காதலுக்கு குறுக்கே நிற்கும் வில்லன் வேறு யாருமல்ல… ‘அங்கம்மாள்’ திரை விமர்சனம்!
அங்கம்மாள்.. தலைமுறை தொடர்ச்சியாக ரவிக்கை அணியாத பழக்கத்தைக் கொண்டவர். காலமாற்றத்தில் தன் வயதொத்த பெண்கள்கூட ரவிக்கை அணியும் பழக்கத்திற்கு மாறிவிட, அங்கம்மாள் மட்டும் தன்னை மாற்றிக்கொள்ள மாட்டேன் என பிடிவாதமாக இருக்கிறார். பிடிவாத குணம் – தைரியம் – கொஞ்சம் அகந்தையின் கூட்டுக்கலவைதான் அங்கம்மாள். சுருட்டை ஊதிக்கொண்டே ஒரு பார்வை பார்த்தால் அங்கம்மாள் முன் யாரும் நிற்கமாட்டார்கள்.
கணவன் இறந்த பிறகு இரண்டு மகன்களை தனி ஒரு மனுஷியாக வளர்த்தெடுத்தவர். மூத்த மகன் பரணி கல்யாணமாகி, விவசாயத்தை பார்த்துக்கொள்ள, இளைய மகன் சரணை மருத்துவம் படிக்க வைத்து விடுகிறார் அங்கம்மாள்.

சரணுக்கு வசதியான குடும்பத்தை சேர்ந்த முல்லையரசியுடன் காதல். இவர்களின் காதலுக்கு குறுக்கே நிற்கும் வில்லன் வேறு யாருமல்ல. ரவிக்கை அணிய மறுக்கும் அங்கம்மாள்தான். அம்மா இப்படி இருப்பதை பார்த்தால் முல்லையரசியின் பெற்றோர் கல்யாணத்திற்கு மறுத்துவிடுவார்களோ என்ற பயம் சரணுக்கு. அதனால் அம்மா அங்கம்மாளை ரவிக்கை அணிய கட்டாயப்படுத்துகிறார். அங்கம்மாளோ முரண்டு பிடிக்கிறார். அடுத்தடுத்த திருப்பங்கள் மீதி கதை!
எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘கோடித்துணி’ கதையே ‘அங்கம்மாள்’ திரைக்கதையாகியுள்ளது.
உருட்டு முழி, முரட்டு பார்வை, சரளமாக உதிர்க்கும் கெட்ட வார்த்தைகள் என அங்கம்மாள் கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்திருக்கிறார் கீதா கைலாசம். ஆனாலும் சில இடங்களில் செயற்கைத்தனமும் எட்டிப்பார்க்கிறது. குறிப்பாக சுருட்டு பிடிப்பதில் எதார்த்தம் இல்லை.
காதலர்களாக சரணும் முல்லையரசியும் நிஜ காதலர்கள்போல நெருக்கமாக நடித்துள்ளனர். அம்மாவை எப்படியாவது ரவிக்கை அணிய வைத்துவிடவேண்டும் என்ற பதட்டத்தையும் தவிப்பையும் சரியாக கடத்தியிருக்கிறார் சரண். முல்லையரசி வெகு இயல்பாக நடித்துள்ளார். ஒவ்வொரு காட்சியிலும் கருப்பு தேவதையாக கவர்ந்திழுக்கிறார்.

மூத்த மகனாக பரணி. இதற்கு முன் நிறைய படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படத்தில்தான் முதல்முறையாக நடிக்காமல் நடித்திருக்கிறார். அத்தனை இயல்பு. தனது ஆற்றாமை, இயலாமை, ஏக்கம், ஏமாற்றம் என கலந்துக்கட்டிய உணர்வுகளை அழகாக பதிவு செய்திருக்கிறார். இரவு நேரத்தில் தோட்டத்தில் தனிமையில் நாதஸ்வரம் வாசித்து நிம்மதியடையும் காட்சிகள் கவிதை.
மருமகளாக வரும் தென்றல் ரகுநாதனும் அடடா அற்புதமாக நடித்துள்ளார். தமிழ்சினிமாவில் குணச்சித்திர நடிகையாக பெரிய ரவுண்ட் வர வாய்ப்பிருக்கிறது! மற்ற கதாபாத்திரங்களும் இயல்பு மீறாமல் நடித்துள்ளது சிறப்பு!
கிராமத்து வாசனையை தொலைத்துவிடாத ஒளிப்பதிவில் ஒளிப்பதிவாளர் அஞ்சோய் சாமுவேல் ஈர்க்கிறார். கலை இயக்குநர் கோபி கருணாநிதியின் கைவண்ணத்தில் வீடு, அதில் இருக்கும் பொருட்கள் என ரொம்பவே மெனக்கெட்டிருப்பதை கவனிக்க முடிகிறது.

வீசும் காற்று, ஓடும் ஓடை, இரவின் முகம் என எல்லாவற்றுக்கும் ஒலி அமைப்பால் உயிர் கொடுத்திருக்கிறார் லெனின் வளப்பாட். உச்சிமலை காற்றே’ என்ற பாடலில் தடத்தை பதித்திருக்கிறார் இசையமைப்பாளர் முகமது மக்புல் மன்சூர்.
சிறுகதையோ நாவலோ திரைவடிவமாக்கும்போது கொஞ்சம் சறுக்கினாலும் தோல்வியை சந்திக்க நேரிடும் ஆனால் அந்த ஆபத்திலிருந்து ‘அங்கம்மாளை’ தப்பிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் விபின் ராதாகிருஷ்ணன். அதற்காக பாராட்டுகள்!
‘அங்கம்மாள்’ பார்க்கலாம்!

