ஆக்ஷனில் மிரட்டும் ‘தக்ஸ்’ : அப்ளாஸ் அள்ளிய பிருந்தா
’ஹே சினாமிகா’ படம் மூலம் இயக்குனராகவும் தன்னை நிருபித்தவர் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா. இவர் அடுத்ததாக் இயக்கியுள்ள படம் ‘தக்ஸ்’. தக்ஸ் என்றால் குண்டர்கள் என்று அர்த்தம். முதல் படத்தில் காதல் கதையை கையில் எடுத்தவர் தனது இரண்டாவது படத்திலேயே ஆக்ஷனில் களமிறங்கியுள்ளார். HR Pictures சார்பில் ரியா சிபு தயாரித்திருக்கும் இப்படத்தின் அறிமுக விழா சென்னையில் நடந்தது.
ஆக்ஷனில் பிருந்தாவால் அப்படி என்ன பண்ணியிருக்கமுடியும் என்ற சந்தேகத்துடன் டீசரை பார்த்தால் சும்மா சொல்லக்கூடாது மிரட்டியிருக்கிறார். நாயகனாக நடிக்கும் ஹிருது ஹரூனும் பின்னி பெடலெடுத்திருக்கிறார். இவர் தயாரிப்பாளர் சிபுவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் ஆர்யா, ஆர்.கே.சுரேஷ், இயக்குனர்கள் கே.பாக்யராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், பார்த்திபன், தேசிங்கு பெரியசாமி, நடிகைகள் குஷ்பூ, பூர்ணிமா , கலா மாஸ்டர் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கு பெற்றனர். இத்திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு பணிகளை பிரியேஷ் குருசாமியும், படத்தொகுப்பு பணிகளை பிரவீன் ஆண்டனியும் செய்கின்றனர்.
விழாவில் ஆர்யா பேசியதாவது :-
“பிருந்தா மாஸ்டர் உடன் பல படங்கள் பணிபுரிந்துள்ளேன். அவருடைய நிஜ கதாபாத்திரம் ஆக்ஷனோடு தான் இருக்கும். அது இந்த படத்தில் பிரதிபலித்து இருக்கிறது. பவர்புல்லான ஆக்ஷன் காட்சிகள் படத்தில் இருக்கிறது. படத்தின் டீசரில் ஆக்ஷ்ன் காட்சிகள் சிறப்பாக இருக்கிறது. தயாரிப்பாளர் சிபு, எல்லாவற்றிலும் தனித்துவத்தை எதிர்பார்க்கும் ஒருவர், இந்தப் படம் அவர் நினைத்தது போல் இருக்கும். இந்த படத்திற்காக நான் ஆவலோடு காத்திருக்கிறேன். ஒட்டுமொத்த படக்குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்.”
இயக்குனர் கௌதம் மேனன் பேசியபோது,“பிருந்தா ஒரு மான்ஸ்டர், என்னுடைய அனைத்து படங்களிலும் பாடல்கள் சிறப்பாக வர அவரும் ஒரு காரணம். வேட்டையாடு விளையாடு படத்தில் கற்க கற்க பாடலில் வரும் ஆக்ஷன் பகுதிகளை அவர் தான் இயக்கினார். அதனால் அவர் ஆக்ஷன் திரைப்படத்தை உருவாக்குகிறார் என்பதில் எனக்கு எந்த ஆச்சர்யமில்லை, அவர் கண்டிப்பாக பெரிய இடத்தை தொடுவார்.” என்றார்
இயக்குனர் பார்த்திபன் பேசியபோது, “ஒரு டீசர் மூலமாக கதாபாத்திரத்தை வெளிக்காட்டியது படத்தை பார்க்க வைக்கும் ஆவலை தூண்டுகிறது. பிருந்தா மாஸ்டருடன் பணிபுரிய எனக்கு பயமாக இருக்கும். வெவ்வேறு வகையான கதைகளத்தை இயக்குனர் பிருந்தா தேர்ந்தெடுத்து இருப்பது ஆச்சரியத்தை தருகிறது. நடிகர்கள் அனைவரும் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர். இந்த படத்தில் பங்குபெற்ற அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்” என்றார்.
நடிகை குஷ்பு பேசியபோது, “ பிருந்தாவால் கண்டிப்பாக ஆக்ஷன் காட்சிகளை சுலபமாக எடுக்க முடியும், அவர் அதற்காகவே பழக்கப்பட்டவர். பிருந்தா மாஸ்டர் தான் உண்மையான தக். பிருந்தா சிறப்பானதை தவிர வேறு எதையும் கொடுக்க மாட்டார். ஒரு பெண் இயக்குனரால் இப்படி ஒரு படத்தை கொடுக்க முடியுமா என்ற பேச்சை அவர் உருவாக்குவார். படத்தின் நடிகர்கள் அனைவரும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர்.” என்றார்.
இயக்குனர் கே. பாக்யராஜ் பேசியதாவது :-
“படத்தின் டீசரில் ஆக்ஷன் திரைப்படத்திற்குண்டான அனைத்து அம்சங்களும் இருக்கிறது. இந்த திரைப்படம் குண்டர்கள் எனப்படும் ரவுடிகளை பற்றிய கதை என்று தான் தெரிகிறது. பிருந்தா மாஸ்டரின் முதல் படம் காதல் படமாக இருந்தது, இப்போது அவரது இரண்டாவது படம் அதற்கு நேர் எதிராக ஆக்ஷன் படமாக இருக்கிறது. இது அவர் பல வகையான திரைப்படங்களை எடுக்க விரும்புகிறார் என்று காட்டுகிறது. படத்தின் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் கடின உழைப்பை கொடுத்துள்ளனர். டீசர் பார்க்கும் போது படம் பார்க்க வேண்டும் என்ற ஆவல் வருகிறது.” என்றார்.
இயக்குனர் பிருந்தா பேசியபோது “ எனது முதல் படமான ஹே சினாமிகா வில் இருந்து வேறு ஒரு படத்தை பண்ண வேண்டும் என்று நினைத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளேன். எனது தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், உதவி இயக்குநர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றி கூறிகொள்கிறேன். இந்த படத்தை எடுக்க எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் சிபு அவர்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.” என்றார்.