பிரபல நடிகர் ஸ்ரீனிவாசன் மறைந்தார்: சோகத்தில் மலையாள திரையுலகம்!
மலையாள திரையுலகில் தனக்கென்று தனி அடையாளத்துடன் விளங்கி, கேரள மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றுள்ள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார். அவருக்கு வயது 69.
கடந்த சில மாதங்களாக உடல்நலமின்மையால் சிகிச்சையில் இருந்த நடிகர் ஶ்ரீனிவாசன், உதயம்பெரூரில் உள்ள தனது இல்லத்தில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை திடீரென மோசமானதைத் தொடர்ந்து அவர் திருப்புனித்துறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி இன்று காலை காலமானார்.

‘மணிமுழக்கம்’ திரைப்படத்தின் மூலம் 1977 ஆம் ஆண்டு நடிகராக அறிமுகமான ஸ்ரீனிவாசன், மலையாளத் திரையுலகின் மிகவும் மதிக்கப்படும் நடிகர்களில் ஒருவராக உயர்ந்தார். ஏறக்குறைய 50 ஆண்டுகளாக, 225-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
சமூகத்தின் மீதும் அவருக்கு ஆழ்ந்த கருத்து இருந்திருக்கிறது. கூர்மையான சமூக விமர்சனங்களுக்காகவும், அவரின் நடிப்புக்காகவும் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றவர். நடிப்புக்கு அப்பாற்பட்டு, அவர் ஒரு புகழ்பெற்ற திரைக்கதை ஆசிரியராகவும் இயக்குநராகவும் திகழ்ந்தார். பல வெற்றிப் படங்களுக்குத் திரைக்கதை எழுதியதுடன், மாநில மற்றும் தேசிய விருதுகளை வென்ற பல படங்களையும் இயக்கியிருக்கிறார்.
நடிகர், எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளராக அவரது பங்களிப்பு நவீன மலையாளத் திரையுலகை வடிவமைக்க உதவியதுடன், பல தலைமுறை நடிகர்கள் மற்றும் இயக்குநர்களையும் உத்வேகப்படுத்தியிருக்கிறது.
தேசிய திரைப்பட விருதுகள், கேரள மாநில திரைப்பட விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள், பல வாழ்நாள் சாதனையாளர் அங்கீகாரங்கள் உட்பட ஏராளமான விருதுகளை வென்றிருக்கிறார். அதைவிட முக்கியமாக சினிமா ரசிகர்களின் இதயத்தில் ஆழமாக பதிந்துள்ள ஸ்ரீனிவாசனின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவு மலையால சினிமாவுக்கு பேரிழப்பு!

