சிவகார்த்திகேயன் பேசும் இடங்களெல்லாம் நெருப்பு! ‘பராசக்தி’ விமர்சனம்!
மனித சிந்தனையின் தொப்புள் கொடி.. மொழி. ஒரு இனத்தின் மொழியை வற்றிப்போக செய்துவிட்டால் அந்த மண்ணையும் மக்களையும் ஆயுதமே இல்லாமல் அழித்துவிடமுடியும். அப்படியாக நம் செந்தழிழுக்கு எதிராக இந்தி ஆதிக்கம் முளைத்த வேளையில் வெடித்த மொழிப்போர்தான் ‘பராசக்தி’யாக மலர்ந்திருக்கிறது.
கதை..
1959 மற்றும் 1960களில் நடப்பதுபோன்று தொடங்குகிறது கதை. இந்தி ஆதிக்கத்திற்கு எதிராக கிளம்பும் மாணவர் படையின் தலைவனாக ‘புறனானூற்று படை’ அணிக்கு தலைமை தாங்கி போராடுகிறார் சிவகார்த்திகேயன். போராட்டத்தில் சக நண்பன் ஒருவனின் உயிரிழப்பு, சிவகார்த்திகேயனின் சிந்தனையை திசைமாற்றுகிறது. இனி ஒரு உயிரைகூட இழக்கக்கூடாது என்று போராட்டத்தை நிறுத்துகிறார். இது நடந்து 5 ஆண்டுகளை கடந்த நிலையில் இந்தி திணிப்புக்கு எதிராக தனது இன்னுயிரை மாய்த்துக்கொள்ளும் இன்னொரு மாணவனின் இழப்பு சிவகார்த்திகேயனை மீண்டும் போராட்ட களத்திற்கு திருப்புகிறது. அதில் சந்திக்கும் பிரச்சனைகளை எதிர்கொண்டு புறனானூற்று படை தலைவன் வெல்வதே கதை.

சிவகார்த்திகேயன்..
உணர்ச்சிமிகு மொழி போராளி செழியனாக வாழ்ந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். போராட்டத்திற்காக வகுக்கும் வியூகம், களத்தில் காட்டும் துணிச்சல், தன் கண்ணெதிரே துப்பாக்கி குண்டுக்கு இரையாகும் தம்பியை காப்பாற்ற துடிக்கும் துடிப்பு, ஸ்ரீலீலா மீதான காதல், சிறையில் சித்திரவதை செய்யப்படும் நிலையிலும் மொழி பற்றின் தீவிரத்தை இறுக பற்றிக்கொண்டு பேசும் வசனம் என சிவாவின் நடிப்பில் அற்புத ஆளுமை.
“கருப்புக்கொடி காட்டுனா தாக்குவீங்களா?.. எங்க தலை மயிர்கூட கருப்புதாண்டா” என்று சிவகார்த்திகேயன் வசனம் பேசும் இடங்களெல்லாம் நெருப்பு!
ரவிமோகன்..
முதல்முறையாக எதிர்மறை கதாபாத்திரத்தில் ரவிமோகனின் நடிப்பில் புது ரத்தம் பாய்ந்திருக்கிறது. தனது வலது கையை சிதைத்த சிவகார்த்திகேயனை பழிவாங்குவதற்காக வன்மத்துடன் காத்திருப்பது; பொள்ளாச்சி ஊர் மக்களை இரக்கமே இல்லாமல் சுட்டுத்தள்ள கட்டளை பிறப்பிப்பது; முதலமைச்சர் என்றாலும் பேச்சில் காட்டும் தெனாவட்டு; டிராகுலா குணத்தை வெளிப்படுத்தும் கண்கள்; உள்ளுக்குள் இருக்கும் ஆதங்கம், அவமானம் எல்லாம் ஒட்டுமொத்தமாய் சேர்ந்து எட்டிப்பார்க்கும் மிருக குணம் என இதற்குமுன் பார்த்திராத ரவிமோகன் இதில். சபாஷ் ரவி!

ஸ்ரீலீலா..
ஸ்ரீலீலாவுக்கு இது முதல் தமிழ் படம். நூறு படங்களில் நடித்த அனுபவம் போன்று ஆகச்சிறந்த நடிப்பை பார்க்க முடிகிறது. உடல்மொழியில் பாவனைகளில், கண் ஜாடையில், அழகு நடனத்தில் என நவரச நாயகி பட்டம் கொடுக்கலாம். மொழிப் போரின் தீவிரத்தை ரேடியோ வழியாக மக்களுக்கு கொண்டு போய் சேர்க்கும் காட்சியில் உணர்ச்சிமயம்.
அதர்வா..
எஸ்கேவின் தம்பியாக அதர்வா. சிவகார்த்திகேயனுக்குள் பற்றியெறிந்ததை காட்டிலும் அதிகமான மொழிப்பற்றும் இந்தி திணிப்புக்கு எதிரான தீவிரமும் நாடி நரம்பெல்லாம் ஊறி திளைத்தது போன்ற திறன்மிகு நடிப்பை கொடுத்திருக்கிறார். சாகும் தருவாயிலும் விட்ராத அண்ணே… என உணர்ச்சிபிழம்பாக உயிர்விடும் இடம் கண்ணீர் வரவைக்கும் காட்சி.

மற்ற கதாபாத்திரங்கள்..
சிவகார்த்திகேயனின் மொழிப்போர் நண்பர்களாக வருபவர்கள், மாணவர்களுக்கு தனது ஆலையில் இடம் கொடுக்கும் காளிவெங்கட், அண்ணாதுரையாக சித்தரிக்கப்பட்டுள்ள சேத்தன், இந்திராகாந்தியாக சித்தரிக்கப்பட்டவர் உள்ளிட்ட படத்தின் அனைத்து கதாபாத்திரங்களுமே தங்களது பங்களிப்பை தரமாக தந்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்!
ரவி கே சந்திரனின் ஒளிப்பதிவில் அப்படியொரு மெனக்கெடல். 60களின் காலக்கட்டத்தை கண்முன் நிறுத்தி, மொழிப்போரின் தீவிரத்தை பார்வையாளர்களுக்கு அற்புதமாக கடத்துகிறார். கலவரம், காதல், புரட்சி என உணர்வுகளுக்கு பொருத்தமான லைட்டிங்கும் உழைப்பும் ஆகச்சிறப்பு.
ஜி.வி.பிரகாஷுக்கு இது 100வது படம். வரலாற்று பின்னணி கதை, களமென்றால் ஜிவிக்கு அல்வா மாதிரி. அப்படியொரு வாய்ப்பை ‘பராசக்தி’ மீண்டும் அளித்திருக்கிறது. படம் முழுக்க ஜி.வி.யின் பின்னணி இசையும் ஒரு கதாபாத்திரமாக பயணித்திருப்பது படத்தின் ஆகபெரும் பலம். “பஞ்சாரம்” பாடலும் பிரமாதம்.
60களின் கட்டிடங்கள், கலைப் பொருட்கள், பின்னணிகள், ரயில் என ஆர்ட் டைரக்டர் ஆகச்சிறந்த கைவண்ணம் காட்டியிருக்கிறார். கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான அரிதாரத்தை கொடுத்திருக்கும் ஒப்பனை கலைஞர் மற்றும் பூர்ணிமாவின் ஆடை வடிவமைப்பும் மிகப்பெரிய உழைப்பு.

இயக்குநர் சுதாகொங்கரா!
இதுவும், கலவரம், வன்முறை, கொலை இரத்தம் உள்ள படம்தான். ஆனால் அவையாவும் ரத்தமும் சதையுமாக பதிவு செய்யப்பட்ட பொக்கிஷம். குத்து, வெட்டும் குடலை உருவி மாலையாக போட்டுக்கொள்ளும் ஆபத்தான சினிமாக்களுக்கு மத்தியில் வரலாறை, நமக்காக எத்தனையோ மொழிப்போர் தியாகிகள் செய்த உயிர்த்தியாகத்தை இந்த தலைமுறையும் தெரிந்துகொள்ளும் ஆவணமாக, வாசிப்பு பழக்கமே வற்றிப்போன இளம் தலைமுறைக்கான ஆயுதமாக ‘பராசக்தி’ யை படைத்திருக்கிறார் சுதா கொங்கரா.
25 இடங்களில் சென்சார் கட் கொடுத்திருந்தாலும்கூட சொல்லவேண்டிய செய்தியை சரியாக கடத்தி, இயக்கத்தில் புலியென நிருபித்திருக்கும் சுதாவுக்கு வாழ்த்தும் பாராட்டும்.
‘பராசக்தி’ தீ பரவட்டும்!
MARK : 7.5 /10
REMARK : விறுவிறுப்பற்ற முன்பாதி படத்தின் 30 நிமிட காட்சிகளில் கவனம் செலுத்தியிருக்கலாம்!

