‘பூக்கி’ திரை விமர்சனம்!
பூக்கியா.. அப்படினா?.. என்று கேட்பவர்கள் படம் பார்த்து பொருள் அறிக! அதுவரை பொருத்தருள்க!
இப்போ கதைக்குள்ள போகலாமா..
ஓபன் பண்ணினா காதல் கிளிகள் இரண்டு பிரேக் அப் ஆகிறது. அட ஆரம்பமே இப்படியான்னு கேள்வி மேல கேள்வி கேட்டா.. அரசு கொடுத்த அந்த 5000 உங்க கணக்கிலிருந்து காணாமல் போகும்.
பிரேக் ஆன ஜோடி எதுதான் நிம்மதியா இருந்திருக்கு. சரி நிம்மதி கிடைக்க என்ன வழி என்று யோசிக்கும் காதலர்களுக்கு முள்ளை முள்ளாலதான் எடுக்கணும் என்ற யோசனை தோன்ற.. இவன் வேறொரு பெண் மீதும் அவள் வேறொரு பையன் மீதும் காதலில் விழுகிறார்கள். அந்த காதலாவது நிலைக்கிறதா என்பதற்கு விடை சொல்கிறது மிச்ச கதை.

காதலர்களாக வரும் அஜய் திஷன் – ஆர்.கே.தனுஷா இருவருமே சிறப்பான தேர்வு. அதிலும் அஜன் திஷன் அட்டகாசம். காதல், கோபம், சோகம், துள்ளல், துடிப்பு என குட்டி மாதவனாய் மனதில் நிறைகிறார். அனுபவ நடிகரை போன்ற திறமை கொட்டிக்கிடக்கும் அஜய் திஷன் தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க இடத்திற்கு வரலாம்.
நாயகி ஆர்.கே.தனுஷா அழகாக இருக்கிறார். ஆர்ப்பாட்டமின்றி நடிக்கிறார். துள்ளல் நடனத்தில் உள்ளத்தில் இடம் பிடிக்கிறார்.
பாண்டியராஜன், சுனில், லக்ஷ்மி மஞ்சு, இந்துமதி மணிகண்டன், ஆதித்யா கதிர், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, பிக் பாஸ் சத்யா, எம்.ஜெ.ஸ்ரீராம், ராதா, அஷ்வின் ராம், ஷியாரா சர்மி, பிரியங்கா என படத்தில் பல டஜன் ஆர்ட்டிஸ்ட். அவரவர் வாங்கிய சம்பளத்திற்கு குறை வைக்கவில்லை.
தயாரிப்பு, இசை, எடிட்டிங், கொஞ்சுண்டு நடிப்பு என சகலகலா வல்லவராக நினைத்திருக்கும் விஜய் ஆண்டனி அடிக்கடி பாட்டை போட்டு இம்சையும் செய்திருக்கிறார். அடக்கி வாசித்திருக்கலாம்.

இளைய சமுதாயத்தின் பல்ஸ் பிடித்து கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார் புதிய பரிதி. அதில் புதுப்பாய்ச்சல் தெரிந்தாலும் தொய்வான திரைக்கதை அவரது அனுபவமின்மையை அடையாளப்படுத்துகிறது.
ஒளிப்பதிவு, இயக்கம் என இரட்டை சவாரி செய்திருக்கிறார் கணேஷ் சந்திரா. ஒளிப்பதிவில் ஜெயித்திருப்பவர், இயக்கத்தில் கோட்டைவிட்டிருக்கிறார்.
‘பூக்கி’ போங்காட்டம்!

