணமும், பேயை ஓட்ட போடும் பிளானும் என அடுத்தடுத்த காட்சிகள் பேயாட்டம் ஆடி க்ளைமாக்ஸில் நிற்பதே கதை.

ஆவிகள் பழி வாங்குவது புதிய களம் அல்ல; ஆனால் அதைத் தாலிக்குள் ஒளித்து வைத்தது, அதிலிருந்து அது எந்தச் சூழ்நிலையில் வெளியே வருகிறது, தாலி கட்டியவனை ஏன் தேடுகிறது என்பதையெல்லாம் ரசிக்கும்படியாக எழுதியிருக்கிறார் இயக்குநர்.

 

இதில் நாயகன் எதிர்கொள்ளும் ஆவித் துரத்தல் அட்ராசிட்டியில் முனிஷ்காந்தும் கல்கியும் பங்கெடுத்துக்கொள்வது நன்றாகவே எடுபட்டுள்ளது. அதேபோல், ஆவியே அதகளமான வில்லத்தனத்துடன் இருப்பதும் அது செய்யும் சேட்டைகளும் ரசிகர்களுக்கு நல்ல நகைச்சுவை ஹாரர் வேட்டை.

நாயகனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் ரஜினி கிஷன், காமெடி ஜானர் படத்திற்கு பொருந்தும் முகம். ஆட்டம், காதல், காமெடி என படம் முழுவதும் அசால்டாக நடித்திருப்பவர் முதல் படம் என்ற பயமே இல்லாமல் நடித்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் த்விவிகா, காமெடி மற்றும் காதல் பாடல்கள் என இரண்டு தளங்களிலும் கவர்கிறார். நடிப்பும் அளவு.

முனீஷ்காந்த் காமெடி என்ற பெயரில் ஒரே மாதிரியான ரியாக்‌ஷனை கொடுத்து பார்வையாளர்களை சலிப்படைய செய்கிறார். கூல் சுரேஷ் தேவையில்லாமல் கத்திக்கொண்டு இருப்பது காதை கிழிக்கிறது. மொட்ட ராஜேந்திரன், கல்கி  ஆகியோர் வரும் காட்சிகளிலும் காமெடி நெடி குறைவே.

இசையமைப்பாளர் எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபெர்ட்டின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கமர்ஷியலாக இருக்கிறது. ஒளிப்பதிவாளர் என்.எஸ்.சதீஷ் குமார், படத்தையும், பாடல் காட்சிகளையும் கலர்புல்லாக படமாக்கியிருக்கிறார்.

சாதாரணமான கதையை, மிக சாதாரணமாகவே படத்தொகுப்பு செய்திருக்கும் படத்தொகுப்பாளர் ஆர்.கே.வினோத் கண்ணா, காட்சிகளின் நீளத்தில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

எழுதி இயக்கியிருக்கும் எம்.எஸ்.ரமேஷ் பாராதி, முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். பார்வையாளர்கள் எந்தவித லாஜிக்கையும் பார்க்காமல் சிரிக்க வேண்டும் என்பதில் அதிகம் மெனக்கெட்டிருக்கிறார் இயக்குநர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE