அபிஷன் – அனஸ்வரா இடையே மலரும் காதலில் அவ்வளவு வாசனை.. ‘வித் லவ்’ விமர்சனம்!
காலத்தின் பக்கங்களில் எவ்வளவு எழுதினாலும் தீராத ஒன்று காதல். சங்கிலி தொடராய் நீளும்; சந்தனமாய் மணக்கும் காதலை தன் பங்குக்கும் பதிவு செய்திருக்கும் படமே ‘வித் லவ்’.
மனம் ஒத்துப்போனால் திருமணம் செய்துகொள்ளும் திட்டத்தில் சந்திக்கிறார்கள் அபிஷன் ஜீவிந்த் – அனஸ்வரா ராஜன் ஜோடி. அந்த சந்திப்பில் இருவரும் ஒரே பள்ளியில் படித்த சீனியர் – ஜீனியர் என்பது தெரியவருகிறது. பழைய நினைவுகளில் மூழ்கும் இருவரும் பள்ளிப் பருவ காதல் சம்பவங்களை மீட்டெடுக்கையில் உருவாகிறது ஒரு யோசனை. அதாவது மனம் முழுக்க காதல் இருந்தும் அதனை கடைசி வரை சொல்லாமல் இருந்தது நெஞ்சைவிட்டு நீங்காமல் இருக்க, அபிஷனும் அனஸ்வராவும் தங்களின் முன்னாள் காதலியையும் காதலனையும் சந்திப்பது என்று முடிவெடுக்கிறார்கள். இருவரது பயணத்தில் சந்திக்கும் அனுபவங்களும் புரிதல்களும் ஏற்படுத்தும் மாற்றங்களுமே ‘வித் லவ்’வாக மலர்ந்திருக்கிறது.

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் மூலம் சிறந்த இயக்குநராக அடையாளப்பட்ட அபிஷன் ஜீவிந்த் இதில் நாயகனாகவும் தனது திறமையை பதிவு செய்திருக்கிறார். ஹீரோ என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற சினிமா இலக்கணத்தை அவ்வப்போது உடைத்தெறிந்த ஹீரோக்கள் வரிசையில் இதோ.. அபிஷனும் சேர்ந்துகொள்கிறார்.
காதலில் விழுந்து கரைவது, அது கைகொள்ள முடியாமல் போகும்போது துடிப்பது என காதல் உணர்வுகளை சுதி சுத்தமாய் வெளிப்படுத்தி அட போட வைக்கும் ஒரு நடிப்பை கொடுத்திருக்கிறார். இனி ஹீரோ என்ற ரூட்டிலும் தடம் பதிக்க வாழ்த்துகள் அபிஷன் ஜீவிந்த்!
பார்த்தவுடன் மனசில் ஒட்டிக்கொள்ளும் ஓவிய அழகில் அனஸ்வரா ராஜன் ஆஹா! மிக இயல்பாக அபிஷனுடன் பழகி சில விஷயங்களை புரிய வைக்கும் நடிப்பிலும் முன்னாள் காதலனை பார்க்கும் முன் காட்டும் தவிப்பிலும் அனஸ்வரா ஆடியிருக்கும் ஆட்டம் அட்டகாசம்.

அபிஷனின் முன்னாள் காதலியாகவும் அனஸ்வராவின் முன்னாள் காதலராக வருபவர்களின் நடிப்பிலும் எதார்த்தம். பள்ளி ஆசிரியராக சித்தப்பு சரவணனும் சிறப்பு. ஹீரோவின் அப்பாவாக தேனி முருகன், அக்காவாக ஆர்.ஜே. ஆனந்தியும் சில காட்சிகளே வந்தாலும் மனசில் நிற்கிறார்கள்.
காதல் கதை என்றாலே ஒளிப்பதிவு கவிதையாக இருக்கவேண்டும். அப்படி இருந்தாலே கண்களும் மனசும் நிரம்பி படத்தின் பாதி வெற்றியை தீர்மானிக்கும். அதை திறம்பட செய்திருக்கும் ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவுக்கு பாராட்டுகள். உள்ளம் தொடும் பாடல்கள், உருகவைக்கும் பின்னணி இசை இரண்டிலுமே ஈர்க்கும் ஷான் ரோல்டனுக்கு வாழ்த்துகள்!
காதல் உணர்வுகளை கடத்தும் காட்சி அமைப்புகள், உரையாடல்கள், சில இடங்களில் தெறிக்கும் தத்துவங்கள் என எந்த வயதினரையும் கவரும் கச்சித இயக்கத்தில் நெஞ்சம் நிறைகிறார் இயக்குநர் மதன்.
ரயில் பயணத்தில் அபிஷனும் அனஸ்வராவும் தங்கள் பெற்றோர் பற்றி பகிர்ந்துகொள்ளும் விஷயங்களும், கல்யாண வீட்டில் ஆசிரியர் சரவணனின் இன்னொரு பக்கம் தெரிய வரும் இடமும் நெகிழ்ச்சியின் உச்சம்.
ஒரு பூ பூப்பது போன்ற நிகழ்வாக அபிஷன் – அனஸ்வரா இடையே மலரும் காதலில் அவ்வளவு வாசனை. அது.. திரையரங்கை விட்டு வெளிவந்த பிறகும் வீசுவதே ‘வித் லவ்’வுக்கு கிடைத்த வெற்றி!
-thanjai amalan

