ஈழப்போரின் இன்னொரு பக்கம்.. ‘சல்லியர்கள்’ திரை விமர்சனம்!
ஈழத்தில் நடந்த விடுதலை போர் பற்றியும் மாவீரன் பிரபாகரன் தலைமையில் இயங்கிய விடுதலை புலிகளின் படை பற்றியும் அறிந்தவர் பலரும் அறியாத பக்கங்களை இதயத்தில் ஈரம் சொட்ட சொட்ட சொல்லியிருக்கும் படம் ‘சல்லியர்கள்’.
அதென்ன சல்லியர்கள்?..
விடுதலை புலிகள் படையில் இருந்த பல பிரிவுகளில் மருத்துவ பிரிவும் ஒன்று. போராளியானாலும் சரி இலங்கை ராணுவத்தினராக இருந்தாலும் சரி களத்தில் யார் உயிருக்கு போராடினாலும் அவர்களின் உயிர்காக்கும் தெய்வங்களாக இயங்கிய மருத்துவர்களும் மருத்துவ ஊழியர்களுமே சல்லியர்கள் என்றழைக்கப்பட்டவர்கள்.
உயிரை துச்சமென நினைத்து களப்பணி ஆற்றிய அவர்களின் தியாகங்களே ‘சல்லியர்களாக’ மலர்ந்துள்ளது.

‘மேதகு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் கிட்டு, மீண்டும் ஒரு தமிழ் ஈழ கதையுடன் களமாடியிருக்கிறார். அதனை பொழுதுபோக்கு அம்சமாகவும் தர முயன்றிருக்கிறார்.
பதுங்குழியில் இருந்துகொண்டு அடிபட்ட போராளிகளுக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர் நந்தினி கதாபாத்திரத்தில் சத்ய தேவி வாழ்ந்திருக்கிறார். பார்க்கும் பார்வை, செய்யும் சேவை, சிறு ஒலியையும் புரிந்துகொண்டு வருவது யார்? நடப்பது என்ன என்பதை கணிக்கும் திறன், கண்களில் தேக்கி வைத்த ஈழ விடுதலையின் ஏக்கம் என அசல் மருத்துவ போராளியை கண்முன் நிறுத்தும் சத்யதேவிக்கு சபாஷ்!
சத்யதேவிக்கு துணையாக இருக்கும் இன்னொரு மருத்துவர் செம்பியனாக மகேந்திரனும் உறுத்தாத துறுத்தாத எதார்த்த நடிப்பில் ஈர்க்கிறார். காதலர்களாகவும் போராளியாகவும் நடித்திருக்கும் நாகராஜ் – ப்ரியலயா தேர்வும் சிறப்பு!
படத்தை தயாரித்துள்ளதுடன் சத்யதேவியின் தந்தையாகவும் நடித்திருக்கிறார் கருணாஸ். இடைவேளைக்கு பிந்தைய காட்சிகளில் வந்தாலும் கண்களை கலங்கவைத்து நெஞ்சமெல்லாம் நிறைகின்ற கதாபாத்திரத்தில் கருணாஸ் கவர்கிறார்.

இலங்கை ராணுவ அதிகாரியாக வரும் ‘களவாணி’ திருமுருகனும் தனது கேரக்டருக்கு சிறப்பு சேர்த்துள்ளார்.
போர்க்களம், பதுங்கு குழி, ஈழத்து கிராமம் என களத்திற்கு பொருத்தமான சிபி சதாசிவத்தின் ஒளிப்பதிவுக்கு பாராட்டுகள்! கென் கருணாஸ் மற்றும் ஈஸ்வரின் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பலம்.
நிறைய இடங்களில் வசனம் வலுவானதாக இருக்கிறது. குறிப்பாக “உயிரை விதையாய் விதைக்கிறோம். அது வெடிச்சு, முளைச்சு ஒருநாள் சுதந்திரமா மலரும்” என்று கருணாஸ் பேசும் வசனம் சிலிர்ப்பு!
இது எல்லாவற்றுக்கும் காரணமான இயக்குநர் கிட்டுவின் பணிக்கும் சிறப்பு பாராட்டுகள்!
சல்லியர்களை ott plus தளத்தில் இப்போது காணலாம்!

