திரை விமர்சனம்

சிறுத்தை, சிங்கம், செந்நாய் எதுவந்தாலும்  ஓடிவிடும்…  ‘சாரா’ திரை விமர்சனம்!

கட்டுமான நிறுவனமொன்றில் முக்கிய பொறுப்பில் இருக்கும் சாக்‌ஷி அகர்வாலும் உடன் பணிபுரியும் விஜய் விஷ்வாவும் காதலிக்கிறார்கள். கல்யாண ஏற்பாடுகள் நடக்கும் நேரத்தில் தங்கள் நிறுவனத்திற்கு கலப்பட மணல் சப்ளை செய்த மிரட்டல் செல்வாவுடன் சாக்‌ஷி அகர்வலுக்கு பகையாகிறது. இதனால் சாக்‌ஷியை போட்டுத்தள்ள செக்யூரிட்டி ரோபோ சங்கர் மூலமாக பிளான் செய்கிறார் வில்லன்.

அதே நேரத்தில் தனது பள்ளி தோழனான செல்லக்குட்டியை  (படத்தின் இயக்குநர்) எதிர்பாராத விதமாக சந்திக்கிறார் சாக்‌ஷி. இந்த சந்திப்பே ஒரு கட்டத்தில் சாக்‌ஷிக்கு ஷாக்கிங் கொடுக்கிறது. அது என்ன? எதனால்? மிரட்டல் செல்வாவிடமிருந்து சாக்‌ஷி தப்பித்தாரா இல்லையா? என்ற கேள்விகளுக்கும் விடை தருகிறது மிச்ச கதை!

ஹீரோயினுக்கு முக்கியத்துவமான கதைதான். ஆனால் அதில் அடித்து ஆடுவதற்கான சந்தர்ப்பங்கள் சாக்‌ஷிக்கு குறைவே. காட்சிகள் நிறைய இருந்தாலும் நடிப்பை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் குறைவே.

கதாநாயகி சாக்‌ஷி என்றாலும் கதையின் நாயகன் செல்லக்குட்டிதான். சைக்கோத்தன நடிப்பில் பிசகாமல் அசல் சைக்கோவாக வாழ்ந்திருக்கிறார். எம்.ஆர்.ராதா, எஸ்.ஜே.சூர்யா, அசோகன், பவர் ஸ்டார் என பல முகங்கள் வந்துபோகிறது செல்லக்குட்டியின் நடிப்பில். குறிப்பாக விதவிதமாக அவர் எழுப்பும் ஓசைக்கே எதிரே புயலே வந்தாலும் ஓடிவிடும். சிறுத்தை, சிங்கம், செந்நாய் எதுவந்தாலும் செல்லக்குட்டியின் கத்தலில் ஆளை விடுங்க சாமி.. என தலைதெறிக்க ஓடிவிடும். அந்த அளவுக்கு கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் காட்டி இருக்கும் செல்லக்குட்டியின் அடுத்த அவதாரம் என்னவாக இருக்கும் என்பதுதான் ஆடியன்ஸின் எதிர்பார்ப்பு!? ஐயம் வெயிட்டிங் பாஸ்!

சாக்‌ஷியின் காதலனாக விஜய் விஷ்வா, தந்தையாக பொன்வண்ணன், செல்லக்குட்டியின் தாயாக அம்பிகா ஆகியோர் அந்தோ பரிதாபம். நல்லவேளை யோகிபாபு அவ்வப்போது ஆஜராவது சற்றே ஆறுதல். ரோபோ சங்கர், தங்கதுரை கேரக்டர்களும் அந்தரத்தில் ஊசலாடுகிறது.

கார்த்திக் ராஜாவின் இசை, ‘வெண்ணிலா கபடிக்குழு’ உள்ளிட்ட பல பெரிய படங்களுக்கு பணிப்புரிந்த லக்‌ஷன் குமரின்  ஒளிப்பதிவு என டெக்னிக்கல் டீம் சவுண்ட் பார்ட்டிகளாக இருந்தும் கதையும், திரைக்கதையும் குண்டக்க மண்டக்க குட்டிக்கரணம் அடிப்பதால் பெய்து கெடுத்த மழையாகிவிட்டது.

‘சாரா’.. செல்லக்குட்டிக்காக பாருங்களேன்!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE