திரை விமர்சனம்

மனதை உருக்கும் காதல் கவிதை ‘மாயபிம்பம்’ : விமர்சனம்!

எந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தாமல் பெரிய விளம்பரமும் இல்லாமல் வெளியாகும் சில படங்கள் ஆச்சர்ய சலத்தை ஏற்படுத்தி இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தும். அந்தப் பட்டியலில் இணையும் படம் ‘மாயபிம்பம்’

கதை..

கடலூரை சேர்ந்த ஆகாஷ் சிதம்பரத்தில் மருத்துவம் படிக்கும் மாணவன். பேருந்து நிலையத்தில் ஜானகி என்ற பெண்ணை பார்க்கும் ஆகாஷுக்கு அந்த பெண் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது. ஏதேச்சையாக நடந்த அந்த சந்திப்பு, அடுத்தடுத்தும் நிகழ்கிறது. ஜானகி, ஆகாஷை பார்க்கும் பார்வையும் அவனிடம் நடந்துகொள்ளும் முறையும் வித்தியாசமாக இருக்க, ஆகாஷின் நண்பர் கூட்டத்தில் ஒருவன்,  ‘ஜானகி’யை கிட்டத்தட்ட விலைமாதுவாகவே சித்தரிக்க, அதனை சோதித்துப்பார்க்க ஜானகியை நண்பன் அறைக்கு தனியாக அழைக்கிறார். அந்த அறையில் தன்னிடம் ஆகாஷ் நடந்துகொள்ளும் முறையால் அதிர்கிறார் ஜானகி. அப்போதுதான் ஜானகி மீது தப்பு கணக்கு போட்டுவிட்டதாக நினைத்து வருத்தப்படுகிறார் ஆகாஷ்.

இப்போது ஆகாஷ் வீட்டில் வெடிக்கும் ஒரு பிரச்சனையால் அவரது வீட்டில் உள்ளவர்களே வெறுக்க ஆரம்பிக்கிறார்கள். ஒருவழியாக பிரச்சனைகள் முடிந்து ஜானகியை திருமணம் செய்துகொள்ளப்போகும் செய்தியை சொல்லப்போகிறார் ஆகாஷ். போன இடத்தில் அவருக்கு காத்திருக்கிறது அதிர்ச்சி? அது என்ன? ஜானகிக்கு என்னாச்சு என்பதை நெஞ்சுருக சொல்கிறது மீதி கதை.

நடிகர்கள்

நாயகனாக நடித்திருக்கும் ஆகாஷ் நடிப்பு என்பது தெரியாத அளவுக்கு எதார்த்தமாக நடித்திருக்கிறார். பாசத்தை கொட்டி கொட்டி வளர்த்த பெற்றோர் தன்னிடம் வெறுப்பை காட்டும் சூழ்நிலையில் நண்பனிடன் போனில் சொல்லி உருகுமிடத்தி நம்மையும் கலங்கடிக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சியில் இன்னும் ஒருபடி மேலேபோய் கல் மனதையும் கரைய வைக்கிறார்.

நாயகி ஜானகி பேரழகி. தன் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் பெரும்பாலும் கண்களிலேயே கடத்தியிருப்பது வாவ்! நூறு பக்கங்கள் பேசும் வசனத்தை ஒரு நொடி பார்வையிலேயே சொல்லும் நடிப்பு அற்புதம். கதாநாயகின்னா இப்படித்தான் இருக்கனும் என்ற சினிமா இலக்கணத்தை உடைத்தெடுக்க சரிதா, மெளனிகா, அர்ச்சனா போன்றவர்கள் அவ்வப்போது தோன்றி கவனிக்கவைப்பார்கள். அந்த வரிசையில் ஜானகியும் ஒருவர்.

ஹீரோவின் குடும்பத்தினராக நண்பர்களாக வருகிற அத்தனை நடிகர்களும் சினிமாவுக்கு புதிது என்றாலும் அவர்களின் நடிப்பில் அப்படியொரு முதிர்ச்சி. சின்ன ரோலில் வரும் கேரக்டர்கள்கூட சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களும் தங்களது பங்களிப்பை சரியாக செய்துள்ளனர்.

படத்தின் எல்லா ப்ளஸ்களுக்கும் காரணமாக இருக்கும் இயக்குநர் கே.ஜே.சுரேந்தர், படத்தை தயாரிக்கவும் செய்திருக்கிறார். திரைக்கதை கட்டமைப்பு, எப்படி கொடுத்தால் ரசிப்பார்கள் என்ற திரை மொழியும் தெரிந்தவராக இருக்கிறார். சின்ன பட்ஜெட்டில் சிறப்பான படத்தை கொடுத்ததற்காக சுரேந்தரை பாராட்டலாம்.

‘மாயபிம்பம்’ மனதை உருக்கும் காதல் கவிதை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE