வசனம் இல்லா ‘காந்தி டாக்ஸ்’ : கலக்கும் விஜய்சேதுபதி – அரவிந்த்சாமி
பேசும் படங்கள் ஆரம்பித்து நூற்றாண்டை தொடவிருக்கும் இந்தக்காலக்கட்டத்தில் வசனமே இல்லாத சவால் முயற்சியை கையில் எடுத்து ‘காந்தி டாக்ஸ்’ என்ற வசனமில்லா மௌனப் படத்தை தயாரிக்கிறது ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம். ப்ளாக் காமெடி ஜானரில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகும் படத்தில், விஜய் சேதுபதி, அதிதி ராவ் ஹைதாரி மற்றும் அரவிந்த் சாமி இணைந்து நடிக்கின்றனர்.
ஜீ ஸ்டூடியோஸ் தொடர்ந்து மாறுபட்ட களங்களில் வித்தியாசமான திரைப்படங்களை தந்து, இந்தியத் திரையுலகில் தனி முத்திரை பதித்து வருகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ப்ரோமோ வீடியோவை பார்வையாளர்களுக்குக் கொடுத்தது. ஒரு மௌனப் படமாக இருப்பதால், ‘காந்தி டாக்ஸ்’ அனைத்து மொழி தடைகளையும் உடைத்து, மறந்து போன கடந்த கால மௌனப் பட சகாப்தத்தை – நிகழ்காலத்தில் பார்வையாளர்களுக்கு தரும் ஒரு பேரனுபவமாக இருக்கும் என்பது உறுதி.
படம் பற்றி இயக்குநர் கிஷோர் பி பெலேகரிடம் கேட்டபோது, “ மௌனப் படம் என்பது வித்தை காட்டும் ஒரு செயல் அல்ல இது கதைச் சொல்லலின் ஒரு வடிவம். பேசும் மொழியான வசனத்தை முற்றிலும் நிராகரித்துவிட்டு உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது கடினமானது மட்டுமல்ல, சுவாரஸ்யமும் சவாலானதும்கூட” என்றார்.
Zee Studios ன் CBO, ஷாரிக் படேல் கூறுகையில், “இதன் கதை தனித்துவமானது, அனைவரும் தங்கள் வாழ்வுடன் தொடர்புபடுத்தக்கூடியது. பலமான கமர்ஷியல் அம்சங்களுடன் நல்ல பொழுதுபோக்கை இக்கதை கொண்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான், விஜய் சேதுபதி மற்றும் அரவிந்த் சுவாமி ஆகியோருடன் ஒரு மௌனப் படத்தில் இணைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த புது முயற்சி எங்களுக்கு மிகவும் மிகப்பெரிய மகிழ்ச்சியையும் புத்துணர்வையும் தந்துள்ளது. அடுத்த ஆண்டு படம் வெளியாகும்”என்றார்.