‘வடம்’ திரை விமர்சனம்!
தமிழ் சினிமாவில் ஜல்லிக்கட்டு போட்டியை மையமாக கொண்ட படங்கள் நிறைய வந்திருந்தாலும் மஞ்சுவிரட்டை அடிப்படையாக கொண்ட படங்கள் வந்ததில்லை அந்த குறையை போக்கும் படமாக வந்திருக்கும் படம் ‘வடம்’.
ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டுக்கு வித்தியாசம் தெரியாதவர்களுக்காக சிறு விளக்கம்… வாடி வாசலிலிருந்து அவிழ்த்துவிடப்படும் காளையும் அதனை அடக்க நினைத்து களத்தில் நிற்கு இளம் காளையர்களும் தங்களின் வீரம் காட்டும் போட்டியே ஜல்லிக்கட்டு.
பெரிய மைதானத்தில் நீண்ட கயிறு கட்டப்பட்டு (வடம்) அவிழ்த்துவிடப்படும் காளைகளை இளம் வீரர்கள் எதிர்கொள்ளும் வீர விளையாட்டே மஞ்சுவிரட்டு. இனி படத்தின் கதையை பார்க்கலாம்..

பாண்டி முனி என்ற மஞ்சுவிரட்டு காளையை வளர்த்துவருகிறார் விமல். அடிமாட்டுக்காக போயிருக்க வேண்டிய அந்த காளையை ஆசையோடும் அன்போடும் வளர்த்ததால் விமலும் – பாண்டி முனியும் அண்ணன் தம்பி என்று சொல்லுமளவிற்கான பாச பந்தம்! இன்னொரு பக்கம் வடமஞ்சு வெற்றியைக் கெளரவமாக எண்ணும் வில்லன் நட்டி. பாண்டி முனியிடம் நட்டி காளையின் பாட்சா பலிக்காததால் அவமானத்தை சந்திக்கிறார். அதுவே இருவருக்கும் இடையில் மோதலை வளர்க்கிறது. விமலையும் அவரது காளையையும் போட்டுத்தள்ள திட்டமிடுகிறார் நட்டி. நட்டியின் சதியை விமல் முறியடித்தாரா இல்லையா என்பதற்கு விடை சொல்கிறது க்ளைமாக்ஸ்!
முப்பது நாற்பது வருடங்களுக்கு முந்தைய கிராமத்து நாயகன் கதாபாத்திரத்தில் விமல் பொருந்தியிருக்கிறார். காளையை அடக்கும் ஹீரோக்களை பார்த்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு, களத்தில் இறங்கிய காளையை ஜெயிக்கவைக்க நெஞ்சு நிமிர்த்தும் விமலின் கேரக்டர் புதுசாகவே இருக்கும். காதல் கதையாக இருந்தாலும், ஆக்ஷன் படமாக இருந்தாலும் அலட்டிக்கொள்ளாமல் நடிக்கும் விமல் இதிலும் மருத்துக்கூட மாற்றமில்லாமல் நடித்திருக்கிறார்.
வழக்கமான வில்லனாக நட்டி தன் இருப்பை தக்கவைத்திருக்கிறார். பாலசரவணனிடம் கலகலப்பு மிஸ்ஸிங். பளிச்சிடும் விஷயங்கள் வராமல் போயிருப்பது ஏமாற்றம்.

நாயகி சன்ஷ்கா ஸ்ரீ லட்சணமாக இருக்கிறார். அந்தகால மதுரை பட நாயகி அசைமென்டை அழகாக செய்து நகர்ந்திருக்கிறார். சீரியஸான சில இடங்களில் செயற்கையாகவும் நடித்து ஏமாற்றுகிறார். ஊர்த் தலைவர்களாக நரேன், மதுசுதன் ராவ் ஆகியோர் டெம்ப்ளேட் ரூட்டையே பிடித்துப் பயணித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ். குமார், களத்தில் துள்ளும் காளைகளையும் கச்சிதமாக ஃபிரேமுக்குள் புகுத்தியிருக்கிறார்.
டி.இமான் இசையில் பாடல்களின் மேள தாள பீட்களில் நவீன டச் மிஸ்ஸிங்! அதே சமயம், பின்னணி இசையில், ஹிரோயிச சண்டைகளுக்கும், அன்னநடைக்கும் மாஸும் ஃபயரும் மூட்டத் தவறியிருக்கிறார்.
வடமஞ்சு போட்டிகளுக்காக காளையை ஆசையாக வளர்க்கும் நாயகனுக்கும், வடமஞ்சு வெற்றியைக் கெளரவமாக எண்ணும் வில்லனுக்கும் இடையேயான மோதல் கதையைச் சொல்லியிருக்கும் இயக்குநர் கேந்திரன். திரைக்கதையில் கூடுதல் சிரத்தை எடுத்திருந்தால் எல்லோரையும் ஈர்க்கும் படமாக மாறியிருக்கும் இந்த ‘வடம்’.

