உரத்து சொல்லவேண்டிய ஒரு கதை. ஆனால்.. ‘மாண்புமிகு பறை’ விமர்சனம்!
லியோ சிவகுமாரும் ஆரியனும் பறை இசைக் கலைஞர்கள். ஆதிபறை என்ற பெயரில் இசைக்குழுவை நடத்திவரும் இவர்கள் அழிந்துவரும் பறை இசை கலையை வளர்த்தெடுக்க முயற்சிக்கிறார்கள். இதற்கிடையே மாற்று சாதியை சேர்ந்த நாயகி காயத்ரி ரெமாவும் லியோ சிவகுமாரும் கலப்பு திருமணம் செய்துகொள்கின்றனர். ஆதிக்க சக்தியாக நினைக்கும் இன்னொரு பிரிவினர் நாயகனின் லட்சியத்தை தடுப்பதுபோன்ற வேலையை செய்கிறது. இதை எதிர்த்து நிற்கும் நாயகன் அதில் வென்றாரா?இல்லையா என்பதற்கு விடை சொல்கிறது
மிக உரத்து சொல்லவேண்டிய சமூகத்திற்கு தேவையான ஒரு கதை. ஆனால் அதை சொன்ன விதத்தில் சொதப்பியதே படத்தின் மைனஸ்.
உயிரை கொடுத்து நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் உணர்ச்சியே இல்லாமல் கடமைக்கு நடித்துள்ளார் கதாநாயகன் லியோ சிவகுமார். முகபாவனை, உடல்மொழி இரண்டிலுமே தேறவேண்டும் லியோ சிவகுமார்.
கதாநாயகனுக்கு கொஞ்சமும் குறைவில்லாத கதாபாத்திரம்தான் ஆரியனுக்கும். ஆனால் பறை இசைக் கலைஞனுக்கான உணர்வுகள் அவரது நடிப்பில் பலவீனப்பட்டுள்ளதால் ஸாரி..
நாயகி காயத்ரி ரெமா அருமையான தேர்வு. காட்சிகளுக்கு ஏற்றவாறு அநாயசமான நடிப்பை வெளிப்படுத்தி சபாஷ் போட வைக்கிறார். சொந்த அப்பாவையே போட்டுத்தள்ள துணியும் இடத்தில் பிரமாதம்.
கஜராஜ், அசோக் ராஜா, சேரன்ராஜ், காதல் சுகுமார், ஜெயகுமார், பொன் சுரேஷ், அரங்க குணசீலன் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் இயக்குநர் சொல்லிக் கொடுத்ததை முடிந்தவரை செய்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் தேவா இசையில் பாடல்கள் அனைத்தும் ஆட்டம் போட வைக்கும் விதத்தில் இருந்தாலும், பறை இசையின் பலத்தை உணரக்கூடிய விதத்தில் இல்லை. பின்னணி இசை அளவு. ஒளிப்பதிவாளர் ஆர்.கொளஞ்சி குமாரின் கேமரா கிராமத்து அழைகை ரசிக்கும்படி காட்சிப்படுத்தியிருக்கிறது.
பறை இசையின் பெருமை – ஆணவக்கொலை இரண்டையும் கலந்து கதை செய்திருக்கும் எஸ்.விஜய் சுகுமார், அதை எடுத்த விதத்தில் சொதப்பியதால்’ ‘மாண்புமிகு பறை’க்கு மதிப்பெண் குறைவே!

