திரை விமர்சனம்

 ‘மைலாஞ்சி’ திரை விமர்சனம்!

விமர்சனத்திற்கு முன்பாக மைலாஞ்சியின் பொருள் மருதாணி என்பதை அறிக!

கதை

ஊட்டியை சேர்ந்தவர் கிரிஷா குரூப். சித்தியின் வளர்ப்பில் வளர்ந்தவருக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. இதில் விருப்பமில்லாத கிரிஷா வேறொரு ஃபாஸ்ட் ஃபுட் மாதிரி அவசர அவசரமாக ஒருவனை காதலிக்கிறார். அந்த காதலை அவனிடம் சொல்வதற்கு முன்பே அவன் சென்னைக்கு புறப்படுகிறான்.

இப்போது காட்டுயிர் புகைப்படக்காரரான ஸ்ரீராம் கார்த்திக் பணி நிமித்தமாக ஊட்டிக்கு வருகிறார். வந்த இடத்தில் கிரிஷாவுடன் நட்பாகி அதுவே ஒருதலை காதலாகவும் மாறுகிறது. தனது காதலை சொல்ல நினைக்கும் நேரத்தில் கிரிஷா தனது முந்தையை காதலனுடன் சேர்த்துவைக்கச்சொல்லி ஸ்ரீராமிடம் கேட்கிறார். அந்த முயற்சியில் இறங்கும் ஸ்ரீராம் ஒருவழியாக கிரிஷாவின் காதலனை கண்டுபிடித்து அது கல்யாண ஏற்பாடுவரை போகும் நேரத்தில் கிரிஷாவின் மனதில் மீண்டும் ஏற்படுகிறது காதல் குழப்பம். அது என்ன? ஒரு தலை காதல்களின் முடிவு எதை நோக்கி போகிறது என்பதற்கு விடை சொல்கிறது ‘மருதாணி’.

ஒருதலை காதலால் தடுமாறும் நாயகன் ஸ்ரீராம் கார்த்திக் நடிப்பிலும் தடுமாறுகிறார். பெரும்பாலான காட்சிகளில் நடிப்புன்னா என்ன சார் என்ர ரேஞ்சில் நடித்திருக்கிறார். நாயகி கிரிஷா குரூப்பும் கிட்டத்தட்ட இப்படித்தான் இருந்தாலும் பார்டரில் பாஸ் ஆகிறார். படம் பார்ப்பவகளின் மனசில் மருதாணி போல ஒட்டிக்கொள்ள வேண்டியவரை நேர்த்தியற்ற நடிப்பால் மனசு நிராகரிக்கவே செய்கிறது.

காமெடிக்காக சிங்கம்புலியும் முனீஸ்காந்தும் கால்ஷீட் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் காமெடிதான் இல்லை.

ஊட்டி லொகேஷன்; ஒளிப்பதிவு செழியன் எனும்போது சொல்லவா வேண்டும் படத்தின் பலமாகவும் பெரிய ஆறுதலாகவும் இருப்பது ஒளிப்பதிவுதான்.

இளையராஜா இசை என்றால் நம்ப மறுக்கிறது மனம். காதல் கதைக்கு ரத்தமும் சதையுமாக இருக்கவேண்டிய இசை ஏனோ காணவில்லை. இருந்தாலும் ராஜாவின் இசையில் குரலில் “உன்னை நான் விரும்பினேன்..” பாடல் மட்டும் இதம்.

ஆயிரத்தெட்டு காதல் கதைகள் இருக்கலாம். ஆனால் அதை சொல்லும் விதத்தில் சுவை இருந்தால் நிச்சயம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும். ஆனால் அறிமுக இயக்குநர் அஜயன் பாலாவுக்கு திரைக்கதை வித்தை தெரியாமல் தடுமாறியிருப்பதால் இந்த  ‘மைலாஞ்சி’ சிவக்கவில்லை!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE