யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் புதுப்பட பூஜை
நகைச்சுவையால் மட்டுமல்ல குணச்சித்திர நடிப்பாலும் தன் தனித்திறனை வெளிப்படுத்தி ரசிகர்களின் அங்கீகாரத்தை பெற்றவர் யோகிபாபு. திரையில் தோன்றும் காட்சிகளில் சிரிப்பும் செண்டிமெண்டும் கலந்து கலக்கிக்கொண்டிருக்கும் யோகிபாபு, கதையின் நாயகனாகவும் மின்னத்தொடங்கியுள்ளார்.
சமீப காலங்களில் பல்வேறு வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து தன் திறமையை நிரூபித்து நடிப்பாற்றலினால் மக்களின் உள்ளத்தை கொள்ளைகொண்டுள்ளார். யோகிபாபு அடுத்ததாக கே வி கதிர்வேலுவின் இயக்கத்தில், பிரபல நடன பள்ளியான ராக் நிறுவனத்தின் முதல் தயாரிப்பில் உருவாக இருக்கும் பெயர் சூட்டப்படாத ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் தொடக்கவிழா பூஜையுடன் சென்னையில் நடைபெற்றது.
இயக்குனர் கே. வி. கதிர்வேலு இதற்கு முன்பாக சசிகுமார் நடிப்பில் வெளிவந்த ‘ராஜ வம்சம்’ திரைப்படத்தை இயக்கியவர். யோகிபாபுவை வைத்து அடுத்து இவர் இயக்கும் படவிழாவில் நடிகர்கள் சென்ராயன், சௌந்தர்ராஜா, சாம்ஸ், நடிகை நிரோஷா மற்றும் இயக்குனர் சுராஜ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.