திரை விமர்சனம்

‘வங்காள விரிகுடா’ திரை விமர்சனம்!

தூத்துக்குடியில் அரசியல் செல்வாக்குள்ளவர் நாயகன் குகன் சக்கரவர்த்தி. நாட்டுக்கு ராஜா போன்று இருந்தாலும் வீட்டை பொறுத்தவரை கூஜாதான். இன்பமற்ற இல்லறம் இல்லாமல் போனதே என ஏங்கி தவிப்பவருக்கு முன்னாள் காதலியை கண்முன் நிறுத்துகிறது காலம். புதுவாழ்வு பொங்கி வரும் நேரத்தில் தன்னால் கொலை செய்யப்படும் ஒருவர் காதலிக்கு போன் போட்டு மிரட்டும்போது கதையில் ஏற்படுகிறது டிவிஸ்ட். அதெப்படி?.. கொலை செய்யப்பட்டவர் உயிரோடு வந்து பேசமுடியும்? என்ற கேள்வி நாயகனுக்கு மட்டுமல்ல படம் பார்க்கும் நமக்கும்தான் ஏற்படுகிறது. அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களும் அதிரடி திருப்பங்களுமே மிச்ச கதை.

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங்… படிக்கிறதுக்கு மூச்சு வாங்கும் என்பதால் இத்துடன் நிறுத்திக்கொண்டு மேட்டருக்கு வருகிறோம். அதாவது ஹீரோ, இயக்கம், தயாரிப்பு உள்பட 21 பணிகளை தோளில் சுமந்திருக்கிறார் நாயகன் குகன் சக்கரவர்த்தி!

படத்தின் எல்லா ஃபிரேம்களிலும் குகனின் முகம் எட்டிப்பார்க்கிறது. நடிப்பும் எனக்கு சாதாரணம் என்பதுபோல் தயக்கமோ, வெட்கமோ, பயமோ இல்லாமல் பொளந்து கட்டியிருக்கிறார்.

நாயகனின் மனைவியாக, காதலியாக வரும் டிப்லேனாவும் அலினா ஷேக்கும் சிறப்பான தேர்வு. கதையில் இவர்களது கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் இருப்பது ஆறுதல். வையாபுரி, பொன்னம்பலம், வாசு விக்ரம் போன்ற அனுபவ நடிகர்களும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.

பட்ஜெட் படம் என்றாலும் ஒளிப்பதிவு, பின்னணி இசை உள்ளிட்ட டெக்னிக்கல் விஷயத்திலும் கெட்டிக்காரர்தான் என்பதை காட்ட முயற்சித்திருக்கிறார் குகன்.

ஒரே படத்தில் கத்துக்கிட்ட மொத்த வித்தைகளையும் காட்டத் துடிக்கும் குகன் சக்கரவர்த்தியின் ஆர்வம், ஆர்வக்கோளாறாக மாறாமல் இருக்கும்வரை சினிமாவுக்கு நல்லது.

‘வங்காள விரிகுடா’ முழுவதும் குகன் சக்கரவர்த்தி ஆர்வத்தின் அலை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE