‘திரெளபதி 2’ விமர்சனம்!
14ஆம் நூற்றாண்டில் நடப்பதுபோல தொடங்குகிறது கதை. முகலாயா மன்னர்கள் (குறிப்பாக துக்ளக் ஆட்சி) ஆட்சியில் வரி வசூல் என்ற பெயரில் நடத்தும் கொடுமைகளும் வரி தராத மக்களை கட்டாய மத மாற்றம் செய்வதுமாக கொடுங்கோல் ஆட்சி செய்கின்றனர். இவர்களது அநீதியை எதிர்க்கிறார் திருவண்ணாமலையை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்து வரும் வல்லாள மகாராஜா. வல்லாள மகாராஜாவின் உத்தரவை ஏற்று மக்களை காக்க போராடுகிறார் சிற்றரசனான வீரசிம்ம காடவராயர். ஒரு கட்டத்தில் வல்லாள மகாராஜாவை கடத்திக் கொல்கிறது சுல்தான் படை. அவரை காப்பாற்ற முடியாத குற்ற உணர்வில் தவிக்கும் வீரசிம்ம காடவராயரை அவரது மனைவியான திரெளபதியே வெறுத்து ஒத்துக்குகிறார். ஒரு கட்டத்தில் சூழ்ச்சியின் பிடியில் தான் சிக்கவைக்கப்பட்டதும் தனது கணவர் குற்றமற்றவர் என்பதும் திரெளபதிக்கு தெரிய வருகிறது. இந்தச் சூழ்நிலையில் முகலாய மன்னர்களின் சூழ்ச்சியை முறியடித்து மக்களை காக்கும் போரில் இறங்கும் திரெளபதிக்கும் வீரசிம்ம காடவராயருக்கும் கிடைக்கும் வெற்றியே கதை.

வீரசிம்ம காடவராயராக ரிச்சர்ட் ரிஹி. தோற்றத்தில் வீர மன்னனாக காட்சியளிப்பவர், வீரத்தை பிரதிபலிக்கும் பாவனைகளில் சொதப்புகிறார். சில காட்சிகளில் எவ்வித உணர்ச்சிகளற்றும் இருப்பது ஏமாற்றம்.
திரெளபதியாக நடித்திருக்கும் ரக்ஷனா இந்துசூடன் அருமையான தேர்வு. அழகுப் பதுமையாகவும் வீரமங்கையாகவும் சிறப்பாக நடித்துள்ளார். எதிரிகளிடம் வாள் சுழற்றி சண்டையிடும் காட்சியிலும் பிரமாதப்படுத்தியிருக்கிறார்.
வல்லாள மகாராஜாவாக நட்டி. வரலாற்று கதைக்கான வசன உச்சரிப்பை சப்பென்று ஆக்கி கடுப்பேத்துகிறார். மகாராஜாவுக்கான வேடமும் செட்டே ஆகவில்லை. ஒட்டு தாடிகூட மாறுவேட போட்டிக்கு ரெடியான சிறுவர்கள்போல செயற்கையாக இருக்கிறது.
முகலாய ஆட்சி காலத்தில் பல கொடுமைகள் நடந்தது உண்மைதான் என்றாலும் இஸ்லாமிய மன்னர்கள் அனைவருமே காமக் கொடூரர்கள் என்பதுபோல் படம் நெடுக சித்தரித்திருப்பது நெருடல்.
ஆடை, ஆர்ட் டைரக்ஷன், ஒளிப்பதிவு, இசை உள்ளிட்ட தொழில்நுட்பத்திலும் நேர்த்தி இல்லாதது பெருங்குறை.
மதவாதம் மிரட்டிக்கொண்டிருக்கும் இந்த காலக்கட்டத்தில் அதற்கு துணை போவதுபோன்ற வேலையை செய்திருக்கும் இயக்குநர் மோகன் ஜியின் ‘திரெளபதி’யை ஏற்க மறுக்கிறது மனம்.

