‘குழலி’ திரை விமர்சனம்
நவீன உலகம், நாகரிக வளர்ச்சி, பெருக்கெடுத்த விஞ்ஞானம், நொடிக்கொரு கண்டுப்பிடிப்பு என இந்த பூமிப்பந்து எத்தனை எத்தனையோ வளர்ச்சிகளை கண்டுகொண்டிருந்தாலும் ”சாதிகள் இல்லையடி பாப்பா” என்பது என்னும் ஏட்டளவிலேயே உள்ளது என்பதை இன்னொருமுறை தோலுரித்து காட்ட வந்துள்ள படமே இல்லை இல்லை பாடமே ‘குழலி’.
ஆணவக்கொலைகள், கெளரவ கொலைகள் என இன்னும் எத்தனையோ பெயரால் சாதி பித்துப்பிடித்தவர்கள் தங்கள் இனவெறியை ஆங்காங்கே கட்டவிழ்த்துக்கொண்டே இருக்கிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டும் ‘குழலி’யின் கதை…
பல பிரிவினரை கொண்ட ஒரு கிராமத்தில் சிறுவயது முதல் உயிருக்குயிராய் பழகி வரும் நாயகன் விக்னேஷும் நாயகி ஆராவும் பதின் பருவத்தை அடையும்போது அவர்களுக்குள் இனம்புரியா ஈர்ப்பு ஏற்படுகிறது. அதை காதல் என்றும் வைத்துக்கொள்ளலாம். எனினும் படிப்பில் கண்ணும் கருத்துமாக இருக்கும் இருவரும் தேர்வில் நல்ல மதிப்பெண்ணும் எடுக்கிறார்கள். தங்களுக்குள் இருப்பது காதலா என்பது தெரியாமலே பழகிவரும் இருவரின் நட்புக்குள்ளும் நஞ்சை விதைக்கிறது சாதி வெறி.
விளைவு… இருவரும் ஊரைவிட்டு ஓடிச்செல்ல முடிவெடுக்கிறார்கள். அவர்களின் கனவு, காதல் என்னவாகிறது என்பதற்கு விடை சொல்கிறது ‘குழலி’ க்ளைமாக்ஸ்.
தம்மாதுண்டு பையனாக ‘காக்காமுட்டை’ படத்தில் தேசிய விருது பெற்ற விக்னேஷ், மீசை முளைத்த இளைஞனாக கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். வடசென்னை பையனுக்கு கிராமத்து இளைஞன் கேரக்டர் என்பது சவாலான விஷயம். அதை சாதித்து காட்டியிருக்கும் விக்னேஷுக்கு சபாஷ்!
நாயகி குழலி பாத்திரத்தில் அசத்தும் ஆராவுக்கு இது முதல் படம் என்றால் நம்பமுடியவில்லை. நடிப்பு, நடனம் எல்லாவற்றிலும் அம்சமாக பொருந்தும் ஆரா, படம் முடிந்து வெளியே வந்த பிறகும் குழலியாக நம் மனசில் ஒட்டிக்கொள்கிறார். மேன்லியான குரல்வளம் என்றாலும் சொந்தக்குரலிலேயே பேசியிருப்பது படத்தின் இயல்பு தன்மையை மீறாமல் இருப்பது சிறப்பு. இனி தமிழ் சினிமாவில் ஆராவின் ஆட்சியும் நடக்கும். வாழ்த்துகள் ஆரா!
படத்தில் விக்னேஷ் தவிர இன்னும் இரண்டு ஹீரோக்களாக இசையமைப்பாளரும், ஒளிப்பதிவாளரும் அசத்தியிருக்கின்றனர். திண்டுக்கல் சுற்றியுள்ள ரம்மியமான இடங்களை அழகாக அள்ளிவந்த சமீரின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரும் பலம். டி.எம்.உதயக்குமாரின் பின்னணி இசை குழைய வேண்டிய இடத்தில் குழைந்து குலை நடுங்க வேண்டிய இடத்தில் குலை நடுங்கவும் வைத்துள்ளது.
கிராமத்து மனிதர்களின் இயல்பான நடிப்பு, மண் மனம் மாறாத வசனம் என ஒவ்வொரு விஷயத்தையும் நேர்த்தியாக கையாண்டிருக்கும் இயக்குனர் சேரா கலையரன் பாராட்டுக்குரியவர்.
பள்ளிப் பருவ காதல் நெருடலாக இருப்பதும் பதின் பருவத்து ஆணும் பெண்ணும் ஊரைவிட்டு ஓடிச்சென்று படிக்க முடிவெடுக்கும் லாஜிக் சறுக்கலும் படத்தின் சிறு சிறு குறைகள். இருப்பினும் ஈர்க்கிறாள் இந்தக் ‘குழலி’.