திருவிழாவில் காணாமல் போன குழந்தையாக… ‘மகா சேனா’ விமர்சனம்!
குரங்கனி மலை கிராமத்து தலைவன் விமல். இந்த கிராமத்தில் உள்ள யாளீஸ்வரன் சிலை மகிமை பெற்றது. இதை கடத்துவதற்காக திட்டமிடுகிறது ஒரு கும்பல். இதற்காக நாகரிக வளர்ச்சி குறைவாக உள்ள மலை அடிவார மக்களை பயன்படுத்துகிறார் வனத்துறை அதிகாரியான ஜான் விஜய். குரங்கனி கிராமத்தோடு முன்பகையுள்ள அடிவார மக்களும் சிலை கடத்துவதற்கான நேரத்திற்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில் யாளீஸ்வரனுக்கு திருவிழா எடுக்கும் முயற்சியில் குரங்கனி கிராமம் தீவிரம் காட்ட, விமல் வளர்த்துவரும் சேனா என்ற யானைக்கு மதம் பிடித்து காட்டுக்குள் சென்றுவிடுகிறது. பல சிக்கல்களில் மாட்டிக்குள்ளும் விமல்ன் குடும்பமும் குரங்கனி மக்களும் அதிலிருந்து விடுபட்டார்களா? திருவிழா நடந்ததா என்பதே ‘மகாசேனா’.

கதை – களம் – பின்னணி என அடித்தளம் ஆழமாக இருந்தாலும் அதற்கான திரைகதை பலவீனமாக அமைந்திருப்பது படத்தின் பெரிய ஓட்டை.
மக்கள் தலைவனாக யானை மீது சவாரி செய்து அறிமுகமாகிறார் விமல். ஓபனிங் பில்டப்பில் காட்டிய கவனம் அவரது கதாபாத்திரத்தில் இல்லாமல் இருப்பது ஏமாற்றம். அடிக்கடி காணாமல் போய் அவ்வப்போது எண்ட்ரி கொடுத்திருப்பதிலே ஆடியன்ஸுக்கு புரிகிறது கால்ஷீட் குழப்பம். கொஞ்சம் நடிங்க பாஸ்…
விமலின் மனைவியாக சிருஸ்டி டாங்கே.. வசனத்தில் காட்டிய வீரம் நடிப்பில் மிஸ்ஸிங். வனத்துறை அதிகாரிகள் அத்துமீறும் காட்சியில் எப்படி ரியாக்ட் பண்ணுவது என்ப்துகூட தெரியாமல் திணறியிருக்கிறார்.
வனத்துறை அதிகாரியாக ஜான் விஜய், வழக்கம்போலவே எரிச்சல்! காட்டுவாசி தலைவன் தலைவியாக வருகிறார்கள் கொடுத்த காசுக்கு மேல் நடித்துள்ளார்கள். ஒருநாள் கால்ஷீடை வாங்கிக்கொண்டு யோகிபாபுவை நடிக்கவைத்திருக்கிறார்கள். காமெடி என்ற பெயரில் கடித்து குதறியிருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் மனாஸ் பாபு.டி.ஆர் ஒளிப்பதிவில் மலைக்காடுகள் ரம்மியம். இசையமைப்பாளர் ஏ.பிரவீன் குமாரின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். உதய் பிரகாஷ் U P R-ன் பின்னணி இசை ஓவர் டோஸ்!
எழுத்து – இயக்கம் தினேஷ் கலைச்செல்வன். கதை களத்தையும் பிரமாத பின்னணியையும் பிடித்தவருக்கு அதை திரைக்கதையாக்கும் உத்தி தெரியாமல் திணறியிருக்கிறார். எனவே திருவிழாவில் காணாமல் போன குழந்தையாக தடுமாறியிருக்கிறது திரைக்கதை.
எனவே ‘மகா சேனா’வுக்கு மதிப்பு குறைவே!

