‘தலைவர் தம்பி தலைமையில்’ திரை விமர்சனம்!
ஒரு ஊர். அதன் பஞ்சாயத்து தலைவர் ஜீவா. ஊரில் நல்லது கெட்டது நடந்தால் உதவும் கரங்களாக மாறிவிடுவார் ஜீவா. இதன் பின்னணியில் குணம் மட்டுமில்லை. தேர்தல் வந்தால் அது வாக்கு வங்கிகளாக மாறும் என்ற சுயநலமும் சூழ்ந்திருக்கிறது.
அந்த எண்ணத்தில்தான் இளவரசு மகள் பிரார்த்தனா நாதன் திருமணத்திற்கான வேலைகளை இழுத்துப்போட்டு செய்கிறார் ஜீவா. இளவரசுவின் பக்கத்து வீட்டுக்காரர் தம்பி ராமையா. பக்கத்து பக்கத்து வீடு என்றாலும் இருவருக்குமிடையே கொழுந்துவிட்டு எரிகிறது பகை. விடிந்தால் பிரார்த்தனாவுக்கு கல்யாணம். அன்று இரவு தம்பி ராமையாவின் தந்தையார் ‘மண்டையை போட’ வெடிக்கிறது பிரச்சனை. என்ன பிரச்சனை?… பிரார்த்தனா முகூர்த்த நேரத்திலேயே தந்தையின் இறுதி ஊர்வலத்தை நடத்துவது என்று முடிவெடுக்கிறார் தம்பிராமையா. இந்த இக்கட்டான நேரத்தில் இருவரையும் சமாதானப்படுத்தி இரு நிகழ்வுகளையும் சக்சஸ் ஆக்கி காட்ட துடிக்கிறார் ஜீவா. அவரது எண்ணம் ஈடேறுகிறதா இல்லையா என்பது மிச்ச கதை.

பஞ்சாயத்து தலைவராக ஜீவா பிரமாதம். இளவரசுவும் தம்பிராமையாவும் ஆளுக்கொரு முடிவு, திமிரு என இருக்க, இருவரையும் சமாதானப்படுத்த படாத பாடு படும் இடங்களில் ஸ்கோர் செய்திருக்கிறார். சுயநலமும் பொது நலமும் கலந்த கதாபாத்திரத்தின் ஜீவனில் அழகாக ஊடுருவி பொருத்திக்கொள்ளும் ஏரியாக்களில் அப்ளாஸ் அள்ளுகிறார்.
இளவரசு, தம்பிராமையா இருவர் நடிப்பில் இளவரசு இயல்பாக தெரிய தம்பி ராமையா நடிப்பில் ஓவர் ஆக்டிங் எட்டிப்பார்க்கிறது.
இளவரசின் மகளாக பிரார்த்தனா அருமையான தேர்வு. கணவராக வரப்போகிறவரின் அன்புத் தொல்லை ஒருபக்கம் ஒருதலை காதலனின் தறுதலை செயல்கள் மறுபக்கம் என இரண்டையும் சமாளிக்கும் இடங்கள் ரசனை. ஜீவாவின் அரசியல் போட்டியாளராக வரும் ஜென்சர் திவாகர் நடிப்பில் வழக்கம்போலவே அதிரடி. தம்பிராமையா தந்தையின் இறுச்தி சடங்கை வெற்றிகரமாக நடத்தி ஜீவாவை தோற்கடிக்க போடும் திட்டங்கள் அலப்பறை.
கன்னியாகுமரி வட்டார வழக்கில் பேசும் சர்ஜின் குமார், புது மாப்பிள்ளையாக வரும் சுபாஷ் கண்ணன். நோயாளி தந்தையாக வருபவர் என படத்தில் பங்கேற்ற அத்தனை கதாபாத்திரங்களும் சிறப்பு.

இரு வீடுகள், ஒரு மேல்நிலை நீர்தேக்க தொட்டி, சில வாகனங்கள் மட்டுமே செட் பிராப்பர்ட்டியாக இருந்தாலும் அந்த களத்தை சிறப்பாக கண்முன் நிறுத்தும் ஒளிப்பதிவாளர் பப்லு அஜுவின் திறமைக்கும் கதையிலிருந்து பிசகாத விஷ்ணு விஜயின் பின்னணி இசைக்கும் பாராட்டுகள்.
ஓர் இரவில் நடக்கும் கதையை போரடிக்காமல் நகர்த்தும் திரைக்கதை உத்திக்காகவும் அதனிடையே கடத்தும் சமூக சிந்தனைக்காவும் இயக்குநர் நித்திஷ் சகதேவுக்கு பாராட்டு பூங்கொத்துகள்.
‘தலைவர் தம்பி தலைமையில்’ வரவேற்கலாம்!

