திரை விமர்சனம்

‘லவ் ஷேர் சப்ஸ்கிரைப்’ ( LSS ) திரை விமர்சனம்!

நாயகன் ஆதவ் கிருஷ்ணாவுக்கும் நாயகி சிம்ரனுக்கும் ஒரே கல்லூரியில் படிக்கும்போது காதலாகிறது. ஆதவ் கிருஷ்ணாவை பொறுத்தவரை படிப்பு… படிப்பு.. மேலும் படிப்பு என சுத்த தங்கமாய் இருக்கிறார். அதுவே சிம்ரனின் காதலை மேலும் வலுவாக்குகிறது. ஆனால் மகளின் காதலுக்கு குறுக்கே வில்லனாக நிற்கிறார் சிம்ரனின் பணக்கார தந்தை. அதேசமயம் பணக்கார வீட்டு பெண்ணாக இருந்தாலும் சிம்ரனின் குணத்திற்காக அவரை மருமகளாக ஏற்றுக்கொள்ள சம்மதிக்கின்றனர் ஆதவ் கிருஷ்ணாவின் பெற்றோர்.

இந்தச் சூழ்நிலையில் தன் சிறுவயதிலேயே வீட்டைவிட்டு பிரிந்து சென்ற தாயை சந்திக்க காசிக்கு செல்கிறார் சிம்ரன். போன இடத்தில் அவர் மாயமாகிறார். அன்புக் காதலியை தேடி அலையும் ஆதவ் கிருஷ்ணா அவரை கண்டுபிடித்தாரா? காதல் கைகூடியதா? என்ற கேள்விக்கு விடை தருகிறது க்ளைமாக்ஸ்!

கேமராவுக்கு புதுசு என்ற பயமே இல்லாமல் இயல்பாக நடித்துள்ளார் ஆதவ் கிருஷ்ணா. பெற்றோர் சொல் தட்டாத பிள்ளையாக, பொறுப்பை உணர்ந்து படிக்கும் மாணவனாக, எந்த கெட்ட பழக்கத்திற்கும் அடிமை ஆகாத நல்ல இளைஞனாக எல்லோர் மனதிலும் பதியும் கதாபாத்திரத்தில் பாஸ்மார்க் வாங்கும் ஆதவ் கிருஷ்ணாவுக்கு வாழ்த்துகள்!

இடையழகி சிம்ரன் போலவே ஈர்க்கிறார் இந்த புது சிம்ரனும். கவர்ச்சி ஏரியாவில் அடித்து ஆட நான் ரெடி என்பதுபோல கிளர்ச்சியும் ஏற்படுத்துகிறார். நடிப்பிலும் துடிப்புக் காட்டுவது அவருக்கான வாய்ப்புகளை குவிக்கும்.

நாயகனின் தந்தையாக படவா கோபி பட்டும் படாமல் ஆர்வமே இல்லாததுபோல் நடித்துள்ளார். அம்மா கேரக்டரில் வினோதினி வழக்கம்போலவே சிறப்பு சேர்த்திருக்கிறார். தம்பியாக வரும் குட்டி பையனுக்கு கொஞ்சம் ஓவர் டோஸ்தான்.

சிம்ரனின் தந்தையாக வருபவர் அஜித்துக்கு டூப் போட்டால் அசல் போலவே இருப்பார். அந்த அளவுக்கு அஜித் சாயலில் இருப்பவருக்கு நடிப்பும் வருவது சிறப்பு. ஜாவா சுந்தரேஷன் அவ்வப்போது சிரிக்கவைக்கிறார்.

என்.எஸ்.சதீஷ்குமாரின் ஒளிப்பதிவு, அஸ்வமித்ரா இசை உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் ஓகே ரகம். அசோக் அமிர்தராஜின் கதை மற்றும் வசனங்களில் சினிமாத் தனம்ம் எட்டிப்பார்க்காதது ஆறுதல். திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் ஆர்.மகாலக்‌ஷ்மி முருகன், திரைக்கதையை இன்னும் விறுவிறுப்பாக அமைத்திருந்தால் எல் எஸ் எஸ் எல்லோரையும்  ‘லைக்’ பண்ண வைத்திருக்கும்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE