திரை விமர்சனம்

‘வா வாத்தியார்’  திரை விமர்சனம்!

எம்ஜிஆரின் தீவிர ரசிகர் ராஜ்கிரன். எம்ஜிஆரின் திடீர் மறைவு அவரை சோகத்தில் ஆழ்த்துகிறது. அதே சமயத்தில் எம்ஜிஆர் மறைந்த அதே நாளில் அதே நேரத்தில் அவரது பேரன் பிறக்க, பெருந்துயரத்திலும் பேரானந்தம் பிறக்கிறது ராஜ்கிரனுக்கு. எம்ஜிஆரே மீண்டும் பிறந்ததாக பெருமைப்படும் ராஜ்கிரன் பேரனுக்கு ஒழுக்கத்தையும் வீரத்தையும் கற்றுக்கொடுத்து வளர்க்கிறார். அந்த பேரன் வளர்ந்து ஆளாகி போலீஸ் அதிகாரியாகிறார். அவர்தான் கார்த்தி. ராமேஸ்வரன் என்ற அவரது பெயரின் சுருக்கம் ராமு.

நேர்மை நியாயத்துடன் கார்த்தி கடமையாற்றுவார் என்று ராஜ்கிரன் நினைத்துக்கொண்டிருக்க அதற்கு நேரெதிராக லஞ்சம், சமூக விரோதிகளுடன் நெருக்கம் என பணத்திற்காக விலை போய்க்கொண்டிருக்கிறார் கார்த்தி. ராஜ்கிரனுக்கு இது தெரியவரும்போது அந்த கவலையிலேயே கண்ணை மூடுகிறார். இன்னொரு பக்கம் அரசியல்வதிகளின் ஒரு திட்டத்திற்கு மூளையாக செயல்படும் கார்த்தி, இரவில் கெட்டவற்றை தட்டி கேட்கும் வாத்தியார், பகலில் போலீஸ் என ஒரே உடம்பில் இரண்டு குணாதிசங்கள் என திரைக்கதையில் விழுகிறது ஒரு முடிச்சு. இந்த முடிச்சு எப்படி அவிழ்க்கப்படுகிறது என்பதே ‘ வா வாத்தியார்’.

எம்ஜிஆர் ரசிகர்களிடம் இதய தெய்வமாய் வாழ்ந்துகொண்டிருக்கும் வாத்தியார் குணாதிசயம் அல்லது அவரது ஆன்மா ஒருவனுக்குள் புகுந்தால் என்ன நடக்கும் என்ற அற்புத மேஜிக்கை நிகழ்த்தக்கூடிய கதை கரு. ஆனால் அதை கையாண்ட விதத்தில் சொதப்பி இந்த தலைமுறை ரசிகர்களை எரிச்சலூட்டும் ‘வா வாத்தியாரை’ வரவேற்க தோன்றவில்லை.

எம்ஜிஆரின் மேனரிசம், உடல்மொழி, குரல்வளத்தில் அவரை கண்முன் நிறுத்த முயன்றிருக்கிறார் கார்த்தி. ஆனால் அது முயற்சி என்பதோடு நிற்கிறதே தவிர அடுத்தக் கட்டத்திற்கு தாவாமல் தவிப்பதால் கார்த்தி கதாபாத்திரம் கடுப்பேற்றுகிறது.

எம்ஜிஆர் ரசிகராக ராஜ்கிரன் அவரது கேரக்டரை சரியாக செய்திருக்கிறார். ஆனால் திறமையான நடிகர்களான சத்யராஜ், நிழல்கள் ரவி, ஆனந்தராஜ் போன்றவர்களின்  மேக்கப், மேனரிசம் உள்ளிட்ட அனைத்தும் கோமாளித்தனமாக இருப்பதால் அந்த கேரக்டர்களும் எரிச்சலூட்டுகிறது.

வாத்தியார் கார்த்தி மேல் காதல் பிறக்கும் கதாபாத்திரமாக கீர்த்தி ஷெட்டி கேரக்டர் வடிவமைக்கப்பட்டிருந்தாலும் அதில் வலுவான தன்மைகள் இல்லாததால் அந்த பார்பி டாலின் ரசிகர்களை ஏமாற்றுகிறது.

மாசிலா என்ற கற்பனை நகரத்திற்கு உயிர் கொடுத்திருக்கும் கலை இயக்குநரின் கைவண்ணத்திற்கு பாராட்டுகள். இந்த பின்னணிக்கு சரியான லைட்டிங் கொடுத்து ஒளிப்பதிவில் பிரமிக்கவக்கும் ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி வில்லியம்ஸின் திறமைக்கு வாழ்த்துகள்!

கதைக்கேற்ற பின்னணி இசையை அமைத்திருக்கும் சந்தோஷ் நாராயணனுக்கு சபாஷ்! ஆங்காங்கே எரிச்சலூட்டும் திரைக்கதையில் அவ்வப்போது இதம் சேர்க்கும் எம்ஜிஆர் பாடல்கள் அட்டகாசம்!

இப்படி டெக்னிக்கலாக சிக்ஸர் தூக்கியிருந்தாலும் திடமான திரைக்கதையை இயக்குநர் நலன் குமரசாமி அமைக்கத் தவறியதால் ‘வா வாத்தியார்’ வச்சி செய்திருக்கிறார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE