‘கருப்பு பல்சர்’ திரை விமர்சனம்!
ஒரு கருப்பு நிற பல்சர் பைக். அதில் யாராவது சவாரி செய்ய நினைத்தால் அவர்களுக்கு ஏழரைதான். குறிப்பாக ஆண் – பெண் ஜோடியாக சென்றால் கூடுதல் ஆபத்து. இந்த பைக்கை வைத்திருக்கும் வில்லன் ஆர்ஜை, வாட்டர் பிஸினஸ் செய்யும் மன்சூர் அலிகானிடம் தள்ளிவிடுகிறார். மன்சூர் அந்த பைக்கை ஹீரோ தினேஷுக்கு விற்கிறார். அந்த பைக் வந்ததிலிருந்து தினேஷுக்கு நடப்பதெல்லாம் ஏழரையாகவே இருக்கிறது. தன் காதலி ரேஷ்மாவை ஏற்றிக்கொண்டு ஆசையாக ரைடு போக நினைக்கும்போது விபத்தில் சிக்குகிறார்கள். ஒரு கட்டத்தில் அந்த பைக்கிற்கு பின்னால் ஒரு கதை இருப்பதை அறிந்து கொள்ளும் தினேஷ், அதற்கான தீர்விற்காக போராடி வெல்வதே கதை.

வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் கெட்டிக்காரரான தினேஷ், இந்த கதையை தேர்வு செய்ததும் சரியான முடிவே. ஆனால் முதல் பாதி படத்தில் தினேஷுக்கு பெரிய முக்கியத்துவம் இல்லாததும் திரைக்கதை தொய்வும் மைனஸ்.
ஆனால் இரண்டாம் பாதி படத்தில் கதையின் போக்கும், கதாநாயகனுக்கான முக்கியத்துவமும் வலுவடைந்து முதல் பாதியின் குறையை தெரியாமல் சரிசெய்திருக்கிறது. குறிப்பாக ஜல்லிக்கட்டு காட்சிகள் சிலிர்ப்பு. காளையை அடுக்கும் வீரனாக தினேஷ் அசத்தியிருக்கிறார்.
ரேஷ்மா, மதுனிகா என இரண்டு நாயகிகள். இருவருமே கண்ணுக்கு லட்சணம். ஆனால் இருவருக்கான முக்கியத்துவமும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. ஒரு டூயட்டில் ரேஷ்மாவின் அழகு ஈர்ப்பு.
டார்க் காமெடி வகையறா கதாபாத்திரம் மன்சூருக்கு. படம் முழுக்க சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறார். வில்லனாக ஆர்ஜையும் தன் பங்கை சரியாக செய்திருக்கிறார். காமெடி என்ற பெயரில் ஃபிராங்க் ஸ்டார் ராகுல் சில இடங்களில் ரசிக்கவும் சில இடங்களில் கடிக்கவும் செய்திருக்கிறார்.

ஜல்லிக்கட்டு காட்சியில் தனது கைவண்ணத்தை காட்டியிருக்கும் ஒளிப்பதிவாளர் பாஸ்கர் ஆறுமுகத்திற்கு பாராட்டுகள். இன்பாவின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
கதை எழுதி இயக்கியிருக்கிறார் முரளி கிரிஷ். இயக்குநர் ராஜேஷ் எம்மின் சீடரான இவர், குருவின் பாதையிலேயே காமெடி தூக்கலான கதையை தேர்வு செய்து இயக்கியிருக்கிறார். மண் சார்ந்த கருவை தொட்டதற்காகவே பாராட்டலாம். ஆனால் திரைக்கதையில் நேர்த்தி இல்லாததால் ஆங்காங்கே படம் போரடிக்கிறது. மற்றபடி குறைந்த முதலீட்டில் குறுகிய நாட்களில் ஒரு படத்தை முடித்திருக்கும் திறமைக்கு சபாஷ்.
‘கருப்பு பல்சர்’ ஒரு ரவுண்ட் போகலாம்!

