மலேசியாவில் ‘பிரைட் ஆஃப் ஹுயூமானிட்டி’ விருது விழா
ஏழைகள், வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்கள், ஆதரவற்றோர்களின் வாழ்வை ஏற்றம் பெறச்செய்யும் நோக்கில் சேவை உள்ளத்துடன் தொடங்கப்பட்ட அமைப்பு டேக் கேர் இன்டர்நேஷனல் ஃபவுண்டேஷன்.
இது எளிய மக்களின் உரிமைகள், வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் பிற மனிதாபிமான உதவிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த பாடுபடுகிறது.
அதுமட்டுமின்றி இந்தியா தவிர உலகின் மற்ற இடங்களிலும் மனித குலத்திற்கு சேவை செய்துவரும் மனிதர்களையும் அமைப்புகளையும் தேர்வுசெய்து அவர்களின் சேவைகளை ஊக்குவிக்கும் நோக்கில் தொடர்ந்து விருதுகளையும் பாராட்டுகளையும் வழங்கி வருகிறது.
மனித நேயத்தை வளர்க்கும் முனைப்போடு 2019 ஆம் ஆண்டில் டாக்டர் முகமது இப்ராஹிமால் நிறுவப்பட்ட டேக் கேர் இன்டர்நேஷனல் ஃபவுண்டேஷன் சமீபத்தில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ராயல் சூலான் நட்சத்திர ஹோட்டலில் “பிரைட் ஆஃப் ஹுயூமானிட்டி 2022” விருது விழாவை மிகச் சிறப்பாக நடத்தியது. இதில் மலேசியாவின் முக்கிய புள்ளிகள் பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
ஆடல், பாடல் ஆடம்பர நிகழ்வுகளை தவிர்த்து கருணை உள்ளத்தோடு விளிம்பு நிலை மக்களுக்கு சுயநலமற்று சேவையாற்றியவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு “பிரைட் ஆஃப் ஹுயூமானிட்டி 2022” விருதுகள் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டனர்.
விழாவில் கெளரவ அழைப்பாளர்களாக ஒய்.எம் தெங்கு டத்தோ டி ஹிஷாமுதின் ஜிஸி பின் ஒய்.ஏ.எம் தெங்கு பெந்தஹாரா அஸ்மான் ஷா அல்ஹாஜ் மற்றும் டாக்டர் கவுத் ஜாஸ்மன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் ஸ்ரீமதி கேசன் மற்றும் ஏபிஜேஎம்ஜே ஷேக் சலீம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
விழாவில் முக்கிய நிகழ்வாக ராயல் மலேசியன் போலீஸ் படையில் துணை போலீஸ் கமிஷனராக பணியாற்றும் டத்தோ சசிகலா தேவி சுப்ரமணியத்தின் சமூக சேவையை பாராட்டி பிரைட் ஆஃப் ஹ்யூமனிட்டி 2022 – ன் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
மேலும் பிரைட் ஆஃப் ஹ்யூமனிட்டி 2022 விருது பெற்றவர்கள் விபரம் வருமாறு:-
- கொரோனா பெருந்தொற்று காலத்தில் மருத்துவ மற்றும் சட்டச் சிக்கல்களால் வெளிநாடுகளில் கைவிடப்பட்ட இந்தியர்களுக்கு உதவுவதற்காக நிறுவப்பட்ட மனிதாபிமான அமைப்பான தஸ்வந்த் சேவா மலேசியாவின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ரக்விந்தர் கவுர்.
- தொற்றுநோய்களின் போது வீடற்றோர் மற்றும் தங்குமிடங்களில் வசிக்கும் மக்களுக்கு உணவுகளை வழங்கியதுடன் இன்றளவும் தேவைப்படுபவர்களுக்கு மளிகைப் பொருட்களை வழங்கிவரும் சுரேஷ் வையாபுரி.
- ஸ்நேஹாம் மலேசியாவின் நிறுவனரும் தற்கொலை மற்றும் மனநலப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் டத்தோ டாக்டர் புளோரன்ஸ் மனோரஞ்சிதம் சின்னையா.
- பின்தங்கிய மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு சமூக திறன்களை உள்ளடக்கிய திறன் பயிற்சியை வழங்கிவரும் மைஸ்கில்ஸ் அறக்கட்டளையின் இயக்குநர் பசுபதி சிதம்பரம்.
- இலவச ஆம்புலன்ஸ் சேவை உள்ளிட்ட மனிதநேய செயல்களில் ஈடுபட்டுவரும் அங்கிள் கென்டாங் டிஸ்ட்ரஸ் கால் & ஹெல்ப் சென்டரின் நிறுவனர் குவான் சீ ஹெங்.
- கொரோனா காலக்கட்டத்தில் 17,000 மாணவர்களுக்கு இலவச ஆன்லைன் கல்வியை வழங்கிய ஆர். தேன் முகிலன் (சிக்கு லான்).
- அமைதி நீதிபதி என்று அழைக்கப்படும் மலேசியா தேசத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவிய பேராசிரியர் டாக்டர்.சுதிர் ரஞ்சன் சென் குப்தா.
- சிலம்ப கலைக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவரும் சிலம்பம் சங்கத்தின் தேசிய தொழில்நுட்ப தலைவராக 10 ஆண்டுகள் பணிபுரிந்தவருமான மூரளிதரன் என்கிற எல் நாராயணன்.
- மலேசியாவில் விளிம்புநிலை மக்களை பலப்படுத்தி வரும் மலேசியாவின் கல்வி, நலன் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவர் கோவிந்தசாமி அண்ணாமலை.
- தமிழ் மற்றும் மலாய் மொழியின் ஆய்வு மற்றும் முன்னேற்றத்திற்காக பணியாற்றிவரும் டாக்டர். என். தர்மலிங்கம் நடராஜன்.
- தமிழகம் முழுவதும் 25,000க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு, பல்வேறு சமூகப் பணிகளில் பங்கேற்றுவரும் திரைப்பட நடிகர் சௌந்தரராஜா.
- தமிழ்நாடு எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் நிர்வாக உறுப்பினருமான ஐ.பரந்தாமன்.
- ரெயின்ட்ராப்ஸ் விளம்பர தூதரும் உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்கு உதவி வருபவருமான ரெஹானா.
- தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் சரண்யா.
ஆகியோருக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
விருதுகளுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய நியமிக்கப்பட்ட நடுவர் குழுவால் விருதாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிகழ்வுக்கு ஏபிஜே அப்துல் கலாம் அறக்கட்டளை மற்றும் சுத்தா அறக்கட்டளை, ஈவண்ட் பார்ட்னர் லீட் மலேசியா ஆகியன உறுதுணையாக நின்றன.
இப்பெரும் நிகழ்வுக்கு சோல் ஃபிட்னஸ்- எஸ்.வசந்தமாறன், பாப்புலர் மலாயா சிக்கன் எஸ்டிஎன் பிஎச்டி – ஜி.மதியழகன், டிஎஃப் எனர்ஜி சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் -யோங் ஹோர் ஃபூங் மற்றும் எம் கூல் பிரைவேட் லிமிடெட் ஹென்றி போ ஆகியோர் ஆதரவளித்தனர்.
முடிவில் நிகழ்வில் கலந்துகொண்ட சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் விருதாளர்களுக்கு டேக் கேர் இண்டர்நேஷனல் ஃபவுண்டேஷன் நிறுவனர் டாக்டர் இப்ராஹிம் நன்றி கூறினார்.