‘ரெட்ட தல’ திரை விமர்சனம்!
பணத்தாசை கொண்ட காதலி சித்தி இத்னானிக்காக தன்னைப்போல உருவ ஒற்றுமைகொண்ட பணக்காரனை போட்டுத்தள்ளிவிட்டு அவன் இடத்தில் தன்னை நிறுத்திக்கொள்ள திட்டம்போடும் அருண்விஜய், பணக்கார அருண்விஜய்யை கொலை செய்கிறார். ஆனால் பணக்கார அருண்விஜயோ ஏற்கனவே ஒரு கொலை செய்திருந்த டான் என்பது தெரிகிறது. இதனால் சித்தி இத்னானியின் காதலன் அருண்விஜய் சந்திக்கும் பிரச்சனைகளே ‘ரெட்ட தல’.

இரட்டை வேடத்தில் வழக்கம்போல ஸ்கோர் செய்யும் அருண்விஜய்யின் நடிப்பு, சில இடங்களில் ஓவர் ஆக்டிங்கின் ஆக்ஸிலேட்டரையும் முறுக்குகிறது. பணத்திற்காக காதலிக்கும் சித்தி இத்னானி அந்த கேரக்டருக்கு அளவெடுத்து செய்தது போல பொருந்துகிறார். அருண்விஜய்யை மட்டுமில்லாது ஆடியன்ஸையும் அழகால் ஈர்க்கிறார். அதுவும் அந்த கன்னத்தில் விழும் குழி.. ஆபத்தானது!
நடிக்கும் படங்களில் எல்லாம் எரிச்சலூட்டும் ஜான் விஜய் இந்தப்படத்திலும் எந்த வித்தியாசமும் இல்லாமல் அதே எரிச்சல் தோசை திருப்பி சுட்டிருக்கிறார். ஹரீஷ் பேரடி, தன்யா ரவிச்சந்திரன் கேரக்டர்களும் ஈர்ப்பு இல்லை.

மொத்தமே இரண்டுமணி நேரம்தான் ஆனால் ரொம்ப நேரம் பார்ப்பதுபோன்ற அலுப்பான எடிட்டிங்கில் ஏமாற்றுகிறார் படத்தொகுப்பாளர் ஆண்டனி. சாம் சி.எஸ் இசையில் “கண்ணம்மா” பாடல் ஈர்த்தாலும் அது தேவையற்ற ஆணி. க்ளைமாக்ஸ் நெருங்கும்போது மட்டும் பின்னணியில் மிரட்டியிருக்கிறார்.
காதலியின் பணத்தாசைக்காக கை வைக்க கூடாத இடத்தில் கைவைத்து இக்கட்டான சூழலில் மாட்டிக்கொள்ளும் ஹீரோ.. இடியாப்ப சிக்கலில் இருந்து எப்படி தப்பிக்கிறான் என்ற சுவாரஷ்யமான ஒன்லைனை பிடிக்கத்தெரிந்த இயக்குநர் கிரிஷ் திருக்குமரனுக்கு பக்காவான திரைக்கதைக்கு ஸ்கெட்ச் போடத்தெரியாததால் ‘ரெட்ட தல’யை செதுக்குவதில் சொதப்பியிருக்கிறார்.
‘ரெட்ட தல’ பரவாயில்லை!

