திரை விமர்சனம்

  ‘ட்ரீம் கேர்ள்’ திரை விமர்சனம்!

சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தில் இருக்கும் நாயகன் – நாயகியின் சந்திப்பு நட்பில் பூத்து காதலாக கனிகிறது. இந்த காதலுக்கு குறுக்கே வில்லனாக வந்து பயமுறுத்துகிறது ஒரு கனவு. அந்த கனவு என்ன? காதலர்களின் சினிமா கனவு நனவாகிறதா? இதயங்களுக்குள் பூத்துக்குலுங்கிய காதலின் முடிவு இன்பமா? துன்பமா? என்ற கேள்விகளுக்கு விடை சொல்லும் படமே ட்ரீம் கேர்ள்.

ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான ‘மீரா’ என்ற அற்புதமான காதல் படத்தின் கதை, வசனகர்த்தாவான எம்.ஆர்.பாரதி, கதை எழுதி இயக்கி இருக்கும் படம் இது.

இந்த பிரபஞ்சத்தில் இன்னும் எழுதி தீர்க்கமுடியாத காதல் பக்கங்களில் எம்.ஆர்.பாரதி தன் பார்வையில் காதலை பந்தி வைத்திருக்கிறார்.

நாயகனாக நடித்திருக்கும் ஜீவா, தனது கதாபாத்திரத்தை உணர்ந்து திறம்பட செய்திருக்கிறார். நடிப்பில் எதார்த்தமும் இயல்பும் இருக்கிறது. எனினும் க்ளோஸ் ஷாட்களில் முகபாவனைகளில் இன்னும் கொஞ்சம் உயிர் கொடுத்தால் தமிழ் சினிமா இவரையும் கவனிக்க வாய்ப்பிருக்கிறது.

நாயகி ஹரிஸ்மிதாவும் நல்ல தேர்வு. படத்திற்கு இவரது கதாபாத்திரமும் பலம் சேர்த்துள்ளது. மாடர்ன் உடையில் மனசை அள்ளுகிறார். இவர்கள் தவிர பிரபு சாஸ்தா, துருவன், இந்திரா உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் தங்கள் பங்கை சரியாக செய்துள்ளனர்.

இளமாறன் இசையில் ஒரு பாடல் தேன். பின்னணி இசையிலும் கதைக்கு பொருத்தமான நேர்த்தி நிறைவு தருகிறது.  ஒளிப்பதிவாளர் சாலமன் போவாஸ் ஒளிப்பதிவில் ஊட்டியின் அழகு பார்க்க பார்க்க பியூட்டி.

அழகான காதல் கதையை கையில் எடுத்த இயக்குநர் அதை சொன்ன விதத்தில் இதயம் தொடாததே படத்தின் குறை. அதனை சரி செய்திருந்தால் இந்த காதலர் தினத்தின் சிறந்த பரிசாக அமைந்திருக்கும் இந்த ‘ட்ரீம் கேர்ள்’.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE